"பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெருமை மீட்டெடுக்கப்படும்" மிதிவண்டி வழங்கும் விழாவில் சட்டமன்ற உறுப்பினர் பேச்சு.
பள்ளி தலைமை ஆசிரியர் தனலட்சுமி தலைமையில் நடைபெற்ற விழாவில் சட்டமன்ற உறுப்பினர் நா. அசோக்குமார் மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
அவர் தனது உரையில், "பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தனியார் பள்ளிக்கு நிகரான கட்டமைப்பை உருவாக்கி மாணவர்கள் எண்ணிக்கை அதிகப்படுத்த உறுதியான நடவடிக்கை எடுப்பேன், ஆண்கள் பள்ளி மிகவும் புகழ்பெற்ற பள்ளியாகும், இப்பள்ளியில் படித்த மாணவர்கள் உலகம் முழுவதும் வெவ்வேறு துறைகளில் சிறந்த ஆளுமைகளாக உள்ளனர். பள்ளியின் பெருமையை மீட்டெடுக்க உறுதியான நடவடிக்கையை மேற்கொள்வேன். பள்ளியில் மாணவர் எண்ணிக்கை குறைவதற்கான காரணங்களை கண்டறிந்து ஓரிரு மாதங்களில் அதற்கான நடவடிக்கையை எடுப்பேன்,
பள்ளி தலைமை ஆசிரியரின் கோரிக்கையான பள்ளி விளையாட்டு மைதான சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை நிறைவு செய்யும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
மேலும் பெண்கள் பள்ளிக்கு உடனடியாக நான்கு கழிப்பறைகளை அமைக்கும் பணி ஓரிரு நாட்களில் தொடங்கும், பள்ளி தலைமை ஆசிரியரின் கோரிக்கையான அனைத்து மாணவர்களும் அமர்ந்து படிக்கும் வகையிலும், பள்ளி விழாக்களை நடத்தும் வகையிலுமான செட்டும், விழா அரங்கமும் அமைத்துக் கொடுக்கப்படும்" என்று கூறினார்.
நிகழ்வில் சிறப்புரையாற்றிய பேராவூரணி அரசு கலை அறிவியல் கல்லூரி தமிழ் பேராசிரியர் முனைவர் பா.சண்முகப்பிரியா தனது உரையில், ""எளியவர்களுக்கான கல்வி வாய்ப்புகளை எளிதாக்கி வைத்திருக்கிறது தமிழ்நாடு அரசு, இழந்து போன பெண் கல்வி உரிமையை மீட்டெடுத்தவர் தந்தை பெரியார். அவர் வழிவந்த அரசுகள் தந்தை பெரியார் ஏற்றி வைத்த விளக்கை அணையாமல் காக்கிறது. கால் வலிக்க நடந்து சென்று படித்த காலம் மலையேறி கல்வி பயிலும் மாணவர்களுக்கு பள்ளியிலேயே மிதிவண்டி வழங்கும் பணியை தமிழ்நாடு அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. சீருடை, புத்தகங்கள், காலை மதியம் உணவு, திறன் தேர்வுகள், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு உயர் கல்வி வரை உதவித்தொகை, அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்வி கற்கத் தொடங்கும் மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் மாதம்தோறும் உதவித்தொகை என கல்விக்கான வாய்ப்புகளை மாணவர்களின் அருகிலேயே உருவாக்கி வைத்திருக்கிறது தமிழ்நாடு அரசு. அதனால்தான் தமிழ்நாடு கல்வி வளர்ச்சியில் சிறந்த மாநிலமாக திகழ்கிறது. வாய்ப்புகளைப் பயன்படுத்தி உயர்கல்வியை ஒவ்வொரு மாணவியும் எட்டிப் பிடிக்க வேண்டும். இலக்குகளை பெரிதாக்கி கொள்ள வேண்டும். இங்குள்ள மாணவிகளை பார்க்கும் பொழுது எதிர்கால மருத்துவர்களாக, ஆட்சியர்களாக, அரசியல் ஆளுமைகளாக, சிறந்த கட்டமைப்பை உருவாக்கும் பொறியாளர்களாக, ஆசிரியர்களாக தெரிகிறார்கள். கல்லூரியில் படிக்கும் பொழுது அண்ணனின் உழைப்பில் எனக்கு கிடைத்த மிதிவண்டி உங்களுக்கு பள்ளியில் படிக்கும் பொழுது கிடைக்கிறது. வாய்ப்புகளை பயன்படுத்தி வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளுங்கள்" என்றார்.
நிகழ்வில் பேரூராட்சி பெருந்தலைவர் சாந்தி சேகர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாரிமுத்து, பள்ளி மேலாண்மை குழு தலைவர் அம்பிகா, பேரூராட்சி துணைத் தலைவர் கி.ரே. பழனிவேல், தமிழ் வழிக் கல்வி இயக்க பொறுப்பாளர் த. பழனிவேல், மெய்ச்சுடர் நா வெங்கடேசன், பள்ளிப் புரவலர்கள் மருத்துவர் துரை.நீலகண்டன், கவிஞர் அப்துல் மஜீத் உள்ளிட்ட ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் காளீஸ்வரி வரவேற்றார், தமிழ் ஆசிரியர் கிருஷ்ணவேணி நன்றி கூறினார்.
கருத்துகள்
கருத்துரையிடுக