பணி நிரந்தரம் செய்யக்கோரி கௌரவ விரிவுரையாளர்கள் வாயில் முழக்கப் போராட்டம்


சமூக நீதி குறித்த சிந்தனை சமகாலத்தில் பெரிதும் விவாதிக்கப்பட்டு வருகிறது.  


நீதிக்கட்சி ஆட்சி தொடங்கி பெண்கள் குழந்தைகள் பெரியவர்களின் உரிமைகள் குறித்த விவாதங்கள் இங்கு தொடர்ந்து நடத்தப்பட்டு அதன் விளைவாக சமூக நீதி செயல் வடிவம் பெற்றிருக்கிறது. 


இருந்தாலும் தற்பொழுதும்  சமூக நீதிக்கான குரல் ஏதேனும் ஒரு வடிவில் இங்கு ஒலித்துக் கொண்டேதான் இருக்கிறது. 


பேறு கால விடுப்பு என்பதெல்லாம் பெண்ணுரிமை குரல் தொடங்கிய காலத்தில் விவாதிக்கப்பட்ட கருத்து.  பிறகு இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பெண்களுக்கு இந்த பேறுகால விடுப்பை வழங்கி உள்ளது.  இது பெண்களுக்கான உரிமையாக பார்க்கப்பட்டு விடுப்பு காலம் படிப்படியாக உயர்த்தப்பட்டும் வந்துள்ளது.


ஆனால் இன்றும் தமிழ்நாட்டில் அரசு கல்லூரிகளில் பணி புரியும் பெண் கௌரவ விரிவுரையாளர்களுக்கு பேறு கால விடுப்பு கூட வழங்கப்படுவதில்லை என்பது மிகவும் வருத்தத்திற்குரியது.  


தனியார் துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கு கூட பேறு கால விடுப்பை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில் அரசுத் துறையில் அதுவும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய கல்வித் துறையில் பெண்களுக்கான உரிமை மறுக்கப்படுவது சமகால சோகம்.


பத்தாண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்த கௌரவ விரிவுரையாளர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு அந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு நிரப்பப்படும் என்பதெல்லாம் உச்சபட்ச அநீதி.  


ஆண்டுதோறும் ஒவ்வொரு அரசு கல்லூரியில் இருந்தும் லட்சக்கணக்கான  இளைஞர்கள் பட்டம் பெற்று அதனால் பல்வேறு வேலை வாய்ப்புகளையும் பெற்றிருக்கிறார்கள்.  இவர்கள் பட்டம் பெறுவதற்கு காரணமான கௌரவ விரிவுரையாளர்களின் வாழ்வு மட்டும் நம்பிக்கையற்று இருக்கிறது. 


பல்கலைக்கழக மானிய குழு கவுரவ விரிவுரையாளர்களுக்கு 50,000 ரூபாய் சம்பளமாக வழங்க வேண்டும் என்று கூறுகிறது.  அதை ஏற்று நடைமுறைப்படுத்த வேண்டிய அரசு இந்த கௌரவ விரிவுரையாளர்களை வஞ்சிக்கிறது.  கடந்த ஏழு மாதங்களாக சம்பளம் பெறாமல் மாணவர்களுக்காக பணியாற்றி வருகிறார்கள்.  கோடை விடுமுறை காலங்களில் இவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதில்லை என்பது வெகுமக்கள் பலருக்கும் தெரியாத ஒன்று. 


இவர்கள் தற்பொழுது தங்களது கோரிக்கைகளுக்காக கல்லூரி வாயிலில்  பெரும் முழக்கமிட்டு நிற்கிறார்கள்.  கல்வியாளர்கள் இவர்கள்.  இவர்களுக்கான குறைகள் களையப்பட வேண்டும்.  


பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற வாயில் முழக்க போராட்டத்தில்....


பல்கலைக்கழக மானியக் குழு நிர்ணயித்தவாறு ரூபாய் 50 ஆயிரம் சம்பளமாக வழங்க வேண்டும். 


எழுத்து தேர்வை ரத்து செய்துவிட்டு அரசாணை 56 ஐ அமல்படுத்த வேண்டும். அதாவது பல ஆண்டுகளாக பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் 


12 மாதமும் ஊதியம் வழங்க வேண்டும். 


பெண் கௌரவ விரிவுரையாளர்களுக்கு மகப்பேறு கால விடுப்பு வழங்க வேண்டும். 


பணியில் இருந்து இறந்தவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும்.


என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை, தமிழ்நாடு அரசுக்கும், உயர் கல்வித்துறைக்கும்  வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். 


இந்தப் போராட்டத்திற்கு கௌரவ விரிவுரையாளர்கள் சங்கத் தலைவர்  சு.நித்தியசேகர் தலைமை வகித்தார். செயலாளர் வினோத், பொருளாளர் 

எஸ்.ஜமுனா ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். 


இதில், 16 பெண்கள் உள்ளிட்ட 23 கௌரவ விரிவுரையாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.


அரசு உடனடியாக இந்த கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் என்று மெய்ச்சுடர் வலியுறுத்துகிறது.




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா