இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு விண்ணப்பத்தில் மும்மொழி கட்டாயம்! 2016 மார்ச்சுக்கு பிறகு பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள் விண்ணப்பிப்பதில் சிக்கல்...
பத்தாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் வேலைவாய்ப்பை வழங்கும் இணைய வழி விண்ணப்பம் இந்திய அஞ்சல் துறையால் பெறப்பட்டு வருகிறது.
மார்ச் 2016-க்கு பிறகு தமிழ்நாடு அரசு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ், பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் தமிழ், ஆங்கிலம் தவிர விருப்பமொழி பாடத்தில் பெற்ற மதிப்பெண்ணையும் பதிவு செய்ய வேண்டும் என்ற நடைமுறை அஞ்சல் துறையின் இணையவழி விண்ணப்பத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
மும்மொழி பாடத்திட்டம் நடைமுறையில் இல்லாத தமிழ்நாட்டுப் பாடத்திட்டத்தில் படித்து அஞ்சல் துறை வேலைக்கு விண்ணப்பம் செய்பவர்களிடம் ஏன் விருப்பமொழி மதிப்பெண்ணையும் கேட்டு கட்டாயப் படுத்த வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
மார்ச் 2016க்கு பிறகு தமிழ்நாடு அரசு வழங்கிய மதிப்பெண் பட்டியலிலும் விருப்பமொழி என்பது சேர்க்கப்பட்டு அதற்கு நேரே மதிப்பெண் வழங்கப்படாமல் அப்படியே விடப்பட்டுள்ளது.
மும்மொழிப் பாடம் நடைமுறையில் இல்லாதபோது தமிழ்நாடு அரசு பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியலில் விருப்பமொழி என்கிற வரியை ஏன் சேர்க்க வேண்டும் என்ற கேள்வியும் தற்பொழுது முற்போக்காளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஒருபுறம் இரு மொழி கொள்கை மட்டுமே தமிழ்நாட்டில் நடைமுறையில் இருக்கும் என்று கூறிக் கொண்டே மும்மொழியைப் பயிற்றுவிப்பதற்கான முயற்சியில் தமிழ்நாடு அரசு முனைப்பு காட்டுகிறதா என்பதற்கான விளக்கத்தை தமிழ்நாடு அரசு பொதுமக்களிடம் தெரிவிக்க வேண்டும்.
தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு படித்து விண்ணப்பம் செய்பவர்களும் வேலைவாய்ப்பு பெற்றிடும் வகையில் இந்திய அஞ்சல் துறை உடனடியாக இணைய வழி விண்ணப்பத்தில் மாற்றம் செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடனடியாக இதில் தலையிட்டு உரிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே நமது கோரிக்கை.
கருத்துகள்
கருத்துரையிடுக