கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?


தேசத்தின் விடியலுக்கான தலையெழுத்தை எழுதிக் கொண்டிருக்கும் இவர்களின் வாழ்வு இருண்டு கிடக்கிறது.

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கல்லூரிகளில் பெயரளவில் கௌரவப் பணி.  

இவர்களுக்கு நிரந்தர பணி வாய்ப்பு என்பது கானல் நீராகவே கரைகிறது. 

தொகுப்பூதியம், 
11 மாத கால ஒப்பந்த பணி, 
பெயர்தான் கௌரவப் பணி என்றாலும் பணியிடத்தில்  நிரந்தரப் பணியாளர்களால் கொத்தடிமைகளாக நடத்தப்படுவது 
இதுதான் இவர்களின் இன்றைய  நிலை. 

 தமிழ்நாடு முழுவதும் 7,300 க்கும் மேற்பட்ட கௌரவ விரிவுரையாளர்கள் அரசு கல்லூரிகளில் பணியாற்றி வருகிறார்கள்.  

 பல கல்லூரிகளில் பெரும்பான்மையாக கற்பித்தல்  பணியோடு ஒட்டுமொத்த கல்லூரியில் இருக்கும் அனைத்து பணிகளையும் மேற்கொள்பவர்கள் இவர்கள்தான்.

 துறைத்தலைவர்களே  இல்லாமல் பல கல்லூரிகளில் இவர்களைக் கொண்டே துறைகள் இயங்கி வருகிறது.  

இவர்கள்தான் 20 ஆண்டுகளுக்கும் மேலாக லட்சக்கணக்கான  பட்டதாரிகளை உருவாக்கி இருக்கிறார்கள்.  

ஆனாலும் இவர்களின் பணி, நிரந்தரம் செய்யப்படாமல்  தற்காலிக  பணியாகவே தொடர்கிறது. தற்காலிக பணியே இங்கு நிரந்தரமாகிவிட்டது என்பது வேதனைக்குரியதாக உள்ளது.

கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்து தருகிறோம் என்று தேர்தல் காலங்களில், தேர்தல் கட்சிகளால் வாக்குறுதி வழங்கப்படுகிறது.  ஆட்சிக்கு வந்த பிறகு இவர்களின் நிலை குறித்து எந்த கட்சியும் கவலை கொள்வதில்லை. 

தற்பொழுது தமிழ்நாடு அரசு உதவி பேராசிரியர்களுக்கான  4000 பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இணையதளம் மூலம்  விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.  

பணியாற்றும் 7365 கௌரவ விரிவுரையாளர்களில் தொடக்கத்தில் நியமனம் செய்யப்பட்ட சுமார் 1300  விரிவுரையாளர்களைத் தவிர அத்தனை பேரும் பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரைக்கும் கல்லூரி உதவிப் பேராசிரியருக்கான கல்வித் தகுதியைப் பெற்றவர்கள் தான்.  

அதிலும் பலர் சிறப்புத் தேர்வு எழுதி பணி வாய்ப்பைப் பெற்றவர்கள். 

அப்படியிருக்கும் இந்நிலையில், அனைத்து தகுதிகளோடும் பலவருடங்களாக பணியாற்றும் கெளரவ விரிவுரையாளர்களை  பணி நிரந்தரம் செய்யாமல்  முதுநிலை பட்டப்படிப்பை படித்து விட்டு செட் தேர்விற்கு விண்ணப்பிப்பவர்கள் கூட உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு எரியும்  நெருப்பில் எண்ணையை ஊற்றுவதுபோல உள்ளது. மேலும்  கல்வியாளர்களை பெரும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது

காலம் காலமாக நிரந்தர பணி வாய்ப்பு கிடைக்கும் என்று காத்துக் கிடந்த இவர்களின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது.  இவர்களை நம்பியுள்ள இவர்களின் குடும்பத்தினர் வாழ்வும் பரிதாபகரமாக மாறி உள்ளது.

தகுதி தேர்வுக்கான அறிவிப்பிலும் கூட ,  கௌரவ விரிவுரையாளர்களின் பணி அனுபவத்தை பயன்படுத்திக் கொள்வதற்கான எந்த சிறப்பு அறிவிப்புகளும் அறிவிக்கப்படவில்லை. 

இதுகுறித்து அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் சென்னகிருஷ்ணன் கூறியதாவது, 



"இந்த அரசு கல்வி கற்றவர்களை மிக மோசமாக நடத்துகிறது, 

முனைவர் படிப்பு போன்ற ஆய்வுப் படிப்புகளை மேற்கொள்வதற்கான  மாணவர்களின் ஆர்வத்தை சிதைக்கிறது.  


உதவி பேராசிரியர் பணிக்கு பணி  அனுபவம் கட்டாயம் என கூறிவிட்டு ஒட்டுமொத்த உழைப்பையும் உறிஞ்சிவிட்டு ஓடானபின்பு பேராசிரியர் பணிக்கு  அனுபவமே தேவையில்லை என்பதை வலியுறுத்துகிறது, 

பணி பாதுகாப்பு இல்லாமல் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிக பணியாளர்களாக பணியாற்றி வரும் எங்களை வஞ்சிக்கிறது.  

தமிழ்நாட்டில் பெரும்பாலான கல்லூரிகள் கௌரவ விரிவுரையாளர்களைக் கொண்டே செயல்படுகிறது.  எந்த அதிகாரமும் இல்லாமல் மாணவர்களின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு மிகக்குறைந்த தொகுப்பு ஊதியத்தில்  20 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறோம்.

இங்குள்ள தனியார் கல்லூரிகளில் எங்களை விட மிகக் குறைந்த  அனுபவம் கொண்ட உதவி பேராசிரியர்களால் கூட ஆய்வு நெறியாளராக செயல்பட முடிகிறது.  முனைவர் பட்டம் பெற்று போதிய பணி அனுபவமும் பெற்றுள்ள எங்களை  பிஎச்டி, எம் ஃபில் போன்ற ஆய்வுப் படிப்புகளுக்கு நெறியாளர்களாக செயல்பட அரசு அனுமதிக்கவில்லை.  

தற்போது வரை தமிழ்நாட்டில் உள்ள பல கல்லூரிகளில் பல்வேறு துறைகளில் துறைத் தலைவர் கிடையாது.   நாங்கள்தான் தலைவர் ஆற்ற வேண்டிய பணிகளைச் செய்கிறோம்.  அப்படி இருந்தும் துறைக்கு தொடர்பு இல்லாத வேறொரு துறை தலைவருக்கு அறிக்கை அளித்து ஒப்புதல் பெற்று பணியாற்ற வேண்டிய அவல நிலையில் உள்ளோம்.  

எங்களின் 11 மாத கால ஒப்பந்த பணி முடிந்த பிறகு அடுத்த கல்வி ஆண்டில் அடியெடுத்து வைத்ததும் நாங்கள் முதல் சம்பளத்தைப் பெறுவதற்குள் தீபாவளி கடந்து விடும். 

இப்படி எல்லாம் பல நெருக்கடிகளுக்கு உட்பட்டு தான் இந்த பணியை இதுவரை செய்து வருகிறோம் எப்டியாவதும் அரசு எங்களை பணிநிரந்திரம் செய்திவிடும் என்ற கனவுகளோடு.   

ஐந்து ஆண்டுகளுக்கு மேல் கௌரவ விரிவுரையாளர்களாக பணியாற்றும் தகுதி வாய்ந்தவர்களை பணி நிரந்தரம் செய்வதற்காக 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு வெளியிடப்பட்ட அரசாணை 56 படி 12 வாரத்திற்குள் அதே முறையில் முடிக்கவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை செயல்படுத்தாமல் கெளரவ விரிவுரையாளர்களின்  பணிநிரந்தர கனவை கானல் நீராக்கி வருகிறது இந்த அரசு.   

இந்த அரசாணையின் குளறுபடிகளை சரி செய்து எங்களை பணி நிரந்தரம் செய்வதாக தற்பொழுது உள்ள ஆட்சியாளர்கள் கூறினார்கள்.  ஆனால் இதுவரை அவர்களின் உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை.  எங்களில் ஒருவரைக் கூட பணி நிரந்தரம் செய்யவில்லை.

தற்பொழுது உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதி தேர்வை நடத்துவதாக அறிவித்துள்ளது.   

எந்தப் பணி அனுபவமும் இல்லாத முதுநிலை பட்டப் படிப்பை முடித்தவர்கள் கூட ஸ்லெட் தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டு உதவி பேராசிரியருக்கான தகுதி தேர்வை எழுதலாம் என்ற அறிவிப்பு பல ஐயங்களுக்கு வழி வகுக்கிறது.  

பணியிடங்கள் நேர்மையான முறையில் நிரப்பப்படுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது. 
பள்ளிப்படிப்பை முடித்த எங்கள் பிள்ளைகள் நீட் தேர்வை எழுத வேண்டாம் என்றும் 50 வயதை கடந்த நாங்கள் செட் நெட் PhD  முடித்தபின்பும் உதவி பேராசிரியர் பணிக்கு தேர்வை எழுத வேண்டும் என்றும் திராவிட மாடல் அரசு கூறுவது நகைப்பாக உள்ளது.

பல்லாண்டுகளாக பணியாற்றும் எங்களின் தகுதியை கருத்தில் கொள்ளாமல், நடத்தப்படும் இந்தத் தேர்வு   எங்களால் உருவாக்கப்பட்ட லட்சக்கணக்கான பட்டதாரிகளின் தகுதியையும் அவர்கள் பெற்ற பணி வாய்ப்பையும் அவமதிப்பதாகும்.

நாங்கள் பெற்ற முனைவர் பட்டம் எங்களுக்கான பணி வாய்ப்பைத் தரவில்லை  எங்களின் கல்லறையில் பெயருக்கு பின்னால் போட்டுக் கொள்வதற்கு தான் பயன்பட போகிறது. 

 பொதுமக்கள், கல்வியாளர்கள், கல்வியின் மீது அக்கறை கொண்டவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் அரசு கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்களின் நிலை குறித்து வெளிப்படையாக பேச வேண்டும். எங்களுக்கான வாழ்வாதாரம் குறித்து ஆட்சியாளர்களிடம் கேள்வி கேட்க வேண்டும்.  

தமிழ்நாடு அரசிடம் ஒரே ஒரு கோரிக்கையை மட்டுமே முன் வைக்கிறோம்.  

2020 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணை 56 இன் படி உரிய அனுபவம் பெற்ற கல்வித் தகுதியைப் பெற்ற கௌரவ விரிவையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.  
கிராமப்புற பல லட்சக்கணக்கான மாணவர்களின் படங்களுக்கு பின்னால் எங்களின்  உழைப்பு உள்ளது என்பதை அரசு கருத்தில் கொள்ளவேண்டும்.


இருப்பது வருடங்களுக்கு முன்பு முனைவர் பட்டம் பெற்று அரசு கல்லூரிகளில் கெளரவ விரிவுரையாளர்களாக பணியாற்றும்  எங்களை பணிநிரந்திரம் செய்யவில்லையென்றால் எங்களிடம் கற்கும் மாணவர்களை எங்களைப்போல்  முனைவர் பட்டம்வரை  படியுங்கள் என்று எந்த மனநிலையோடு நாங்கள் வழிகாட்ட முடியும்?  இந்த தேசத்தில் கல்வி கற்றது ஒரு பாவ செயலோ என என்னும் மனநிலைக்கு இந்த அரசு எங்களை தள்ளியுள்ளது உள்ளபடியே மிக வேதனையாக உள்ளது.


பணி நிரந்தரம் இல்லாமலேயே 20 ஆண்டு காலம் பணியாற்றிய எங்களின் நிலையை அரசு நினைத்துப் பார்க்க வேண்டும்.  

ஒருவேளை தகுதி தேர்வு நடத்தப்பட்டு  உதவிப் பேராசிரியர்களின் பணியிடங்கள் நிரப்பப்பட்டால், இதுவரை பணியாற்றிய  எங்களின் வாழ்வாதார நிலை குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும்" என்றார்.

கருத்துகள்

  1. வணக்கம் ஐயா, அரசு கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் மட்டுமே உள்ளது, மாறாக தமிழகத்தில் உள்ள அரசு பல்கலைக் கழக விரிவுரையாளர்கள் பற்றி எந்த தகவலும் நீங்களும் அளிக்க மாட்டேங்குறீங்க, அரசுக்கும் இது வெளியே தெரிவது இல்லை,நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை எங்களுக்கு வருடம் 9 மாதங்கள் மட்டும் ஊழியம், சர்வீஸ் அப்படி தான் அளிக்கிறார்கள், உங்களால் முடிந்தால் பல்கலைக் கழக கௌரவ விரிவுரையாளர்களுக்கும் உதவும் படி மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களுக்கு அளிக்கும் சலுகைகள், பல்கலைக் கழக கௌரவ விரிவுரையாளர்களுக்கும் வழங்கும் படி மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்

      நீக்கு
  2. Employment to Previous Qualified as UGC , Faculties with Experience is Honest and Ethics..

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா