வளர்க்க வேண்டியது மதங்களை அல்ல! சமய நல்லிணக்கத்தை!


 பேராவூரணி பேரூராட்சி,  நகர் பகுதியில் அமைந்திருக்கும் பெரிய பள்ளிவாசல் சமய நல்லிணக்கத்திற்குச் சான்றாக விளங்கி வருகிறது.

சமயச் சார்பின்மை என்பது தமிழர்களின் மிகத் தொன்மையான சிந்தனை. வள்ளுவர் தொடங்கி வள்ளலார் வரை மெய்யியலாளர்கள் போற்றி வளர்த்த பண்பாடு.  


கவிஞர் கண்ணதாசன் எழுதி, திருச்சி கலைக்காவிரி வெளியிட்ட "இயேசு காவியம்" நூலின் பின் அட்டைப் பக்கத்தில் திருநீரும் குங்குமமும் அணிந்து கண்ணதாசன் காட்சி தருவார். இன்றும் இயேசு காவியம் பதிப்பிக்கப்படும் பொழுதெல்லாம் கண்ணதாசன் உருவப்படம் அப்படியே அச்சேற்றப்படுகிறது. இதுதான் சமய சமூக நல்லிணக்கம். தமிழர்களின் ஆதி பண்பாடு.  


அந்தப் பண்பாடு இன்றளவும் பின்பற்றப்பட்டு வருகிறது. பேராவூரணி பெரிய பள்ளிவாசலில் நாளெல்லாம் உடல் வருத்தி, நோன்பு இருந்து, உலக நலம் வேண்டி நிற்கும் இசுலாமிய சமயத்தைப் பின்பற்றும் உறவுகளுக்கு பிற சமயத்தைச் சார்ந்தவர்கள் நோன்பு துறப்பு (இஃப்தார்) விருந்து வழங்கி வருவது போற்றத்தக்கது.  


பேராவூரணி பகுதியைச் சேர்ந்த சமய நல்லிணக்கத்தை விரும்பும் சான்றோர்களும், வணிகர்களும், அரசியல் இயக்கங்களைச் சார்ந்தவர்களும் சமய வேறுபாடு இன்றி இஃப்தார் விருந்து வழங்குவதும், ஒன்றாக அமர்ந்து விருந்து உண்பதும் வழக்கமாகி வருகிறது. நோன்பு மேற்கொள்ளும் ரமலான் மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் இந்நிகழ்வு நடைபெற்று வருகிறது . 


அன்புத்தங்கை முனைவர் சண்முகப்பிரியா முன்னெடுப்பில் இந்த ஆண்டு நோன்பு துறப்பு இஃப்தார் நிகழ்ச்சியில் பேராவூரணி பெரிய பள்ளிவாசலில் கலந்து கொண்டது பெரு மகிழ்வு‌. நிகழ்வில் தங்கையின் குடும்பத்தினர் கொன்றை சிவக்குமார், மணிகண்டன், திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட அமைப்பாளர் சித. திருவேங்கடம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.  


தமிழர்களின் சமயச்சார்பற்ற சமரச சுத்த சன்மார்க்க நெறியை சாட்சியாக சமூகத்திற்கு காட்சியாக்குவோம். இந்தியாவில் பரப்பப்பட வேண்டியது மதங்களை அல்ல, சமய நல்லிணக்கத்தை பேணும் சமரச சுத்த சன்மார்க்கத்தை.   


நம்பிக்கையுடன்,

ஆசிரியர்,

மெய்ச்சுடர்.








கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

பேராவூரணியில் மகளிர் நாள் விழா

பேராவூரணி வட்டாட்சியருக்கு வாழ்த்து தெரிவித்த தமிழ் வழி கல்வி இயக்கம்