"உழைப்புக்கும் பண்புக்கும் கிடைத்த அங்கீகாரம்" தமிழ்நாடு அரசின் கணினித்தமிழ் விருதாளரைப் பாராட்டிப் பேச்சு

பேராவூரணி, பெரியார் அம்பேத்கர் நூலகத்தில்  தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் கணினித்தமிழ் விருது பெற்றுள்ள முடச்சிக்காடு முனைவர் அகிலன் அவர்களுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது.  


முனைவர் அகிலன் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் கணினி நிரளாளராக பணியாற்றுகிறார். 


தமிழ்வழிக் கல்வி இயக்கம் முன்னெடுத்த இவ்விழாவில் திருக்குறள் பேரவை தலைவர் ஆறு.நீலகண்டன் தலைமை வகித்தார்.  


பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் விருத்தாளரை வாழ்த்தி பேசினார். அவர் தனது வாழ்த்துறையில், "போற்றத்தக்க மனிதர் அகிலன்.  அவருக்கு விருது கிடைத்திருப்பது பொருத்தமானது.  படிக்கும் மாணவர்களுக்கு முன்னுதாரணமாக திகழும் அகிலனுக்கு அரசு கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில் பாராட்டு விழா நடத்திட ஏற்பாடு செய்வோம்"என்றார்.


ஆனந்த விகடன் துணை நிர்வாக ஆசிரியர் எழுத்தாளர் வெ.நீலகண்டன், மருத்துவர் துரை.நீலகண்டன், குமுதம் டாட் காம் நேர்காணல் நெறியாளர் வளன்அரசு ஆகியோர் சிறப்புரையாற்றினர். 


சிறப்புரையாற்றிய வெ. நீலகண்டன் தனது உரையில், "அகிலன் முடச்சிக்காடு கிராமத்தில் படிக்கும் மாணவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார்.  நான் படித்த காலத்தில் எனது பெற்றோருக்கு பயந்து படித்ததை விட அகிலனுக்கு பயந்தே படித்தேன்.    


காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்வில் செம்மொழி தமிழ் மத்திய நிறுவனத்தின் செயல்பாடுகளை இந்திய பிரதமரோடு பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு உயர்ந்த பணியில் இருப்பவர்.  நடுவன் அரசின் இந்த உயராய்வு மையத்தின் தலைவராக இருப்பவர் தமிழ்நாடு முதலமைச்சர்.  அவரோடும் நிறுவனம் சார்ந்து எந்நேரமும் சந்தித்து பேசும் நிலையில் இருப்பவர்.   தனது கல்வியாலும் கடின உழைப்பாலும் எவ்வளவு உயரமான இடத்தில் இருந்தாலும் தனது பண்பை இழந்துவிடாமல் தனது தொடக்க கால நட்புகளையும் மாறாத அன்போடு தொடர்பவர்" என்றார்.


மருத்துவர் துரை நீலகண்டன் தனது பாராட்டுரையில், "முனைவர் அகிலனுக்கு பலமுறை நான் படித்த புத்தகங்களை பரிந்துரை செய்திருக்கிறேன்.  ஆனால் அகிலன் சங்க இலக்கியத்தில் ஆய்வு செய்தவர்.  சங்க இலக்கியம் பெரும் புலவர்களால் இயற்ற பெற்றது.  அதை ஆய்வு செய்வது முனைவர் பட்டம் பெறுவது என்பதெல்லாம் போற்றுதலுக்குரியது.  தொடர்ந்து வாசிப்பதை வழக்கமாக்கி கொண்டவர் அகிலன்.  அவருக்கு கிடைத்த இந்த விருது பாராட்டுக்குரியது.  அகிலனால் நான் பலமுறை பாராட்டப் பெற்றிருக்கிறேன்.  அகிலனுக்கு கணினித்தமிழ் விருது வழங்கிய   தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்" என்றார்.


செய்தியாளர் கான் முகமது, ஆசிரியர் நடராஜன், முடச்சிக்காடு ஷேக் இப்ராஹிம், பணி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் மனோகரன், அன்னை தெரசா கல்வியியல் கல்லூரி முதல்வர் முனைவர் சித்ரா கணேசன், பேராவூரணி அரசு கல்லூரி பேராசிரியர் முனைவர் வினோத், ஆசிரியர் சி. மோகன், ஆசிரியர் இந்திராநகர் சிவக்குமார், ஆலமரத்து விழுதுகள் மு.சாதிக்அலி, நில அளவைத் துறை வட்ட சார் ஆய்வாளர் சந்தோஷ், கவிஞர் துறையூர் சோமு, ஆசிரியர் காஜாமுகைதீன், அன்னை தங்கம் ஜெயபாலன் ஆகியோர் விருதாளரை வாழ்த்திப் பேசினர்.


ஆயர் ஜேம்ஸ், திராவிடர் கழக பொறுப்பாளர் இரா நீலகண்டன், ஆசிரியர் சி கௌதமன், பெருமகளூர் பள்ளித் தலைமை ஆசிரியர் கணேசன், மனிதநேய ஜனநாயக கட்சி பொறுப்பாளர் அப்துல்சலாம், ஒளிப்படக் கலைஞர் அமரேந்திரன், பேராசிரியர் இ.பிரபா, பேராசிரியர் முனைவர் வனிதா, பாரதி மகளிர் தையல் பயிலக  ஆசிரியர்கள் நித்யா, உமா, லட்சுமி பிரியா, ஜெயந்தி, அம்பிகா,  தமிழக மக்கள் புரட்சி கழகம் ரெட்டவயல் மாரிமுத்து, திராவிடர் விடுதலைக் கழகம் மருத உதயகுமார், பிரம்மா குமாரிகள் ராஜ யோகா மைய பொறுப்பாளர் முருகேசன்,  செய்தியாளர்கள் ஜகுபர் அலி, திருஞானம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர். 


நிகழ்ச்சியில் புதிதாக விண்கற்களை கண்டறிந்த பேராவூரணி அரசு கல்லூரி மாணவர்கள் ஷியாம், பிரபாகரன் பாராட்ட பெற்றனர்.  மேலும் தமிழ் வழிக் கல்வி இயக்க தமிழ் நாள்காட்டி அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.


தமிழ்நாடு அரசின் விருது பெற்ற  முனைவர் இரா.அகிலன் ஏற்புரை நிகழ்த்தினார். 


மூன்று மணி நேரம் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட முனைவர் அகிலனின் தாய், இணையர் உள்ளிட்ட குடும்பத்தினர் நெகிழ்வோடு அமர்ந்திருந்தனர்.  


விருது பெற்ற அகிலனின் இணையர் பேச வரும் பொழுது வார்த்தைகள் இன்றி ஆனந்த கண்ணீரில் நா தழுதழுத்தார்.  


"சொந்த மண்ணுல எம் மகனை நீங்க எல்லாம் சேர்ந்து பாராட்டுறது சந்தோசம இருக்கு! அவனோட அப்பா மேலேருந்து பார்த்துகிட்டு இருப்பார்"  அகிலனின் தாயார் கண்களில் நீர் கசிய நெகிழ்வோடு குறிப்பிட்டார்.  


தனது தம்பியை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி கூறினார் அகிலனின் அண்ணன் அருள்.


முன்னதாக மெய்ச்சுடர் நா.வெங்கடேசன் வரவேற்றார், பேராசிரியர் முனைவர் பா. சண்முகப்பிரியா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.  நிறைவாக தமிழ் வழிக் கல்வி இயக்க பொறுப்பாளர் த.பழனிவேல் நன்றி கூறினார்.













































கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பால்குடம் எடுத்தல் (பாலாபிசேகம்) ஏன்?

"ரீல்ஸ் பார்ப்பதும் போதை தான்! மாணவர்கள் இந்த போதையில் இருந்து விடுபட வேண்டும்" கவிஞர் மைதிலி பேச்சு