மழைக்கு கூட ஒதுங்க முடியாத மணக்காடு பள்ளிக்கூடம்

மாவட்ட அளவில் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பில் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்று சாதனை படைத்த பள்ளி மணக்காடு அரசு மேல்நிலைப்பள்ளி.  


6 முதல் 12 ஆம் வகுப்பு வரை சுமார் 400 மாணவர்கள் இந்தப் பள்ளியில் படிக்கிறார்கள்.  


குறைந்த பட்சம் 12 வகுப்பறைகளவது தேவை. இந்தப் பள்ளியில் தற்போது இருப்பது 6 வகுப்பறைகள் மட்டுமே. அதிலும் இரண்டு வகுப்பறைகள் மழைக்காலத்தில் ஒழுகும் நிலையில் உள்ளது.


வகுப்பறைகள் இல்லாமல் மரத்தடி பள்ளிக்கூடமாக நடத்தப்பட்டு வருகிறது இந்தப் பள்ளி. 


இருக்கும் கழிப்பறையை மாணவிகளுக்கு வழங்கிவிட்டு தற்காலிகமாக தடுப்பு ஏற்பாடு செய்து மாணவர்கள் சிறுநீர் கழிக்க வழி செய்து கொடுத்திருக்கிறார்கள். மாணவர்களுக்கு வயிற்று வலி வந்தால் கம்மா நோக்கி ஓடுகிறார்கள்.


வகுப்பறைகளே இல்லாத நிலையில் அறிவியல் ஆய்வகங்கள் பற்றி சொல்லத் தேவையில்லை. 11 - 12 வகுப்புகளுக்கான அறிவியல் ஆய்வகங்கள் இந்தப் பள்ளியில் இல்லை. 11, 12 மாணவர்களுக்கு ஆங்கில ஆசிரியர் இல்லை. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் கணிதப் பாடங்களுக்கு ஆசிரியர் இல்லை. 


"மாடல் ஸ்கூல்" "டிஜிட்டல் வகுப்பறை" இதெல்லாம் மணக்காடு மாணவர்கள் அறிந்ததே இல்லை.


நம்மூரில் "மழைக்குக் கூட பள்ளிக்கூடம் பக்கம் போனதில்லை" என்று எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் சொல்லுவார்கள். ஆனால் இங்கு பள்ளியில் படிக்கும் பிள்ளைகளே மழை வந்தால் ஒதுங்கி நிற்க முடியாமல் நனைந்து நிற்கிறார்கள். 


பெரு வெள்ள பேரிடர் காலங்களில் வீடிழந்த மக்களை பள்ளி கட்டிடத்தில் தங்க வைப்பார்கள். ஆனால் இங்கு சிறு தூரல் போட்டால் கூட படிக்கும் பிள்ளைகளே ஒதுங்கி நிற்க முடியாமல் தடுமாறி வருகிறார்கள்.


உரிய வகுப்பறைகளையும் வசதிகளையும் ஏற்படுத்தித் தர வேண்டும் என்று முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்திருக்கிறார்கள் இப்பள்ளியின் பிள்ளைகள். அரசு உடனடியாக மணக்காடு பள்ளிக்குத் தேவையான வசதிகளை செய்து தராவிட்டால் மக்களை திரட்டி போராட போவதாக கூறுகிறார் தமிழக மக்கள் புரட்சிக் கழக பொறுப்பாளர் வீரக்குடி ராசா.


ஆளும் வர்க்கம் செவிசாய்க்க வேண்டும் என்பதே நமது கோரிக்கை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா