தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில் பார்வை திறன் குன்றியோர் பள்ளிகளுக்கு பேசும் பேனா வழங்கப்பட்டது

பார்வைத் திறன் குறைபாடுள்ள மாணவர்கள் பயிலும் பள்ளிகளுக்கு தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில் பேசும் பேனா வழங்கப்பட்டது. 


பார்வைத் திறன் இல்லாத மாணவர்கள் படிப்பதற்காக பிரைலி எழுத்துக்கள் பயன்படுத்தப்படுகிறது. 


 6 புள்ளிகளைக் கொண்டு அகிலம் முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான மொழிகளை படிப்பதற்காக பிரெய்லி எழுத்துக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. 


 இந்த எழுத்துக்களை தொடக்க நிலையில் உள்ள மாணவர்கள் கற்றுக் கொள்வதற்காக தனித்துவமாக உருவாக்கப்பட்டது தான் பேசும் பேனா. 


 பிரெய்லி எழுத்துக்களை வருடி இந்த பேனாவை அந்த எழுத்துக்களின் மீது பதிந்தால் எழுத்துக்களின் ஒலிப்பை பேனா உச்சரிக்கும். 


 இது பார்வைத்திறன் சவால் கொண்ட மாற்றுத்திறன் மாணவர்களுக்கு வரமாக உள்ளது.  


இந்த பேசும் பேனாவை தமிழ்நாடு அறக்கட்டளை பார்வைத்திறன் சவால் கொண்ட மாணவர்கள் பயிலும் பள்ளிகளுக்கு வழங்கி வருகிறது.  


தமிழ்நாடு அறக்கட்டளையின் முதன்மை செயல் அலுவலர் முனைவர் க.இளங்கோ தனது கனவு திட்டமான பேசும் பேனா வழங்கும் நிகழ்வை திருச்சிராப்பள்ளி, புத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை அரசு நடுநிலைப் பள்ளிகளில்  தொடங்கி வைத்தார்.


அவர் கூறியதாவது, "இது பார்வைத்திறன் சவால் கொண்ட மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உந்து சக்தியாக இருக்கும்.


அவர்களின் திறனை மேலும் அதிகப்படுத்தும். பார்வைத்திறன் சவால் கொண்ட மாற்றுத்திறன் மாணவர்கள் பல்வேறு துறைகளில் சாதித்து வருகிறார்கள்.


எனக்குத் தெரிந்து ஒரு மாணவி பள்ளியில் படிக்கும் பொழுது ஆட்சியராக வரவேண்டும் என்று தனது இலக்கை கூறினார். எனக்கு வியப்பாக இருந்தது. 


ஆனால் அந்த மாணவி பள்ளிப் படிப்புக்கு பின் சிறந்த கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்து வங்கித் தேர்வு எழுதி வங்கி அதிகாரியாக என்னைச் சந்தித்தார்.

 

தொடர்ந்து மீண்டும் ஆட்சிப் பணித் தேர்வுக்கு முயற்சி செய்து ஐஎஃப்எஸ் அதிகாரியாக தன்னை உயர்த்திக் கொண்டார்.


 இப்பொழுதும் எனது சொற்களை உந்து சக்தியாக ஏற்றுக்கொண்டுள்ள அந்த ஐஎஃப்எஸ் அதிகாரியின் திறன் தான் என்னை இந்தக் கருவியை இங்கு வழங்க வைத்திருக்கிறது.


உங்களின் திறன் எல்லோரிலும் மேலானது. வாழ்வில் உயர்ந்து நில்லுங்கள்" என்று மாணவர்களிடம் உரையாடினார்.


நிகழ்வில் மாணவர்கள் தங்கள் கைகளால் பேசும் பேனாவை வருடி பிரைலி எழுத்துக்களில் பதித்து எழுத்துக்களின் ஒலிப்பை காதுகளில் உணர்ந்து மகிழ்ந்தனர்.


 மீண்டும் மீண்டும் எழுத்துக்களில் பதித்து ஒலிப்பு முறையை அறிந்து கொள்ள இது பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்று ஆசிரியர்கள் கருத்து தெரிவித்தனர்.


நிகழ்வுகளில் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், திட்ட ஒருங்கிணைப்பாளர் நா.வெங்கடேசன் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.








கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா