"கல்வி மற்றும் வேலை உரிமை தாய்மொழியாம் தமிழ் வழியில் படித்தவர்களுக்கே நூறு விழுக்காடு வழங்க சட்டம் இயற்ற வேண்டும்" பன்னாட்டு தாய்மொழி நாள் விழாவில் சின்னப்பத்தமிழர் பேச்சு.



பேராவூரணி திருக்குறள் பேரவை மற்றும் தமிழ்வழிக் கல்வி இயக்கம் சார்பில் பெரியகத்திக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் பேராவூரணி வடகிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் பன்னாட்டு தாய்மொழி நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

























நிகழ்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ்வழிக் கல்வி இயக்கத்தின் தலைவர் அ.சி. சின்னப்பத்தமிழர், "தற்பொழுது தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு 20 விழுக்காடு மட்டுமே உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கே நூறு விழுக்காடு உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என்ற நிலையை தமிழ்நாடு அரசு உருவாக்க வேண்டும். தமிழ்நாட்டின் தாய் மொழியான தமிழ் மொழிக்கு உரிய முக்கியத்துவத்தை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும். தமிழ்நாட்டின் திட்டங்களின் பெயர்களை தமிழ் மொழியில் வழங்க வேண்டும். தமிழ்நாட்டு வீதிகளில் உள்ள வணிக நிறுவனங்களின் பெயர்கள் தமிழ் மொழியில் எழுதப்பட்டிருப்பதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு தமிழ் ஆட்சி மொழிச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்" என்றார்.


 சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மருத்துவர் துரை. நீலகண்டன்,"தாய்மொழியில் பேசாதே, ஆங்கிலத்தில் பேசு, என்று கூறும் வணிகப் பள்ளிகளை பொதுமக்கள் புறக்கணிக்க வேண்டும். தாய் மொழிக்கு முன்னுரிமை வழங்கும் பள்ளிகளிலேயே தங்கள் பிள்ளைகளை சேர்த்து படிக்கச் செய்ய வேண்டும்" என்றார்.


நிகழ்வில் திருக்குறள் பேரவை தலைவர் ஆறு. நீலகண்டன், தமிழ் வழி கல்வி இயக்க இணைச்செயலாளர் மெய்ச்சுடர் நா.வெங்கடேசன், மாவட்டச் செயலாளர் த. பழனிவேல், செ.சிவக்குமார், ஆயர் த ஜேம்ஸ், சித.திருவேங்கடம், பாரதி ந.அமரேந்திரன், கல்வியாளர் சீ.கௌதமன், மருத.உதயகுமார், அரிமா சங்க பொறுப்பாளர் வ.பாலசுப்பிரமணியன், ஆசிரியர்கள் இரா அருண்குமார், காஜாமுகைதீன், ரேணுகா, காயத்ரி, மைமூன்சுலைக்காள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். 


நிகழ்வில் பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. 


பெரியகக்திகோட்டை பள்ளியில் நடைபெற்ற நிகழ்வுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் அ. மேரிமேகலா, பேராவூரணி வடகிழக்கு பள்ளியில் நடைபெற்ற விழாவில் தலைமை ஆசிரியர் சித்ராதேவி ஆகியோர் தலைமையற்றனர்.



பள்ளிகளில் நடைபெறும் இது போன்ற விழாக்களால்தான் தாய் மொழியாம் தமிழ் மொழிப்பற்று மாணவர்கள் நெஞ்சில் பசுமரத்தாணி போல் நிலை பெற்று நிற்கும் என்பதில் ஐயமில்லை. பேராவூரணி திருக்குறள் பேரவை, தமிழ்வழிக் கல்வி இயக்கம் சார்ந்து செயல்படும் பொறுப்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் மெய்ச்சுடரின் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.

ஆசிரியர், மெய்ச்சுடர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா