ஏழையின் கைகள்


குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் ஒன்று கூடி உருவாக்கிய அமைப்புதான் ஏழையின் கைகள்.  


இந்த அமைப்பில் உள்ளவர்கள் ஒவ்வொருவரும் வள்ளல்களின் கரங்களை கொண்டவர்கள். 


களத்தூர் ஆற்றங்கரை ஓரம் குடியிருப்பவர்கள் நீலகண்டன் மாலதி இணையர்.  இவர்களுக்கு இரண்டு குழந்தைகள்.  இருவரும் தொடக்கப் பள்ளியில் படித்து வருகிறார்கள்.  


மாலை 6 மணிக்கெல்லாம் இவர்கள் வீடு இருக்கும் பகுதியே கரும்கும் என்று இருக்கும்.  ஓடியாடும் பிள்ளைகளை வைத்துக்கொண்டு பயத்தோடு வாழ்க்கை நடத்தி வருகிறார்கள்.  


இருள் சூழ்ந்த வீட்டுக்குள் சிமிலி விளக்குக்கு மண்ணெண்ணெய் கூட கிடைக்காமல் டீசலை ஊற்றி விளக்கெரித்து வாழ்ந்து வருகிறார்கள்.  


"ஏழையின் கைகள்"  அமைப்பு இவர்களின் வீட்டுக்கு ஞாயிற்றின் ஒளியை பாய்ச்சி இருக்கிறது.  சூரிய ஒளியில் இயங்கக்கூடிய மின்சாரம் இப்பொழுது இவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றி வைத்திருக்கிறது.  


"புதுசா கண்ணு கெடச்சது மாதிரி இருக்கு சார்" நீர் கசிய நா தழுதழுக்க பேசுவதற்கு தடுமாறுகிறார் மாலதி. 


"பயலுக ரெண்டு பேரும் படிக்கிறதுக்கு ரொம்ப உதவியா இருக்கும் சார்" என்கிறார் நீலகண்டன்.  


"ஆளுக்கு 100 200 போட்டு இந்த சூரிய சக்தி விளக்க வாங்கி இருக்கோம் சார்"   என்கிறார் ஏழையின் கைகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் செல்வகுமார்.  


செல்வகுமார் பேராவூரணி அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி காம் படித்துக்கொண்டே ஆட்டோ ஓட்டி சம்பாதித்து வீட்டுக்கும் உதவியாக இருக்கிறார்.   


"நாங்க 12-வது படிக்கும்போது எங்க சற்குணம் சார் நிறைய சொல்லி இருக்காரு சார்.  அவரோட வாழ்க்கையை சொல்லும்போதே எங்களுக்கெல்லாம் புது நம்பிக்கை கிடைக்கும்.  ஏழ்மை நிலையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமா படிச்சு இன்னைக்கு அரசு பள்ளியில் ஆசிரியரா இருக்கிறாரு.  அவரோட வழிகாட்டல்ல தான் நாங்க இந்த அமைப்பை  உருவாக்குனோம்.  ஏழைகளுக்கு உதவிட நெனச்ச நாங்களும் ஏழைகள் தான் சார்.  அதனாலதான் 'ஏழைகளின் கைகள்' அப்படின்னு பேர் வெச்சோம்"  என்கிறார் செல்வகுமார்.   


உதவி தேவைப்படும் மனிதர்களை அடையாளம் காட்டிய முனைவர் முருகையன் மற்றும் முனைவர் சற்குணம் இவர்களோடு சென்று ஏழையின் வீட்டில் இருளை அகற்றி இருக்கிறார்கள்.


கண்ணோட்டம் என்னும் உயர்குணம் கொண்ட  இந்த முன்னாள் மாணவர்களை நெஞ்சம் நிறைந்து வாழ்த்துகிறோம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பால்குடம் எடுத்தல் (பாலாபிசேகம்) ஏன்?

"உழைப்புக்கும் பண்புக்கும் கிடைத்த அங்கீகாரம்" தமிழ்நாடு அரசின் கணினித்தமிழ் விருதாளரைப் பாராட்டிப் பேச்சு

"ரீல்ஸ் பார்ப்பதும் போதை தான்! மாணவர்கள் இந்த போதையில் இருந்து விடுபட வேண்டும்" கவிஞர் மைதிலி பேச்சு