எளிமையான உடற்பயிற்சி வலிமையான உடல்! - வழிகாட்டுகிறார் தோப்புக்கரணபயிற்சியாளர் மணிகண்டன்



கோவில் வாசல், கூட்ட அரங்கம், பள்ளி வளாகம், விளையாட்டு மைதானம் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்து தனது பயிற்சிக் களத்தை விரிவுபடுத்தி வருகிறார் ஜெ. மணிகண்டன். 


கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக பேராவூரணி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் பெரியவர்களுக்கும் உடல் நலம் பேணும் மிகப் பழமையான கலையை கற்றுக் கொடுத்து வருகிறார் மணிகண்டன்.


பள்ளிகளில் அதிகமாக குறும்புத்தனம் செய்யும் மாணவர்களையும் பாடங்களை சரிவர கவனிக்காத மாணவர்களையும் தண்டிப்பதற்காக ஆசிரியர்கள் கைக்கொண்ட தமிழர்களின் மிகப் பழமையான முறைதான் தோப்புக்கரணம். உக்கி போடுதல் என்றும் அழைப்பர். 


நல்ல காற்றோட்டம் உள்ள இடத்தில் தரை விரிப்பின் மீது நேராக நின்று கொண்டு இடது கை கட்டைவிரல் மற்றும் சுட்டுவிரல் கொண்டு வலது காதை பிடித்துக் கொள்வது, வலது கை கட்டைவிரல் மற்றும் சுட்டுவிரல் கொண்டு இடது காதை பிடித்துக் கொள்வது பிறகு பார்வையை நேராக வைத்துக் கொண்டு உட்கார்ந்து எழுதல் இதற்குப் பெயர்தான் தோப்புக்கரணம் என்று அழைப்பர்.  


இந்த எளிமையான உடற்பயிற்சியைதான் மாணவர்களை தண்டிக்க பயன்படுத்தினார்கள் ஆசிரியர்கள்.  இந்த பயிற்சியை மாணவர்கள் மேற்கொள்வதால்  உடலும் மனமும் சேர்ந்து பலம் பெறும் என்கிறார்கள் உடற்பயிற்சி வல்லுநர்கள்.


பெரும்பாலான நற்பழக்கங்கள் மதவாத சத்திகளால் மாண்டு போய்விட்டது. தமிழர்களின் ஒப்பற்ற ஓகக் கலையும் மதவாதிகளால் திட்டமிட்டு களவாடப்பட்டு அந்தக் கலையின் அறிவியல் தன்மை அழிக்கப்பட்டுள்ளது.  சமஸ்கிருதப்படுத்தப்பட்ட ஓகக் கலையின் உத்திகள் உருமாற்றம் அடைந்து விட்டன.


அறிவியல் தன்மையற்ற எந்த கலையும் மூடநம்பிக்கைக்குள் எளிதில் சிக்கிக் கொள்ளும்.


அறிவிற் சிறந்த சித்தர்களால் கண்டுபிடிக்கப்பட்ட உடற்பயிற்சி முறைகள் மதவாத சக்திகளால் மூடநம்பிக்கைகளாக மாற்றப்பட்டன.   


தமிழ்நாட்டில் ஏற்பட்ட பகுத்தறிவு சிந்தனைகளால் தமிழர்களின் பழங்கால பழக்கங்கள் அறிவார்ந்த வகையில் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. 


ஜெ. மணிகண்டன் பேராவூரணி பகுதியில் சுயமாக தொழில் செய்து வருபவர்.  


தற்செயலாக தான் செய்து வந்த தோப்புக்கரண பயிற்சி, தன் உடல்நிலையில் ஏற்படுத்திய பெரும் மாற்றத்தை கண்டு வியந்த இவர் இந்தப் பயிற்சி குறித்து தொடர்ந்து இணைய வழியில் தேட தொடங்கினார்.  இதுகுறித்து வெளிவந்த புத்தகங்களை படித்து, ஓகப் பயிற்சியாளர்களிடம் உரிய ஆலோசனைகளைப் பெற்று முறையாக பயிற்சியை தொடர்ந்தார்.  


நாளொன்றுக்கு பத்து எண்ணிக்கையில் தொடங்கிய இவர் தற்போது 100 கற்கும் அதிகமான எண்ணிக்கையில் தோப்புக்கரணம் போட்டு உடலையும் மனதையும் மலர்ச்சியோடு வைத்திருக்கிறார். 


தான் பெற்ற பயிற்சியை தரணியெங்கும் பரப்ப தனி ஒரு மனிதராய் களத்தில் நிற்கிறார்.  


மனிதக் கூட்டம் கூடும் இடங்களில் எல்லாம் வாய்ப்பு கேட்டு இந்த பயிற்சி குறித்து விளக்கம் கொடுக்கிறார்.  


ஐந்திலிருந்து 15 நிமிடங்களுக்குள் பயிற்சி கொடுத்து பார்வையாளர்களை பயிற்சி எடுக்க வைக்கிறார்.  


பள்ளிகளில் இவர் கொடுக்கும் தோப்புக்கரண பயிற்சியால் மாணவர்கள் பெரும் பயன் பெற்று வருகிறார்கள்.  


பள்ளிகளில் இவர் வழங்கும் பயிற்சியை 10 நிமிடங்களுக்குள் கற்றுக்கொண்டு நூற்றுக்கணக்கில் கூடியிருக்கும் மாணவர்கள் ஒரே சீராகப்  பயிற்சி செய்வது பார்வையாளர்களை பரவசப்படுத்துகிறது. 


பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி பகுதிகளில் ஆங்காங்கே இவர் தோப்புக்கரண பயிற்சிக்காக தெருமுனை பரப்புரையையும் மேற்கொண்டு வருகிறார்.


சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சிறு சிறு விதிமுறைகளை பின்பற்றி இந்தப் பயிற்சியினை மேற்கொள்ளலாம் என கூறும் இவர் கருவுற்றிருக்கும் பெண்கள், மருத்துவர்கள் ஆலோசனை இன்றி இந்தப் பயிற்சி மேற்கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்துகிறார்.


தோப்புக்கரணத்திற்கு ஒரு பயிற்சியா? என்று கேள்வி கேட்கும் நபர்களிடம் ஒரு பயிற்சி கையேடு வழங்கி பார்த்துப் முயற்சி செய்யப் பழக்குகிறார்.  


நற்சிந்தனை, நல்ல உடல் நலம் கொண்டு நீண்ட நாள் நலமோடு வாழ்ந்திட வழிகாட்டும் மணிகண்டன் அவர்களை இப்பகுதி மாணவர்கள் தோப்புக்கரண ஆசான் என்று மகிழ்வோடு அழைக்கின்றனர்.  


வருமுன் காப்பதே வாழ்க்கையை மகிழ்வோடு அனுபவிக்க உதவும்.  நோய் வரும் முன் உடல் நலம் பேணுவோம்.

தோப்புக்கரண பயிற்சியாளர் 

திரு மணிகண்டன் அவர்களோடு 

பேச 98426 93162



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

பேராவூரணியில் மகளிர் நாள் விழா

பேராவூரணி வட்டாட்சியருக்கு வாழ்த்து தெரிவித்த தமிழ் வழி கல்வி இயக்கம்