தன்னிகரற்ற தமிழை தரணி போற்றச் செய்தவனின் புகழைப் போற்றுவோம்!
உலக மொழிகளில் வழங்கப்பட்டு வரும் பொருள் (meaning) அறியா சொற்களுக்கு வேரினை அறிமுகம் செய்து வைத்தவர்.
உலகத்தின் முதல் மொழி தமிழ், உலகின் முதல் மனிதன் தமிழன் என்று கூறியவர். தமிழ் திராவிட மொழிகளுக்குத் தாய், ஆரிய மொழிகளுக்கு மூலம் என்ற தனது ஆய்வு முடிவுகளை ஆதாரங்களுடன் உலகுக்கு பறை சாற்றியவர்.
உயிர் உருக இவர் செய்த வேர்ச்சொல்லாய்வு, "உலக மொழிகளின் தாய் - தமிழ்" என்பதை உலகறிய செய்தது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம், பிரெஞ்சு, லத்தீன், கிரேக்கம் என 17 மொழிகளின் இலக்கணங்களை கற்றறிந்த ஒரே இந்திய மொழியியல் அறிஞராக போற்றப்படுபவர்.
தமிழ் மொழி சொற்பிறப்பியல் அகர முதலியின் தந்தை என்று அழைக்கப்படுபவர்.
40க்கும் மேற்பட்ட மொழிகளின் சொல் இயல்புகளை கற்று சிறப்பாக சொல்லாராய்ச்சிகளை மேற்கொண்டவர் என்று இவரை நவீன மொழியியல் அறிஞர்கள் கொண்டாடுகிறார்கள்.
அவர்தான் 1902 ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் நாள் ஞானமுத்தன்- பரிபூரணம் அம்மையார் இணையருக்கு பத்தாவது மகனாக பிறந்த மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர்,
இளம் வயதிலேயே பெற்றோரை இழந்து, தாய் வழி பாட்டனாரால் வளர்க்கப்பட்டவர். தனது ஐந்தாம் அகவையிலிருந்து ஆயுட்காலம் முழுதும் மிகக் கொடும் வறுமையோடு தனது வாழ்வினை கடத்தியவர்.
1925 இல் "சிறுவர் பாடல் திரட்டு" என்ற தனது முதல் நூலை வெளியிட்டவர்.
தொல்காப்பிய சூத்திரக் குறிப்புரை, உரிச்சொல் விளக்கம், செந்தமிழ் வரம்பீட்டின் சிறப்பு, தென்மொழி என ஏராளமான கட்டுரைகள், கட்டுரை தொகுப்புகளை எழுதியுள்ளார் இவர் எழுதிய நூல்களில் இசைக்கலம்பகம், இயற்றமிழ் இலக்கணம் ஆகியவை இன்றளவும் போற்றப்படுகிற நூலாகும். தமிழ் அறிஞர்களைப் பற்றியும் பல நூல்களை எழுதியுள்ளார்.
தமிழிலும் ஆங்கிலத்திலும் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும் 150 க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளையும் எழுதி இருக்கிறார். தமிழ் மொழியின் சிறப்பு குறித்து பல்வேறு இடங்களில் தமிழிலும் ஆங்கிலத்திலும் சிறந்த ஆய்வு உரைகளை நிகழ்த்தியிருக்கிறார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1956 முதல் 1961 வரை திராவிட மொழி ஆராய்ச்சி துறையில் பேராசிரியராக பணியாற்றி இருக்கிறார்.
1974 இல் தமிழ்நாடு அரசு செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்டத்தின் முதல் இயக்குனராக பொறுப்பேற்று மிகச் சிறப்பாக பணியாற்றியவர்.
அகவை 79 தனது இறுதி மூச்சை நிறுத்திய வரை அயராது உழைத்த அறிஞர்.
பாவாணர் எழுதிய நூல்களை கல்வி நிலையங்களில் பாடமாக்க தமிழ்நாடு அரசு முனைப்பு காட்ட வேண்டும். வேர்ச்சொல் ஆய்வினை விட்டுவிடாமல் தொடர்ந்திட இந்திய பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் பாவாணர் ஆய்விருக்கையை அமைத்திட இந்திய அரசு முனைந்திட வேண்டும்.
மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணரின் பிறந்தநாள் இன்று.
கருத்துகள்
கருத்துரையிடுக