எளிய மனிதர்களை, பெண்களை பட்டம் பெற வைத்தது திராவிட இயக்கம்! கல்லூரி பட்டமளிப்பு விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் பேச்சு
பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆறாவது பட்டமளிப்பு விழா கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக விழா அரங்கில் நடைபெற்றது.
நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன், பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுகளில் வெற்றி பெற்று இளநிலை மற்றும் முதுநிலை பட்டம் பெற தகுதியான மாணவர்களுக்கு பட்டச் சான்றிதழை வழங்கி பட்டமளிப்பு விழா பேருரை நிகழ்த்தினார்.
அவர் தமது உரையில்,
"எளிய மனிதர்களும் கல்வி கற்க வாய்ப்பளிப்பது தமிழ்நாடு. அதற்குக் காரணம் நீதிக்கட்சியும் அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டை வழி நடத்திய திராவிட இயக்கங்களும் தான்.
மருத்துவம் போன்ற பட்டப்படிப்புகளை படிப்பதற்கு சம்ஸ்கிருத மொழி தெரிந்திருப்பது அவசியம் என்ற நிலையை மாற்றியது நீதி கட்சி.
இன்று பேராவூரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் முதல் பட்டதாரிகளாக பட்டம் பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
உயர் கல்விக்குப் பிறகு பட்டம் மேற்படிப்புகளை தொடர்வது அல்லது உரிய வேலை வாய்ப்புகளை பெறுவது மிகவும் அவசியம். அதற்குரிய வாய்ப்புகளை கல்லூரி உங்களுக்கு வழங்கி உள்ளது.
சென்னை கோவை போன்ற பெரு நகரங்களில் உள்ள கல்லூரிகளை போல இங்கும் உங்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வளாக நேர்காணல் மற்றும் கலந்தாய்வு நடத்தப்பட்டு வேலை உறுதியளிக்கப்படுவது மகிழ்ச்சியாக உள்ளது.
கூரை குடிசையில் பிறந்த நான் பட்டம் பெற்று உயர் கல்வித் துறை அமைச்சராக உயர்வதற்கு காரணமாக அமைந்தது திராவிட இயக்கங்களும் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் போன்றவர்களின் சமூக நீதி சிந்தனை தான்.
சிறப்பாக பணியாற்றும் கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்"
என்றார்.
விழாவில் 299 மாணவர்கள் இளநிலை பட்டமும் 17 மாணவர்கள் முதுநிலை பட்டமும் பெற்றனர்.
வாழ்த்துரை வழங்கிய பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் கல்லூரிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் அமைத்து தரவும், கூட்ட அரங்கம் அமைத்திடவும் பேராசிரியர் பணியிடங்களை நிரப்பித் தந்திடவும் வேண்டும் என்று உயர் கல்வித் துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்தார்.
கல்லூரியின் துறை தலைவர்கள் முனைவர் சி.ராணி, முனைவர் ர.ராஜ்மோகன், முனைவர் ந.பழனிவேல், முனைவர் அருண்மொழி, முனைவர் ஜமுனா, முனைவர் நந்தினி, மோகனசுந்தரம், கஸ்தூரி ஆகியோர் பட்டம் பெற்றிட தகுதி வாய்ந்த மாணவர்களை பட்டியலிட்டனர்.
முன்னதாக கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.திருமலைச்சாமி வரவேற்று அறிக்கை வழங்கினார்.
நிகழ்வில் கல்லூரி கல்வி இணை இயக்குனர் முனைவர் து.ரோசி, பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள், ஊர் பெரியவர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், வருவாய் வட்டாட்சியர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் செய்தியாளர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலும் நிறைவாக நாட்டு பண்ணும் பாடப்பட்டது.





கருத்துகள்
கருத்துரையிடுக