பால்குடம் எடுத்தல் (பாலாபிசேகம்) ஏன்?

பாலாபிசேகம் ஏன்?
திருவிழாக் காலங்களில் கோவில்களில் பக்தர்களால் பால்குடம், பால் காவடி எடுக்கப்பட்டு கோவில் கருவறை மூலவர் சிலையில் பால் அபிசேகமாக ஊற்றப்படுகிறது. இன்றளவில் இப்படி பால் குடம் எடுக்கும் மக்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது. நேர்த்திக்கடன் என்ற பெயரில் இப்போது நடக்கும் இச்சடங்கின் உண்மைப் பொருளை சில பெரியவர்கள் கூறினார்கள்.
கோவிலில் சிலைகள் அமைக்கப்படும் போது பீடத்தில் மருந்துப் பொருட்களை வைத்து சிலைகளை அமைப்பர். அச்சிலைகளின் மேல் பால் போன்றவைகளைக் கொண்டு அபிசேகம் செய்வர். அது சிலையின் பீடத்தில் உள்ள மருந்துப் பொருட்களில் பட்டு கருவறையின் வெளியில் வைக்கப்பட்டிருக்கும் வடிகாலில் வடிந்து ஒழுகும். கோவில் சுற்றுப் பாதையில் அமைக்கப்பட்டுள்ள வடிகால் தொட்டியில் அபிசேகம் செய்யப்பட்ட பால் பொருட்களைப் பக்தர்கள் எடுத்து பருகுவர், அப்படிப் பருகுவதால் பல மருத்துவப் பலன்களைப் பெறலாம் என்பது ஐதீகம். இதுதான் சிலைகளில் அபிசேகம் செய்வதன் நோக்கம்.
இந்தப் பழக்கம் குறிஞ்சிப் பகுதியில் மலைகளில் உள்ள மூலிகைகளால் மருத்துவ குணம் கொண்டு பெருக்கெடுக்கும் அருவிகளைப் பார்த்து செயற்கையாய் உருவாக்கப்பட்ட சடங்குமுறையாகக் கூட இருக்கலாம்.
பக்தி என்பது பத்தி என்ற சொல்லின் திரிபு என்கிறார்கள் மொழியியல் அறிஞர்கள். பத்தி என்றால் வரிசை அல்லது ஒழுங்கு என்பது பொருள். ஆனால் இன்று ஒழுங்கற்ற முறையில் வெறும் சடங்குக்காக மட்டும் பாலாபிசேகம் போன்றவற்றைச் செய்வதால் ஆன்மீகத்தில் பக்தி அல்லது ஒழுங்கு குறைவதாகத்தான் கருத முடியும்.
திருவிழாக் காலங்களில் குடம் குடமாய் பாலை சிலைகளில் ஊற்றி அந்த அபிசேகப் பால் ஆறு போல் பெருகி சாக்கடையில் விழுவதால் யாருக்கு என்ன பயன்? ஒருபக்கம் நம் முன்னோர்களை அறிவியலாளர்கள் என்றும் நம் சடங்குகளை புனிதமானவைகள் என்றும் கூறிக்கொள்ளும் நாம், அச்சடங்குகளை அர்தமற்ற முறையில் கடைபிடித்து நாட்டின் வளத்தை வீணாக்குவது பக்தியா?
ஒருவேளைச் சோற்றுக்கும் வழியில்லாத ஏழைகள் வாழும் நாட்டில், குடம் குடமாய் பாலை சாக்கடையில் விடுவதால் கடவுள் அருள் கிடைக்கும் என்றால் அதுதான் பக்தி என்றால் நாம் நம்முடைய முன்னோர்கள் வகுத்து வைத்த பத்தியிலிருந்து விலகிச் செல்கிறோம் என்றுதானே கூறமுடியும்.
பேராவூரணி திருநீலகண்டப்பிள்ளையார் ஆலயம் பல புரட்சி முகங்களை உடைய ஆலயம்.
விநாயகர் ஆலயங்களில் பார்ப்பனர் அல்லாதோரால் அர்ச்சிக்கப்படும் கோவில் இது. இந்துக்கள் மட்டுமல்லாமல் இசுலாமியர்கள், கிறித்தவர்கள் எனப் பல சமயத்தவர்களும் வழிபடும் ஆலயமாக சமய ஒற்றுமைக்குச் சான்று பகன்று வருகிறது. ஆனால் இக்கோவிலின் திருவிழாக்களில் ஆயிரக்கணக்கான லிட்டர் பாலை அபிசேகம் என்ற பெயரில் கோவில் அருகில் உள்ள டாக்டர் ஜே.சி.குமரப்பா பள்ளிக்கு அருகில் உள்ள சாக்கடையில் குட்டையாக்கி வருவது சமூக ஆர்வலர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. பக்தி என்ற பெயரில் நடக்கும் இச்சடங்கு சமூகப் பார்வையற்றச் செயலாகும்.
எதிர்காலத்தில் அபிசேகப் பாலை மாற்று வழியில் பயன்படுத்தும் வழிகளை அறிவதும் அதை நடைமுறைப் படுத்துவதும்தான் பக்தி வளர்ச்சிக்கும், ஆன்மீக வளர்ச்சிக்கும் பயன்படும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். மாற்று வழிகளை சித்திப்போமே....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா