விடுதலைப் போராட்ட வீரர் பேராவூரணி மண்ணின் மைந்தர் ஐயா மருதையா செட்டியார்


இந்திய விடுதலை என்பது 300 ஆண்டுகால வேள்வி. 


வீரபாண்டிய கட்டபொம்மன், வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், தீரன் சின்னமலை போன்ற குறு நில மன்னர்கள்

ஆட்சி காலத்தில் தொடங்கி வைக்கப்பட்ட விடுதலைக் கருத்தியல், மக்களாட்சியாய் மலர்ந்ததும் பேரெழுச்சி பெற்றது.


முப்பது கோடி முகமுடைய இந்திய துணைக் கண்டத்தின் ஒவ்வொருவரின் கனவாக கனன்று கொண்டிருந்தது போராட்ட நெருப்பு.  


மகாத்மா காந்தியடிகள் தலைமையில் அகிம்சை முறையிலும், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தலைமையில் ராணுவ கட்டமைப்போடும் இந்திய விடுதலைப் போராட்டம் வீறு கொண்டு எழுந்தது. 


தமிழ்நாட்டில் கப்பலோட்டிய தமிழர் வஉசி, மகாகவி பாரதியார், திருப்பூர் குமரன், சிந்தனை சிற்பி சிங்காரவேலர், கர்மவீரர் காமராஜர் என எண்ணற்ற தலைவர்கள் தங்கள் வாழ்க்கையை விடுதலைப் போராட்டத்திற்காக ஒப்புக் கொடுத்தனர். 


அவர்களைப் பின்பற்றி லட்சக்கணக்கான தமிழர்கள் விடுதலைப் போராட்டத்தில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டனர்.


காந்தி, நேரு, சுபாஷ் சந்திர போஸ், பகத்சிங் என இந்திய விடுதலைக்கு போராடிய வீரர்கள் வரிசையில் போற்றப்பட வேண்டிய எண்ணற்ற எளிய மனிதர்கள் நம் நினைவுகளில் இல்லாமல் இந் நிலத்தில் புதைக்க பட்டிருக்கிறார்கள். 


அந்த வரிசையில் நாம் கொண்டாடப்பட வேண்டிய பேராவூரணி மண்ணின் மைந்தர் விடுதலைப் போராட்ட வீரர் ஐயா மருதையா செட்டியார். 


புரட்சிக்காரர் ஐயா மருதையாவை பற்றி அறிந்திருக்கிறோமா? 


நாம் ஓடி ஆடிய வீதிகளில் அவரும் விளையாடி இருக்கிறார் என்ற விவரம் தெரியுமா உங்களுக்கு? 


பொன்னாங்கண்ணிக்காடு சிதம்பரம் சாலையில் குடிசை வீட்டில் குடியிருந்திருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியுமா? 


அவர்தான் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அழைப்பின் பெயரில் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியவர்.  


திருமணமான ஒரு மாத காலத்திற்குள் கருவுற்றிருந்த தனது இளம் மனைவியை இங்கேயே விட்டுவிட்டு "பிறக்கும் குழந்தையை தேசபக்தனாக வளர்த்திடு" என்று கூறிவிட்டு விடுதலை வேள்வியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். 


விடுதலை பெற்றால் வீடு திரும்புவேன் இல்லையென்றால் போராட்டக் களத்தில் வீரனாக செத்து மடிவேன் என்று கூறிவிட்டு சென்றவர் 


இந்தியா விடுதலை பெற்ற பிறகு தனது குழந்தை ஆணா பெண்ணா என்று கூட அறியாமல், மகளுக்கு 10 வயதாகும் பொழுது வீடு திரும்பி தனது ஆசை மனைவியையும் அழகு குழந்தையையும் அள்ளி அணைத்துக் கொண்டவர் ஐயா மருதையா. 


நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவாக்கிய இந்திய தேசிய ராணுவத்தில் கொரில்லா ரெஜ்மென்ட் டில் மிகக் கடுமையான போராட்டங்களில் தனது இளமையை தொலைத்தவர் ஐயா மருதையா அவர்கள். 


"விடுதலை உணர்வென்பது குருதியில் நிறைந்திருக்க வேண்டும், அடிமை விலக்கை ஒடித்தெரிய ஒன்றுபட்டு போராட வேண்டும். பெற்ற விடுதலையை பேணிக் காக்க வேண்டும்" என்று தனது இறுதி மூச்சு உள்ளவரை இல்லத்தில் உள்ள ஒவ்வொருவரிடமும் உணர்த்திக் கொண்டே இருந்தவர் ஐயா மருதையா அவர்கள்.  


விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு வழங்கிய ஓய்வூதியத்தை தனது இறுதி நாட்கள் வரை வாங்க மறுத்தவர்.  


கை கால்கள் தளர்ந்து முதுமையில் தள்ளாடிய காலத்தில் குடும்பம் வறுமையின் கோரப் பிடியில் சிக்கிய நிலையில் அவரது மனைவி காத்தாயி அம்மாள் ஐயாவின் மருத்துவச் செலவிற்கு ஓய்வூதியத்தை கேட்டு பெற்றிருக்கிறார்.  


வரலாறாய் வாழ்ந்து கொண்டிருக்கும் ஐயா மருதையா செட்டியார் அவர்கள் இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் விண்மீனாய் ஒளிர்ந்து கொண்டே இருப்பார்.


இந்திய விடுதலை நாளில் ஐயாவின் ஈகத்தை போற்றுவோம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா