இதைக் கேட்பாரில்லையா? - வாசல்களை அடைத்து மக்களின் வாழ்வாதாரத்தை முடக்கும் ஒன்றிய ரயில்வே துறையின் அடாவடித்தனம்! கொதிக்கும் மக்கள்!
அறந்தாங்கி - பேராவூரணி - பட்டுக்கோட்டை வழித்தடங்களில் ரயில்வே சாலைக்கு குறுக்கே கிராமங்களுக்குள் செல்லும் பாதைகளில் எல்லாம் பள்ளங்களைத் தோண்டி மக்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் தென்னக ரயில்வேயின் அடாவடித்தனத்தை நம் தளத்தில் பலமுறை அம்பலப்படுத்தி இருக்கிறோம்.
5 ஆண்டுகளுக்கு முன்பு நீலகண்டபுரம் பகுதியில் அமைக்கப்பட்ட(?) கீழ் பாலம் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய பிறகு அடுத்தடுத்த பகுதிகளுக்கு இதை அனுமதிக்கக் கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்தினோம்.
மக்களின் பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி தொடர்ந்து ஒன்றிய ரயில்வே துறை, கீழ் பாலங்கள் அமைப்பதாக கூறி கிராமங்களுக்குள் செல்லும் பாதைகளை பள்ளங்களாக மாற்றி வருகிறது.
மக்களிடம் போராட்ட எழுச்சி ஏற்படும்பொழுதெல்லாம் வருவாய்த் துறையால் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.
மக்களின் போராட்ட உணர்வை மழுங்கடிக்கும் வகையில் பேராவூரணி, பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் என்று போராடும் மக்களை வெவ்வேறு ஊர்களுக்கு அலைக்கழித்து பேச்சுவார்த்தை என்ற பெயரில் அழைத்து தீர்வு காணாமல் வருவாய்த் துறையும் மக்களை ஏமாற்றி வருகிறது.
பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்ட அமைதி பேச்சு வார்த்தைகளில் ரயில்வே துறை சார்பில் பொய்யான வாக்குறுதிகள் தொடர்ந்து வழங்கப்படுகிறது. எந்த வாக்குறுதிகளையும் ரயில்வே நிர்வாகம் இதுவரை நிறைவேற்றவில்லை.
சொர்ணக்காடு கீழ் பாலத்தை சரி செய்து கொடுக்காமல் அடுத்த பணியை தொடங்க மாட்டோம் என்று வாக்குறுதி கொடுத்தார்கள். அதை நிறைவேற்றாமல் ஆத்தாளூரில் பள்ளிக்கூட சுற்றுச்சுவரை எல்லாம் உடைத்துத் தள்ளி பாதுகாப்பற்ற முறையில் பள்ளத்தை தோண்டி வைத்திருக்கிறார்கள்.
மக்கள் தொகையும் வாகன நெருக்கமும் அதிகரித்து வரும் காலகட்டத்தில், விவசாயப் பணிகளும் தொழில்துறைகளும் கிராமங்களில் வளர்ந்து வரும் சூழலில், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை படுகுழியில் தள்ளி வருகிறது தென்னக ரயில்வே.
வருவாய்த்துறை ஏற்பாடு செய்யும் அமைதிப் பேச்சு வார்த்தைகளில் ரயில்வே துறை அதிகாரிகள் இதுவரை கொடுத்த பொய்யான வாக்குறுதிகள்...
நீலகண்டபுரம் கீழ்பாலத்திற்கு பக்கவாட்டில் மழைக் காலங்களில் இருசக்கர வாகனங்கள் செல்லும் வகையில் தார் சாலை அமைத்து தரப்படும்...
பாலப்பணிகளை துரிதப்படுத்தி கரடு முரடான பாதைகள் சரி செய்து தரப்படும்...
சொர்ணக்காட்டில் அமைக்கப்பட்டு இருக்கும் பாலம் முறையாக திட்டமிடப்படாதது. இதை முற்றிலும் மாற்றித் தருகிறோம்...
ராட்சத இயந்திரங்களைக் கொண்டு மழைக் காலங்களில் உடனடியாக தேங்கி நிற்கும் தண்ணீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்போம்...
கீழக்காட்டில் செங்குத்தாக கீழ் இறங்கும் பாலத்தை முறையாக திட்டமிட்டு மாற்றித் தருகிறோம்....
நீலகண்டபுரம், சொர்ணக்காடு, கீழக்காடு பாலங்களை சரி செய்யும் வரை புதிதாக எந்த பாதையையும் தோண்ட மாட்டோம்...
என்று சுமார் ஐந்து முறை நடத்திய பேச்சு வார்த்தைகளில் அதிகாரிகள் வாக்குறுதிகளை வழங்கினார்கள், இதுநாள்வரை மேற்கண்ட எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை.
ஆத்தாளூரில் கீழ் பாலம் அமைக்க பள்ளம் தோண்டுவதற்கு முன்பே இந்தப் பகுதியின் சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் என பலரையும் பார்த்து மக்களின் சார்பில் கோரிக்கை விண்ணப்பம் வழங்கப்பட்டது.
இந்தப் பாதையை பயன்படுத்தும் மாவடுகுறிச்சி, வாத்தலைகாடு, முடச்சிக்காடு ஊராட்சி மன்றங்களில் பாலம் அமைக்க கூடாது என்று தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது. பேராவூரணி பேரூராட்சியிலும் இந்த கீழ் பாலம் அமைக்கும் பணிக்கு எதிராக தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.
இந்தப் பாலம் அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மெய்ச்சுடர் சார்பில் சட்டமன்ற உறுப்பினரிடம் பலமுறை வலியுறுத்தி இருக்கிறோம். சட்டமன்ற உறுப்பினரும் இந்தப் பாதை மிகவும் முக்கியமான பாதை இதில் கீழ் பாலம் அமைக்க மாட்டார்கள் என்று கூறினார்.
இந்தப் பகுதியின் ஊராட்சி மன்ற தலைவர்கள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் என மக்கள் பிரதிநிதிகள் அத்தனை பேரும் எதிர்க்கும் ஒரு திட்டத்தை மக்களாட்சிக்கு விரோதமாக ரயில்வே துறை அத்துமீறி கீழ் பாலங்களை அமைத்துக் கொண்டே இருக்கிறது.
இது மத்திய அரசு திட்டம்...,
மத்திய அரசை எதிர்த்து நம்மால் ஒன்றும் செய்ய முடியாது...,
இது எல்லா பகுதிகளிலும் அமைக்கப்பட்டு வருகிறது...,
தோண்டி விட்டார்கள் இனி ஒன்றும் செய்ய முடியாது...,
தொடக்கத்திலேயே எதிர்த்திருக்க வேண்டும்...,
இப்படியெல்லாம் மக்களை பேச வைத்து அவர்களை வாழ்நாளெல்லாம் அல்லல்பட்டு வாழ நிர்பந்திக்கும் ரயில்வே துறைக்கு எதிராக மக்கள் உள்ளம் குமுறி இருக்கிறார்கள்.
வெள்ளைக்காரர்கள் வழங்கிய வசதிகளை மக்களாட்சியில் தர மறுக்கும் ரயில்வே நிர்வாகத்தை வன்மையாக கண்டிக்கிறோம்.
கருத்துகள்
கருத்துரையிடுக