உழைத்துப் பிழைப்பதே உயர்வு! - தோழர் சிவகாமி அம்மாளின் அற வாழ்வு.
பேராவூரணி வட்டம், செங்கமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் தோழர் வீ.சிவகாமி.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு பொதுமக்களுக்கான களப்போராட்டங்களில் முன் நிற்பவர்.
மாதர் சங்கத்தின் ஒன்றியப் பொறுப்பாளராக உள்ள இவர் மாவட்ட குழு உறுப்பினராகவும் உள்ளார்.
பொதுமக்கள் நலன் சார்ந்த இவரின் விண்ணப்பங்களை இப்பகுதியில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் கனிவாகவும் உடனடியாகவும் பரிசீலனை செய்வார்கள்.
தனது வயது மூப்பிலும் அயராது உழைத்து வருகிறார் தோழர் சிவகாமி.
30 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்வண்டி பயணிகளுக்கு சுவையாக தேனீர் தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.
அகலப்பாதை பணிகளுக்காக தொடர்வண்டி போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்த காலத்தில் 100 நாள் பணி செய்து தன்னையும், வயது முதிர்ந்த தனது கணவரையும் காத்துக் கொண்டு கட்சிப் பணிகளையும் கடமை மாறாமல் செய்து வந்துள்ளார்.
மருத்துவமனை சிக்கல்கள், கிராமச் சாலை சிக்கல்கள், 100 நாள் வேலைக்கான ஊதிய சிக்கல்கள் என பொதுமக்களின் தேவைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
தற்பொழுதும் ஒரு கையில் தேநீர் பாத்திரத்தோடும் மற்றொரு கையில் பலகாரப் பையுடனும் தனது கால்களை ஊன்றி தொடர் வண்டிகளில் ஒவ்வொரு பெட்டியாக கடந்து பயணிகளிடம் பரிவு காட்டி தேநீர் வியாபாரம் செய்து வருகிறார்.
தனியாக தொடர்வண்டியில் பயணிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு அரணாகவும் இருக்கிறார்.
உள்ளத்தில் ஊறிப்போன சிகப்பு சிந்தனையோடு, அகத்தின் அழகை காட்டும் வெள்ளை சிரிப்போடு "ஆயா வடை வேணுமா", "தம்பி டீ வேணுமா" என்று இவர் கேட்கும் பொழுது களைத்துப்போன உள்ளங்கள் உயிர் பெறுகிறது.
அன்புத் தோழர் சிவகாமி அம்மையாரின் அறவாழ்வை மெய்ச்சுடர் போற்றுகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக