மாணவிகளின் அணிவகுப்பு, மாணவர்களின் சிலம்பம் பேராவூரணி அரசு கல்லூரியில் சிறப்பாக நடைபெற்ற விடுதலை நாள் விழா!

பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விடுதலை நாள் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.  


இதுவரை நடைபெறாத வகையில் மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை கல்லூரி முதல்வர் முனைவர் திருமலைச்சாமி ஏற்றுக்கொண்டார் கொண்டார்.  


முன்னதாக கல்லூரி முதல்வரை சந்தித்த மாணவிகள், ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் மட்டுமே அணிவகுப்பு நிகழ்வை நடத்துகிறார்கள், மாணவிகள் நடத்தக் கூடாதா? என்று கேட்க கல்லூரி முதல்வர், மகிழ்ச்சியுடன் அனுமதி அளித்துள்ளார்.  


பேராவூரணி அரசு கல்லூரி வரலாற்றில் மாணவிகளின் அணிவகுப்பு நிகழ்வு மாணவிகள் மத்தியில் மகிழ்ச்சியையும் தன்னம்பிக்கையும் ஏற்படுத்தியுள்ளது. 


இதுகுறித்து இரண்டாம் ஆண்டு இளநிலை கணிப்பொறியியல் படிக்கும் கல்லூரி மாணவி சந்தியா கூறியது," ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் மட்டுமே அணிவகுப்பு நிகழ்த்துவார்கள், மாணவிகள் நடத்தினால் நல்லா இருக்கும்ல! அப்படின்னு தோணுச்சு முதல்வர்ட்ட கேட்டோம். உடனே மகிழ்ச்சியா அனுமதி கொடுத்துட்டாங்க. எங்க சீனியர் அண்ணங்க எங்களுக்கு எப்படி அணிவகுப்பு நடத்தணும்னு பயிற்சி குடுத்தாங்க. இன்னைக்கு நாங்க நடத்தின அணி வகுப்பு கல்லூரியில் பேசுபொருளா மாறிப்போச்சு. எங்களுக்கும் மகிழ்ச்சியா இருக்கு.  


எங்கள பாத்து இனிமே வர்ற காலத்துல மாணவிகளும் தன்னம்பிக்கையோட இந்த அணிவகுப்பு நிகழ்ச்சிய நடத்துவாங்க. எல்லாத்துக்கும் கல்லூரி முதல்வருக்கு தான் நன்றி சொல்லணும். 


எங்க முதல்வர் ஐயா எங்களோட தகுதியை வளர்த்துக்கறதுக்கு நிறைய செய்றாங்க. சிலம்பம் கத்துக்க வைக்கிறாங்க. ராக்கெட் சைன்ஸ்ல ஆர்வமுள்ள ஸ்டுடென்ட்ஸ்க்கு தனியா வகுப்பு எடுக்குறாங்க. ஸ்போர்ட்ஸ்ல ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு ஸ்போர்ட்ஸ் கிளாஸ் அரேஞ்ச் பண்ணி தராங்க. கலை இலக்கியம் எல்லாத்துலயும் எங்கள தகுதியானவங்களா வரணும்னு தொடர்ந்து சார் அட்வைஸ் பண்ணுவாங்க. இந்த ஆண்டு அணிவகுப்பு நடத்துனது மகிழ்ச்சியா இருக்கு" என்றார். 


மாணவர்கள் கைதேர்ந்த கலைஞர்களைப் போன்று விதவிதமான நுணுக்கங்களுடன் சிலம்பம் சுற்ற பார்வையாளர்கள் பரவசமடைந்தனர்.  


இந்த ஆண்டு நடைபெற்ற விடுதலை நாள் விழா குறித்து நம்மிடம் பேசிய கணிப்பொறியியல் துறை பேராசிரியர் அடைக்கலம் கூறியதாவது, "எப்பொழுதும் விடுதலை நாள் விழா கல்லூரியில் நடக்கும். இந்த ஆண்டு ரொம்ப சிறப்பா நடந்தது. சடங்கா இல்லாம உயிர்ப்புடன் விழா நடந்துச்சு. மாணவர்களின் பங்களிப்பு மகிழ்ச்சியா இருக்கு. மாணவர்களிடம் நிறைய திறமைகள் இருக்கு அதை வெளி கொண்டுட்டு வர்றது ஆசிரியர்களிடம் தான் இருக்கு. முதல்வர் ஐயா தொடர்ந்து மாணவர்களின் திறமையை வெளி கொண்டுட்டு வர்றதுக்கு முயற்சி பண்றாங்க" என்றார் மகிழ்ச்சி பொங்க. 


கல்லூரி காலம் தான் கனவுகளை சுமக்கும் காலம், தேசத்தின் நம்பிக்கைகளை நடவு செய்யும் காலம், ஞாலத்தை இயக்கும் அறத்தை கற்றுக் கொள்ளும் பருவம்.  


இவைகள் எல்லாம் மாணவர்களுக்கு கிடைத்திட வழிவகை செய்து வரும் மரியாதைக்குரிய கல்லூரி முதல்வர் முனைவர் திருமலைச்சாமி அவர்களுக்கும் கல்லூரி பேராசிரியர்கள் ஒவ்வொருவருக்கும் மெய்ச்சுடரின் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.


மாணவ மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட கல்லூரி முதல்வர் இந்திய ஒன்றியத்தின் தேசியக் கொடியை ஏற்றி வைத்து விடுதலை நாள் விழா உரை நிகழ்த்தினார்.

பேராவூரணி ரோட்டரி சங்கம் சார்பில் சங்கத்தின் பொறுப்பாளர்கள் கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் குறிப்பேடுகள் வழங்கி விடுதலை நாள் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.






கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா