புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்


 திருமதி ஆஸ்மி. இவர் ஏழாம் வகுப்பும் மூன்றாம் வகுப்பும் படிக்கும் இரண்டு பிள்ளைகளுக்கு தாய். கணவர் அயல் நாட்டில் பணியாற்ற தனது மாமனார், மாமியார், குழந்தைகளுடன் வசித்து வரும் இல்லத்தரசி.  


இன்று இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர்.  


அதைவிட இவரின் முதன்மையான அடையாளமாக மாறி இருப்பது புனல்வாசல் தன்னார்வ படிப்பு வட்டத்தின் மாணவி என்பது.


பேராவூரணி அருகே உள்ளது புனல்வாசல் புனித ஆரோக்கிய அன்னை அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி. 


இந்தப் பள்ளியில் 1993இல் பள்ளி இறுதி ஆண்டு படித்த மாணவர்கள் ஒன்றுகூடி 2021 செப்டம்பர் 12 -ல் தொடங்கியதுதான் புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்.  


பள்ளி வளாகத்திலேயே போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கென அனைத்து வசதிகளுடன் கூடிய கூடம் பள்ளி நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது. 


1993இல் இப்பள்ளியில் படித்து தற்பொழுது உலகெங்கும் வெவ்வேறு துறைகளில் பணியாற்றி வரும் நண்பர்கள் ஒவ்வொருவரும் படிப்பு வட்டத்தின் தேவைகளுக்கு பொறுப்பேற்றுக் கொண்டனர்.  


போட்டித் தேர்வுகளுக்கான பாடப்புத்தகங்கள், வினாத்தாள்கள், தளவாடப் பொருட்கள், தேநீர் மற்றும் நொறுக்கு தீனிகள் என மாணவர்கள் மனநிறைவோடு படிப்பதற்கான சூழலை இந்தக் கூடத்தில் உருவாக்கினார்கள்.  


இப்பள்ளியில் படித்து புதுக்கோட்டை தன்னார்வ பயிலும் வட்டத்தில் பயிற்சி மேற்கொண்டு வெவ்வேறு துறைகளில் பணியாற்றுபவர்கள் வகுப்புகள் வழங்கவும் வழி காட்டவும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.  


ஊரிலேயே வணிகம் செய்து வருபவர்கள் அல்லும் பகலும் பயிலும் வட்டத்திற்கான எரிசக்தியாக இயங்கினார்கள். 


இன்று புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டத்தின் முதல் அறுவடையை பெற்றுள்ளனர். 


இந்த படிப்பு வட்டத்தை தொடங்கியவர்களுள் ஒருவரான மருத்துவர் துரை நீலகண்டன் அலைபேசியில் தனது நண்பர்களை அழைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார். தனது பகிரி குழுக்களில் எல்லாம் பகிர்ந்து கொண்டே இருந்தார். இவரைப் போன்றே இவரது சக பள்ளி நண்பர்களும் இந்தச் செய்தியை பரப்பிக் கொண்டே இருந்தனர்.  


சமூக ஊடகங்கள் முழுவதும் ஆஸ்மியின் வெற்றிச் செய்தி பரவிக் கொண்டே இருந்தது. 


வண்டும் சிண்டுமான இரண்டு பிள்ளைகளுக்கு தாய், இல்லத்தரசி குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார் என்ற செய்தி பலருக்கும் நம்பிக்கையை ஊட்டி இருக்கிறது.  


பெரும் செலவு செய்து பெரு நகரங்களுக்குச் சென்று போட்டித் தேர்வு பயிற்சி மையங்களில் படித்தால் மட்டும்தான் இது போன்ற தேர்வுகளில் வெற்றி பெற முடியும் என்ற மூடநம்பிக்கையும் முறியடித்திருக்கிறார் சகோதரி ஆஸ்மி. 


தன்னார்வ படிப்பு வட்டத்தின் பொறுப்பாளர் மயிலாடுதுறை மாவட்டத்தில் கருவூல அதிகாரியாக உள்ள புவனேஸ்வரன் அவர்களை தொடர்பு கொண்டு பேசினோம், "ஊரகப்பகுதியில் பெரும் ஊக்கத்தை உருவாக்கி இருக்கிறது ஆஸ்மியின் வெற்றி" என்ற அவர் இதற்கான உரம் புதுக்கோட்டை தன்னார்வ பயிலும் வட்டம் என்கிறார்.  


புதுக்கோட்டை வேலைவாய்ப்பு பதிவு அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றிய டாக்டர் சுரேஷ்குமார் தான் இதற்கெல்லாம் தொடக்க புள்ளி என்கிறார் புவனேஸ்வரன்.


1995 இல் தமிழ்நாட்டிலேயே முதன் முறையாக வேலைவாய்ப்பு பதிவு அலுவலகத்தில் தன்னார்வ பயிலும் வட்டத்தை தொடங்கி பயிற்சி வழங்கியவர் டாக்டர் சுரேஷ்குமார்.  


இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக இருக்கும் இடமெல்லாம் தேடிச்சென்று பயிற்சிக்கு வரவழைத்து அவர்களை அரசு ஊழியர்களாக மாற்றியவர் இவர்.  


நாடு முழுவதும் 400க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களை இந்த தன்னார்வ பயிலும் வட்டம் உருவாக்கி இருக்கிறது.  


இந்தச் செய்தி படிப்படியாக பரவி இன்று தமிழ்நாடு முழுவதும் அரசு வேலை வாய்ப்பு பதிவு மையங்களில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சியும் தொடங்கி நடைபெற்று வருகிறது.  


"டாக்டர் சுரேஷ்குமார் உருவாக்கித் தந்த "கூடி படித்தால் கோடி நன்மை" என்ற முழக்கத்தோடு தன்னார்வ பயிலும் வட்டத்தை வழிநடத்தி வருகிறோம்" என்கிறார் புவனேஸ்வரன். 


ஆஸ்மியின் வெற்றி, புனல்வாசல் தன்னார்வ படிப்பு வட்டத்தை அடுத்த நிலைக்கு நகர்த்தி இருக்கிறது.  


தனது வெற்றி குறித்து ஆஸ்மி குறிப்பிட்டதாவது, "இன்று எனது வெற்றி கொண்டாடப்படுகிறது, இதற்கெல்லாம் காரணம் இந்த தன்னார்வ பயிலும் அமைப்புதான். 


கன்னியாகுமரியில் பிறந்த நான் திருமணம் செய்து இந்த ஊருக்கு வந்தேன். அரசுப் பணிக்கு போக வேண்டும் என்ற உறுதியான எண்ணம் என்கிட்ட இருந்துச்சு. 

 இதுக்கு இடையில, 'ரெண்டு பிள்ளைகளுக்கு பிறகு என்னத்த படிப்பு வேண்டி கிடக்கு, புள்ளைங்கள பாக்காம படிக்கப் போகிறாளாம்' என்ற ஏச்சம் பேச்சும் எக்கச்சக்கம். எதையும் காதில் வாங்கிக்கல. படிப்பு வட்டத்துக்கு வந்துட்டா எல்லாம் மறந்து போயிரும். 


 நான் தமிழ் படத்துல விக். படிப்பு வட்டத்துக்கு வந்த பிறகு என்னோட படிக்கிற சக தோழி உமாதேவி நிறைய சொல்லிக் கொடுத்தாங்க, கணக்கு பாடம் எடுத்த துரையரசன் சாரும் என் கூட சேர்ந்து படிக்கும் தம்பி அருண், கௌசல்யா எல்லோரும் நான் நல்ல மார்க் வாங்குறதுக்கு துணையாய் இருந்தாங்க.


 இந்த படிப்பு வட்டத்தை உருவாக்கின 93 பேட்ச் பெரியவங்க அப்பப்ப வருவாங்க நிறைய ஊக்கம் கொடுப்பாங்க. தொடர்ந்து படிக்கணும்கிற எண்ணத்தை உருவாக்குனது புவனேஸ்வரன் சார் தான். 


 இந்த படிப்பு வட்டம் இல்லைன்னா என்னால இன்னைக்கு அரசு அதிகாரியா மாறி இருக்க முடியாது" சொல்லும் பொழுதே அவரது கண்களில் இருந்து கண்ணீர் அரும்புகிறது.  


சோர்ந்து போன பொழுதெல்லாம் அயல்நாட்டில் இருந்து ஆறுதல் மொழி பேசி இருக்கிறார் இவரது கணவர் பீட்டர் ஜோசப்.


"சொந்தக்காரங்க பேசும் பொழுதெல்லாம் அருள் அண்ணன் தான் தேற்றுவாரு. நாங்க இங்க படிச்சப்ப அப்பப்ப ஸ்னாக்ஸ் டீ எல்லாம் கொடுத்து எங்களை சொந்த பிள்ளைங்க மாதிரி நடத்தினாங்க" என்கிறார் ஆஸ்மி.   


கொண்டைக்கடலை மற்றும் பயிறு வகைகளை படிக்கும் பிள்ளைகளுக்கு தீனியாக தொடர்ந்து வழங்கி வருகிறார் அமெரிக்காவில் பணியாற்றி வரும் ராஜசேகர்.


ஆஸ்மியின் வெற்றி குறித்து புவனேஸ்வரன் கூறியதாவது, 


"குரூப் 4 தேர்வு முடிந்த பிறகு எங்களுக்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது. 50 பேர் தொடர்ந்து வந்து கொண்டிருந்த நிலையில் தேர்வு முடிந்த மறுநாள் ஸ்டடி சர்க்கிள் க்கு வெறும் 15 பேர் மட்டுமே வந்திருந்தனர். 


அனைவருக்கும் போன் செய்து தொடர்ந்து ஸ்டடி சர்க்கிள் வர சொல்லுங்கள் என்று கூறினேன். 


ஒரு மாணவி திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்து விட்டார். ஒரு மாணவி தினக்கூலி நூறு ரூபாய்க்கு தென்னை பண்ணையில் வேலைக்கு சென்று விட்டார். 


இன்னொருவர் ஒரு மர மில்லில் வேலைக்கு சேர்ந்து விட்டார். எவ்வளவோ கூறியும் அவர்கள் யாரும் மீண்டும் படிப்பு மையத்திற்கு வரவில்லை. 


15 பேருடன் அடுத்து வந்த குரூப் 2 தேர்வுக்காக படிப்பு வட்டம் இயங்கியது. 


அதிலும் மூன்று பெண்களுக்கு அடுத்தடுத்து திருமணம் ஆகிவிட்டது.  


குரூப் 4 ரிசல்ட் வந்தது. ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை. 15 பேர் ஐந்து பேரா மாறிட்டாங்க. 


மீண்டும் ஒவ்வொருவருக்கும் போன் செய்து தொடர்ந்து பயிற்சி செய்தால் மட்டுமே போட்டி தேர்வில் வெல்ல முடியும் என்று எவ்வளவோ சொல்லியும் யாரும் வரவில்லை. 


இதற்கிடையில் புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவை பெரிய அளவில் நடத்த முடிவு செய்தோம். 


எல்லா ஊரிலும் பதாகை வைத்தோம். ஆட்டோவில் விளம்பரம் செய்தோம். அந்த நிகழ்ச்சிக்கு வெறும் ஐந்து மாணவர்கள் மட்டுமே வந்து கலந்து கொண்டனர். 


மாணவர்களும் அதிக அளவில் வரவில்லை. என்ன செய்வது என்று புரியவில்லை. அனைவரும் மனதளவில் சோர்வடைந்து விட்டோம். 


 வெறும் ஐந்து உறுப்பினர்களுடன் புனல்வாசல் படிப்பு வட்டம் இரண்டாம் ஆண்டில் இயங்கியது. ஆனால் எனக்கு மட்டும் நம்பிக்கை இருந்தது நிச்சயம் வெற்றி வரும் என்று. 


குரூப் 2 தேர்வு எழுதிய மாணவிகள் மூன்று பேர் தொடக்கநிலை தேர்வில் வெற்றி பெற்றனர். 


அனைவருக்கும் சற்று ஆறுதலாக இருந்தது. 


புனல்வாசல் படிப்பு வட்டத்தின் எதிர்காலம் அந்த மூன்று பேர் கையில் மட்டுமே இருந்தது. 


மூன்று பேர் தேர்ச்சி பெற்றதை விளம்பரம் செய்தோம் .அப்படியும் படிக்க யாரும் வரவில்லை. ஆனால் நண்பர்கள் 5 பேர் வந்தாலும் பரவாயில்லை, ஸ்டடி சர்க்கிள் தொடர்ந்து இயக்கட்டும் என்றனர். 


இங்கு படித்த ஒரு சில மாணவிகள் ஒரு சில தனியார் பயிற்சி மையங்களில் சேர்ந்து விட்டதாக தகவல் வந்தது. 


இந்தச் செய்தி எங்களுக்கு மிகவும் வருத்தத்தை தந்தது.


 இரண்டு ஆண்டுகளாக ஒருவரும் வேலைக்கு செல்லவில்லை. மாணவிகளும் படிக்க வரவில்லை.  


அந்த மூன்று சகோதரிகளும் முதன்மை தேர்வுக்கு கடுமையாக பயிற்சி செய்தனர். இந்த நிலையில் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவை கூட எங்களால் கொண்டாட முடியவில்லை.


விவசாயி மழைக்கு ஏக்கத்துடன் காத்திருப்பது போல நாங்கள் ஒரே ஒரு வெற்றிக்காக காத்திருந்தோம். 


 படித்து கொண்டிருந்த ஐந்து சகோதரிகளும் மனதளவில் சோர்ந்து விட்டனர். அதில் ஒரு சகோதரி, சார் நான் பள்ளிக்கு வேலைக்கு செல்ல போகிறேன் என்று கூறி அதிர்ச்சியை தந்தார். 


சகோதரி அஸ்மியை இனிமேல் நீ படிக்க சொல்லக்கூடாது என்று கூறிவிட்டனர். இதுதான் கடைசித் தேர்வு இதற்குப் பிறகு நான் செல்லவில்லை என்று அவரும் கூறிவிட்டு குரூப் 2 மெயின் தேர்வு எழுதினார். 


இந்த சூழ்நிலையில் கடந்த வாரம் இரவு 9 மணிக்கு சகோதரி அஸ்மி போன் செய்தார். 'சார் டிஎன்பிசி அலுவலகத்தில் இருந்து மெசேஜ் வந்துள்ளது. குரூப் 2 க்கு கவுன்சிலிங் வர சொல்லி இருக்காங்க' என்று கூறினார். எனக்கு வந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை" உணர்ச்சிவசப்படுகிறார்கள் புவனேஸ்வரன்.


இந்த முதல் வெற்றி இங்கு படித்துக் கொண்டிருந்த மற்ற மாணவிகளுக்கும் பயிற்சியைப் பாதியில் விட்ட மற்ற மாணவிகளுக்கும் பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது.  


இந்த வெற்றியை தாங்கள் பெற்ற வெற்றியாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் படிப்பு வட்டத்தை தொடங்கிய முன்னாள் மாணவர்கள். 


ராஜசேகர், அடைக்கலம், மருத்துவர் நீலகண்டன், வின்சென்ட் அருள்ராஜ், ஆரோக்கியதாஸ், புவனேஸ்வரன், சேவியர் தெய்வீகன் மற்றும் சங்கர் இவர்கள் மட்டுமல்ல இவர்களோடு சேர்ந்து மெய்ச்சுடரும் கொண்டாடுகிறது.  


வேலைவாய்ப்பு பதிவு அலுவலகத்தில் டாக்டர் சுரேஷ்குமார் அவர்கள் ஏற்றி வைத்த ஒளிச்சுடர் இன்று பேராவூரணி பகுதியிலும் சுடர் விடத் தொடங்கியுள்ளது.  


அதிகாரி ஆஸ்மிக்கும் அன்பு வாழ்த்துக்கள்.

















கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

பேராவூரணியில் மகளிர் நாள் விழா