குறள் நெறி பரப்பும் மாண்புமிகு மருத்துவருக்கு திருக்குறள் பேரவை கூட்டத்தில் பாராட்டு.



பேராவூரணி சேது சாலையில் தர்ஷணா மருத்துவமனை என்ற பெயரில் பிணியோடு வரும் மக்களுக்கு அரணாக இருந்து சிகிச்சை அளித்து வருகிறார் மருத்துவர் துரை.நீலகண்டன்.
எலும்பு முறிவு சிறப்பு சிகிச்சை மருத்துவரான இவர் தனது மருத்துவமனை வளாகத்தில் திருவள்ளுவருக்கு சிலை வடித்து திருக்குறள் நெறி பரப்பும் பணியில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்
-என்ற திருக்குறளுக்கு பொருளாக தனது மருத்துவமனை வளாகத்தை மாற்றி வருகிறார்.
வேதனையோடு வரும் நோயாளிகளுக்கு நோய்க்கான வேரினை கண்டறிந்து அறிவுறுத்துகிறார்.
முழுமையான விழிப்புணர்வு மட்டுமே நோயற்ற வாழ்வுக்கு வழிவகுக்கும் என்று வள்ளுவர் வழி நின்று வகுப்பு எடுக்கிறார்.
பாதிக்கப்பட்டவர்களின் சொற்களை காது கொடுத்து கேட்கிறார். உரிய பதில் மொழிகளை கொடுக்கிறார்.
மதுப்பழக்கத்திற்கு எதிராக மருத்துவர் செய்து வரும் பரப்புரை போற்றுதலுக்குரியது. குடியின் கேடு குறித்து குடிப்பழக்கம் கொண்டவர்களிடமும் அவர்களின் குடும்பத்தாரிடமும் கலந்துரையாடுகிறார்.
விபத்துகளில் பெரும் பங்கு வகிப்பது மதுப்பழக்கம் தான் என்று தமிழகத்தின் வெகு மக்கள ஊடகங்களில் மருத்துவர் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளை எழுதி இருக்கிறார்.
மாணவர்களின் ஒழுக்க மேம்பாட்டுக்காகவும் சமூக நல்லிணக்கத்திற்காகவும் தொடர்ந்து செயலாற்றிவரும் இவர் "பெற்றோர்களே", பிள்ளைகளுக்கு உதாரண மனிதர்கள் என்று உளவியல் பேசுகிறார்.
உடற்பயிற்சியும் மனப்பயிற்சியும் மக்களின் நலப் பயிற்சி. அதுதான் பிணி தீர்க்கும் மாமருந்து என்று பரப்புரை செய்து வருகிறார்.
உடல் நலம் மன நலம் காப்போம் என்ற நோக்கத்திற்காக மருத்துவர் தனது நண்பர்களோடு இணைந்து நடத்திய தொடர் ஓட்டப்போட்டி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிகழ்வில் 2500 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு ஊக்கம் பெற்றனர்.
தான் படித்த புனல்வாசல் அரசு உதவி பெறும் பள்ளி வளாகத்தில், தன்னுடன் படித்த மாணவர்களை இணைத்துக் கொண்டு இவர் நடத்தி வரும் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையம் இளைஞர்களிடம் பெரும் விழிப்புணர்வை உருவாக்கி இருக்கிறது.
தான் இணைந்துள்ள அரிமா சங்க நிகழ்வுகள் தொடங்கி பங்கேற்கும் அனைத்து நிகழ்வுகளிலும் ஒற்றை திருக்குறளையாவது வாழ்வியலாக கடைபிடிக்கப் பழகுவோம் என்று பக்குவமாய் எடுத்துரைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
திருக்குறள் பேரவை, தமிழ்வழிக் கல்வி இயக்கம் போன்ற அமைப்புகளோடு தமிழ், இலக்கியம் சார்ந்த பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.
அடுத்த தலைமுறை ஏழை எளிய பிள்ளைகளின் புகலிடமாக இருக்கப் போவது அரசு பள்ளிகள் மட்டுமே என்று தான் பங்கேற்கும் கூட்டங்களில் எல்லாம் குறிப்பிடும் மருத்துவர் நீலகண்டன், தான் பயின்ற பெரியதெற்குக்காடு அரசுப் பள்ளியை தத்தெடுத்துக் கொண்டு பள்ளிக் கட்டமைப்பை மேம்படுத்திட பெரும் பங்களிப்பை செய்திருக்கிறார்.
பொன்னாங்கண்ணிக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு நிலம் வாங்க நன்கொடை வழங்கியதோடு மட்டுமல்லாமல் தனது நண்பர்களையும் நன்கொடை வழங்க அறிவுறுத்தி வருகிறார்.
பேராவூரணி வளர்ச்சியில் பெரும்பங்காற்றி வரும் குறள்நெறிச் செல்வர் மருத்துவர் துரை.நீலகண்டன் தனது மருத்துவமனை வளாகத்தில் திருவள்ளுவர் சிலை அமைத்ததை பாராட்டி பேராவூரணி திருக்குறள் பேரவையின் புதிய நிர்வாக குழு தீர்மானம் இயற்றியுள்ளது.
மருத்துவரின் திருமண நாளான இன்று அவரின் திருக்குறள் பணி தொடர வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். மருத்துவரின் நற்பணிகளுக்கு நற்றுணையாக இருக்கும் அவரின் இணையர் திருமதி புவனேஸ்வரி, பிள்ளைகள் தர்ஷணா, விசாகன் அனைவரையும் வாழ்த்துகிறது மெய்ச்சுடர்.
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா