விளிம்பு நிலை மாணவர்கள் வாய்ப்புகளைப் பயன்படுத்தி உயர்ந்த பின் ஒழுக்கத்தை கைவிடக் கூடாது - தமிழ்நாடு அறக்கட்டளை முதன்மை அதிகாரி பேச்சு
இராமநாதபுரம், மாவட்ட அரசு இசைப்பள்ளி மாணவர்களுக்கு தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில் இசைக்கருவிகள் மற்றும் மேடைச் சீருடை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியர் சரவண மாணிக்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பயனாளி மாணவர்களுக்கு நலத்திட்ட பொருட்களை வழங்கி சிறப்புரை நிகழ்த்தினார் அறக்கட்டளையின் முதன்மை செயல் அலுவலர் முனைவர் க.இளங்கோ.
அவர் தமது உரையில்,
"தமிழ்நாடு அரசின் பல்வேறு உயர் பொறுப்புகளில் இருந்த நான், வாய்ப்புகள் மறுக்கப்படும் மக்களுக்கு உதவிடவே இப்பணியை ஏற்றுக் கொண்டேன்.
தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் உள்ள பள்ளிகளை தேர்வு செய்து அந்தப் பள்ளிகளில் படிக்கும் அதிக கவனம் தேவைப்படும் மாணவர்களின் நலனுக்காக கூடுதல் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள். இந்த மாவட்டத்தில் தேவிபட்டினம், உப்பூர் மேல்நிலைப் பள்ளிகளில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
பார்வைத் திறன் குன்றிய மாணவர்களுக்கான பள்ளிகளில் அவர்களுக்கு தேவையான கருவிகளைப் பெற்றுத் தருகிறோம்.
மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களின் நலனுக்கான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
குறிப்பாக பெற்றோர்களை இழந்த பிள்ளைகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்திட தொடர்ந்து செயலாற்றி வருகிறோம்.
நேரடியாக மாணவர்கள் பயன்பெறும் வகையில் திட்டங்களை செயல் படுத்துகிறோம்.
அந்த வகையில் மாவட்ட இசை பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் நிலையை தொடர்ந்து கவனித்து வருகிறேன். எளிய குடும்பத்துப் பிள்ளைகளாக இசையை தேர்வு செய்து பயின்று வரும் இவர்களின் தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்காக இசைப் பள்ளிகளை தேர்வு செய்து அங்கு பயிலும் மாணவர்களுக்கு இசைக்கருவிகள் மற்றும் மேடை சீருடைகளை வழங்கி வருகிறோம்.
அமெரிக்க நாட்டில் நடைபெற்ற தமிழ்நாடு அறக்கட்டளையின் 50வது ஆண்டு பொன்விழா நிகழ்வில் தமிழ் மண்ணின் கலைகள் நிகழ்த்தப்பட்டன.
மண்ணின் கலைகளை பாதுகாக்க இதுபோன்ற நிகழ்வுகளை நாங்கள் நடத்துகிறோம். கலைகள் மூலம் உயர்ந்த நிலையை அடையும் மாணவர்கள் தங்கள் ஒழுக்கத்தை எந்நாளும் காத்துக் கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டின் இசை, நடனம் போன்ற கலைகள் தமிழ்நாட்டை தாண்டி எல்லா நாடுகளிலும் மக்களால் விரும்பி கற்க படுகிறது. இங்கு உள்ள தமிழர்களிடம் அதன் பெருமையை எடுத்துச் செல்ல வேண்டும்" என்றார்.
முன்னதாக இசை பள்ளி மாணவர்களின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்வில் அறக்கட்டளை திட்ட ஒருங்கிணைப்பாளர் நா.வெங்கடேசன், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
மாணவர்கள் அறக்கட்டளைக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக