"மாரத்தான் மனிதர்கள்" நம்பிக்கை விளக்கு

 


முடச்சிக்காடு வெ. நீலகண்டன் எழுத்தில் உருவான "மாரத்தான் மனிதர்கள்" நூல் வாழத் துடிக்கும் மனிதர்களுக்கான நம்பிக்கை விளக்காக சுடர் விடுகிறது.


சாமானிய மனிதர்களின் சரித்திரத்தை பதிவு செய்திருக்கும் நூல் "மாரத்தான் மனிதர்கள்".


சலிப்புத் தட்டாத தொடர் பயணம் ஒருவரின் வெற்றிக்கு வித்தாக அமைந்து விடுகிறது என்பதை பக்கத்துக்கு பக்கம் பதிவு செய்து வைத்திருக்கிறது இந்த நூல்.


"மாற்றத்திற்காக தொடர்ந்து களமாடும் மனிதர்கள்" என்ற துணை தலைப்போடு விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ள இந்த நூல் பிடிப்பற்ற வாழ்க்கையில் இருந்து இலக்கு நிறைந்த வாழ்க்கைக்கு நம்மை அழைத்துச் செல்கிறது.


தனது எழுத்து மூலம் ஏணிப்படியாய் நிற்பவர்களின், தியாக வாழ்வை திரையிட்டு காட்சிப்படுத்துகிறார் நீலகண்டன்.


ஏமாளிகளாகவும் கோமாளிகளாகவும் சமூகத்தால் கணிக்கப்படும் எளிய மனிதர்களின் பொருள் நிறைந்த அற வாழ்வை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் உழவாரப் பணியை செம்மையாய் செய்திருக்கிறார் நண்பர் நீலகண்டன்.  


தன்னை மறந்து சமூகமாய் வாழ்பவர்களை மட்டுமே துறவிகள் என்கிறது தமிழ்.  துறந்தாரின் பெருமை பேசுகிறது இந்த நூல்.


உலகம் நிலை பெற்று இயங்க உரமாக விளங்கும் மனிதர்களின் ஒளியை ஏற்றி சுடர் விடுகிறது இந்த நூல்.


நம்முடைய இயக்கத்திற்கு அரணாக நமக்கு அருகிலேயே இருக்கும் இந்த 31 மகத்தான மனிதர்களின் வாழ்வியல், இசை வாழ்வின் இருப்பிடத்தை நமக்கு காட்டுகிறது.


"வாழ்வை வாழ்வது எளிது" ஆனால் நமது சமூகம், வாழத் தயங்குகிறது.  தயக்கத்தை உடைத்து வாழத் தகுதிப்படுத்தும் பணியை இந்த நூல் செய்திருக்கிறது. 


வெ.நீலகண்டனுக்கும் விகடனுக்கும் வாழ்த்துக்கள்.


வாங்கி வாசித்து பாருங்கள்.  உங்கள் உள்ளம்  விளைச்சலுக்கான வித்துக்களை தாங்கி நிற்கும் நன்னிலமாக மாறி நிற்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர்களையும் மாணவர்களையும் வதைக்கும் பணியிடைப் பயிற்சி

பொலிவிழந்து வரும் மண் பானை தொழில்

பால்குடம் எடுத்தல் (பாலாபிசேகம்) ஏன்?