பள்ளியின் முகப்புப் படம், மாணவர்கள் குழுப் படம் மற்றும் பள்ளியின் பெயர் தாங்கி நாள்காட்டி வெளியீடு
நாள்காட்டிகள் மாணவர்களை திட்டமிட வைக்கிறது. சாதனை நாட்களை குறித்து வைத்துக்கொண்டு குறிக்கோளுக்காக நகர்த்துகிறது.
நாள்காட்டி பார்க்கும் பழக்கத்தை மாணவர்களிடம் ஏற்படுத்த வேண்டியது மிகவும் அவசியம். நம்மில் பலர் நேரம் காலம் அறியாதவர்களாக நாட்களைக் கடத்துகிறோம்.
பெரும்பாலான தனியார் பள்ளிகள் விளம்பர நோக்கங்களுக்காக தங்கள் பள்ளியின் பெயர் தாங்கி நாள்காட்டி களை வெளியிட்டு வருகின்றன.
தமிழர்களின் முதற் பொருளான காலத்தை அதன் அருமையை மாணவர்களிடம் கொண்டு சேர்க்க புதிய யுத்தியை ஒரு பள்ளி கையாண்டு இருக்கிறது பேராவூரணி ஒன்றியம் , மாவடுகுறிச்சி ஊராட்சி ஆண்டிக்கச்சல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி.
பள்ளி சார்பில் ஒரு நாள்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இதில் பள்ளியின் முகப்பு தோற்றம், பள்ளி மாணவர்களின் குழு ஒளிப்படம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தலைப்பில் பள்ளியின் பெயர் அச்சிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாளும் மாணவர்கள் தங்கள் பள்ளியின் நாள்காட்டியில் தங்கள் படத்தை பார்த்துக் கொள்வதோடு பள்ளியின் மீதான பெருமிதத்தை உணர்ந்து பள்ளிக்கு வருவதற்கும் காலத்தை அறிந்து கொள்வதற்கும் வாய்ப்பாக இந்த நாள்காட்டி அமைந்துள்ளது.
பள்ளி வளாகத்தில் பள்ளித் தலைமை ஆசிரியர் இ.அன்புமேரி தலைமையில் பள்ளி மேலாண்மைக் குழு தலைவி பி.கார்த்திகா, பள்ளி ஆசிரியர் கே.நீலகண்டன் முன்னிலையில் பள்ளி வளர்ச்சிக் குழு தலைவர்
ஆ. செ.சிவகுமார் வெளியிட வட்டார கல்வி அலுவலர் கே.கலாராணி நாள்காட்டியைப் பெற்றுக்கொண்டார். நாள்காட்டியில் தங்கள் பள்ளியின் படத்தையும் தங்களின் படத்தையும் பார்த்து மகிழ்ச்சியில் மாணவர்கள் மகிழ்ந்தனர்.
பள்ளியின் முயற்சியை மெய்ச்சுடர் வாழ்த்துகிறது. இப்பள்ளியின் இச்செயலை முன்மாதிரியாக கொண்டு மற்ற பள்ளிகளும் இதுபோன்ற முயற்சிகளை முன்னெடுக்கலாம்.

கருத்துகள்
கருத்துரையிடுக