"ரீல்ஸ் பார்ப்பதும் போதை தான்! மாணவர்கள் இந்த போதையில் இருந்து விடுபட வேண்டும்" கவிஞர் மைதிலி பேச்சு

பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மகளிர் நாள் விழா நடைபெற்றது. 

கல்லூரி முதல்வர் இரா.திருமலைச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் புதுக்கோட்டை கவிஞரும், எழுத்தாளருமான ஆசிரியர் மைதிலி கஸ்தூரிரங்கன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அவர் தனது உரையில், "தற்பொழுது நம்மில் பெரும்பாலானவர்கள் கைபேசிக்கு அடிமையாக இருக்கிறார்கள். ரீல்ஸ் போதையால் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர். கைபேசியில் நாம் காணும் ரீல்ஸ் தொடர்ந்து நம்மை அதற்குள்ளேயே வைத்துள்ளது. ஒரு திரைப்படத்தை பார்த்தால் கூட ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் அதிலிருந்து நம்மால் மீண்டு விட முடியும். ஆனால் இந்த ரீல்ஸ் நம்மை நாள் கணக்கில் அடிமையாக வைத்திருக்கிறது. இதனால் பார்க்கும் திறன் கேட்கும் திறன் படிப்படியாக குறைந்து செயலிழக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறோம். ரீல்ஸ் பார்க்கும் மாணவர்கள் டைமர் வைத்துக்கொண்டு குறிப்பிட்ட நேரத்தில் கைபேசி பயன்பாட்டை நிறுத்திக் கொள்ள பழக வேண்டும்.  

குறிப்பாக பெண்கள் சமூக ஊடகங்களில் மூழ்கிக் கிடப்பதில் இருந்து விடுபட வேண்டும். 

 தவறான பழக்கத்திலிருந்து இப்பொழுதே வெளியில் வாருங்கள். முற்றுப்புள்ளி வைத்து விடுங்கள். தொடர்வது முடிவாகாது.  

யார் என்ன சொன்னாலும் முன்னேறிச் செல்லுங்கள்.  

பெண்கள் குறிப்பாக கல்லூரி மாணவிகள் அரசியல் பேச வேண்டும்.  உள்ளூர் அரசியல் தொடங்கி உலக அரசியல் வரை பேசுவதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும்.  பன்னாட்டு அரசியல் நம் பயன்படுத்தும் பருப்பில் கூட தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை உணர வேண்டும்.

நுகர்வு பண்பாட்டுக்குள் மூழ்கி உங்களின் பொருளாதாரத்தை இழக்காதீர்கள். தேவையானவைகளுக்காக மட்டுமே செலவு செய்யும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். 

உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக செயல்படுங்கள்" இவ்வாறு தனது உரையில் குறிப்பிட்டார். இவரது உரை மாணவிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றது.  

மற்றும் ஒரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பரிமளா அசோக்குமார் மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். 

பேராசிரியர்கள் இரா.ராணி, பா.ஞானசேகரன், ர.ராஜ்மோகன், நா.பழனிவேல் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.  

நிகழ்வில் மாணவிகள் மற்றும் பேராசிரியர்களின் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசுகளை வழங்கி வாழ்த்தினார்.

கருத்துகள்

  1. அருமையான பேச்சு! குறிப்பாக, மகளிரை அரசியல் பேச விடுத்த அழைப்பு, மிக முக்கியமானது. பெண்ணியம் என்பது பெண்கள் முன்னேற்றத்தோடு முடிந்து விடுகிற விதயம் இல்லை. பெண்களின் அரசியல் அறிவுக்கு அதில் முக்கிய பங்குண்டு. மகளிர் திருநாள் விழாவில் இது குறித்துச் சரியாகப் பதிவு செய்தது வெகு சிறப்பு!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பால்குடம் எடுத்தல் (பாலாபிசேகம்) ஏன்?

"உழைப்புக்கும் பண்புக்கும் கிடைத்த அங்கீகாரம்" தமிழ்நாடு அரசின் கணினித்தமிழ் விருதாளரைப் பாராட்டிப் பேச்சு