சித்திரைத் திருவிழாவில் ஓர் உணவுத் திருவிழா
தாத்தாவும் பாட்டியும் சேர்ந்து வாழும் குடும்பங்களில் சாயங்கால நேரங்களில் கிடைக்கும் கொழுக்கட்டை, பணியாரம், சுழியம், போலி, வடை, சிறுதானிய அடை போன்ற உணவு வகைகள் தற்பொழுதெல்லாம் வீடுகளில் உண்ணக் கிடைப்பதில்லை.
சாயங்கால நேரங்களில் பிள்ளைகளுக்கு கொடுக்க பாக்கெட் களில் அடைக்கப்பட்ட பன்னாட்டு நிறுவனங்களின் நொறுக்கு தீனிகளையே வாங்கிக் கொடுக்கிறோம். அந்த நொறுக்கு தீனிகளில் சேர்க்கப்பட்டுள்ள சுவையூட்டும் உப்புகள் பிள்ளைகளின் உடல்நலத்தை பெரிதும் பாதிப்பதை யாரும் உணர்வதில்லை.
பாரம்பரிய பண்பாட்டு உணவு வகைகளை இளைய தலைமுறை அறியும் வகையில் பேராவூரணி திருநீலகண்ட பிள்ளையார் திருக்கோவில் திருவிழா காலத்தில் உணவுத் திருவிழா நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள் இளம் பொறியாளர்கள்.
"எங்க வீட்ல, பாட்டி செஞ்சு கொடுத்த பலகாரங்களை பக்கத்து வீட்டுக்காரங்க கிட்ட கொடுக்கும்போது அந்த வீட்டுக் குழந்தைங்களுக்கு பலகாரத்தோட பெயர்களே தெரியல. சாப்பிட்டு பார்க்காமலேயே 'எனக்கு வேணாம்' னு சொன்னாங்க.
நாங்க படிக்கிறதுக்காக வெளியூருக்கு போயிட்டு ரொம்ப நாள் கழிச்சு வீட்டுக்கு வந்து ஆசை ஆசையா சாப்பிடும் பலகாரங்கள பல பிள்ளைகள் அறியாமை இருக்கிறத நெனச்சு வருத்தமா இருந்துச்சு.
ஏழையோ பணக்காரங்களோ எல்லா பெற்றோர்களும் கடையில் விக்கிற பன்னாட்டு நிறுவன நொறுக்கு தீனி பாக்கெட்டுகளை வாங்கி பிள்ளைகளுக்கு கொடுக்கிறத நினைச்சு கவலையா இருந்துச்சு.
அப்பா அம்மா ரெண்டு பேரும் வேலைக்கு போறாங்க, வீட்ல பிள்ளைகளுக்கு சுவையா சமைச்சுக் கொடுக்க ஆளில்ல. புள்ளைங்க பீட்சா பர்கர் னு உடம்புக்கு ஒவ்வாத உணவுகளை வாங்கி சாப்பிட்டு உடம்பை கெடுத்துக்குறாங்க.
பாரம்பரிய உணவை நம் பகுதியில் அறிமுகம் செய்யணும்னு வீட்ல சொன்னோம். 'தாராளமா செய்யுங்க'ன்னு சொல்லி கூடவே இருந்து உதவி செய்யறாங்க அம்மா, வீட்ல எல்லாரும் ரொம்பவே ஒத்துழைக்கிறாங்க" மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியமாய் பேசுகிறார் ராஜகௌரி. இவர் ஒரு கணினிப் பொறியியல் பட்டதாரி. இவரோடு இணைந்து கொண்ட இவரின் தோழி மேனகா, இவரும் ஒரு பொறியாளர்.
நகரமும் கிராமமும் இல்லாத பேராவூரணியைப் போன்ற பகுதிகளில் பெண்களின் எந்த முன்னெடுப்புகளுக்கும் வீட்டில் பெரும் தடை இருக்கும். அந்தத் தடைகளை எல்லாம் தாண்டி வெளியே வரும் பெண்களுக்கு சமூகத்தில் அதைவிட அதிகமாக ஏச்சும் பேச்சும் எக்கச்சக்கமாய் இருக்கும்.
எல்லாவற்றையும் தாண்டி தன்னம்பிக்கையை தகர்க்கும் தயக்கத்தை விட்டெறிந்து வீட்டின் பெரும் ஒத்துழைப்போடு உணவுத் திருவிழாவை கோலாகலமாய் கொண்டாடி வருகிறார்கள் இந்தப் பொறியாளர்கள்.
பிள்ளைகளின் நியாயமான எந்த முன்னெடுப்புக்கும் தடையேதும் சொல்லாமல் பக்கபலமாய் நிற்கிறார் ராஜகௌரியின் அம்மா கீதாமிருணாளினி. இவரும் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்கள் பொதுவெளிக்கு வருவதும் அதிலும் சமூக சிந்தனையோடு களமாடுவதும் போற்றுதலுக்குரியது. மெய்ச்சுடர் இந்த இளம் பொறியாளர்களை பாராட்டி கை கொடுக்கிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக