வண்ணமயமான விளையாட்டு விழா
அரசுப் பள்ளிகளில் விளையாட்டு விழா என்பது பெரும் கொண்டாட்டம். இலக்கியப் போட்டிகள் ஒரு சில மாணவர்களுக்கு மகிழ்ச்சியை தரும். விளையாட்டு விழா என்பது எல்லா மாணவர்களுக்கும் மன மகிழ்ச்சியை உருவாக்கும்.
பள்ளி வளாகம் எங்கும் வண்ண வண்ண கொடிகள் பறக்கும். ஒலிம்பிக் போட்டியை போன்று ஒலிம்பிக் சுடர் ஒரு குறிப்பிட்ட எல்லையில் இருந்து மாணவ விளையாட்டு வீரரால் தொடர் ஓட்டமாக பள்ளி வளாக விளையாட்டு மைதானம் வரை எடுத்து வரப்படும். அந்த மாணவ விளையாட்டு வீரரின் மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை. விளையாட்டு மைதானத்தில் சிறப்பு விருந்தினர்களால் ஒலிம்பிக் கொடி ஏற்றி வைக்கப்படும். விளையாட்டு விழாவில் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்கள் தங்களை ஒலிம்பிக் வீரர்களைப் போன்றே நினைத்துக் கொண்டு போட்டிகளில் பங்கேற்பது பரவசத்தை ஏற்படுத்தும்.
ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் மூன்று அடுக்கு வெற்றிப் படிகளில் ஏறி நின்று பதக்கத்தையும் சான்றிதழ்களையும் பெறும் பொழுது மாணவர்கள் அடையும் மகிழ்ச்சிக்கு அளவில்லை. மாணவர்கள் எந்த பள்ளியில் இருந்து வருகிறார்களோ அந்தப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் எழுப்பும் கரவொலி ஒட்டுமொத்த விளையாட்டு வளாகத்தையும் எழுச்சி பெற வைக்கும்.
இவைகள் எல்லாம் அரசுப் பள்ளிகள் மாணவர்களுக்கு வழங்கும் கொடை.
அப்படி ஒரு விழாவை நேற்று 21.08.2024 தஞ்சாவூர் மாவட்டம், பெருமகளூர் பேரூராட்சி, அரசு மேல்நிலைப்பள்ளி கண்டது.
சட்டமன்ற உறுப்பினர் நா. அசோக்குமார் அவர்களால் ஏற்றப்பட்ட ஒலிம்பிக் சுடர் கடைத்தெரு வழியாக பள்ளி விளையாட்டு மைதானத்தை வந்தடைந்து மாணவர்களின் பெரும் ஆரவாரத்திற்கு நடுவே வளாகத்தில் ஏற்றி வைக்கப்பட்டது.
தேசியக் கொடியுடன் ஒலிம்பிக் கொடியும், வட்டார விளையாட்டு குழுவிற்கான கொடியும் விளையாட்டு மைதானத்தில் ஏற்றி வைக்கப்பட்டது.
பள்ளி மாணவிகளின் கண்கொள்ளா கலை நிகழ்ச்சிகளுடன் குறுவட்ட அளவிலான விளையாட்டு விழா தொடங்கியது.
தடகள போட்டிகள் பார்வையாளர்களையும் பங்கேற்பாளர்களையும் மகிழ்ச்சி பொங்க வைத்தது.
வெற்றி பெற்ற வட்டார அளவிலான பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு பதக்கங்களையும் பரிசுகளையும் வழங்கி சட்டமன்ற உறுப்பினர் விழாப் பேருரை ஆற்றினார்.
நிகழ்வில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் பகல் உணவு வழங்கப்பட்டது.
வட்டார அளவிலான பள்ளிகளில் இருந்து விளையாட்டு ஆசிரியர்கள் மாணவர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
பள்ளியின் தலைமையாசிரியர் கணேசன், விளையாட்டு ஆசிரியர் ஜெய்சங்கர் மற்றும் ஆசிரியர்கள் விளையாட்டு விழாவிற்கான விரிவான ஏற்பாடுகளை மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.
மதிப்பெண் அரசியலுக்குள் மூழ்கிக் கிடக்கும் கல்விச் சூழலில் இது போன்ற அரசுப் பள்ளிகளில் நடத்தப்படும் விளையாட்டு விழாக்கள் அரசுப் பள்ளிகள் மீதான நம்பிக்கையை மீண்டும் துளிர் விட செய்கிறது.
பெருமகளூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், உள்ளாட்சி நிர்வாகம், பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம், ஆசிரியர்கள் அனைவருக்கும் மெய்ச்சுடரின் வாழ்த்துகள்.
A very nice and pleasant experience for our students...Thanks to everyone who worked to make the event beatiful and successful..
பதிலளிநீக்கு