அதானி ஆதரவோடு நடக்கும் விழாவில் விருது வாங்க மறுப்பு - தோழர் சுகிர்தராணிக்கு பெருகும் ஆதரவு
"நான் பேசும் அரசியலுக்கும் கொண்ட கொள்கைக்கும் சிந்தனைக்கும் அதானி நிதி உதவி அளிக்கும் ஓர் அமைப்பில் இருந்தோ நிகழ்ச்சியிலிருந்தோ விருது பெறுவது எனக்கு சிறிதும் உவப்பில்லை. எனவே இந்த தேவி விருது பெறுவதை மறுக்கிறேன்..."
இப்படி கூறி தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வழங்கும் தேவி விருதை மறுத்திருக்கிறார் தோழர் சுகிர்தராணி.
சமூகப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதை தவிர்க்கும் அரசு ஊழியர்களுக்கிடையே அரசுப் பள்ளி ஆசிரியர் பணியில் இருந்து கொண்டு தனது கனல் கவிதைகளாலும் எழுத்துக்களாலும் சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக முழங்குபவர் தோழர் சுகிர்தராணி.
வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகங்களுக்கு அரணாக நின்று ஆளுமை செலுத்தி வருபவர்.
தனது எண்ணம் சொல் செயல் அனைத்திலும் ஒரு சேர பயணிக்கும் கவிஞர் சுகிர்தராணி அவர்களுக்கு சமூக ஊடகங்களில் ஆதரவு பெருகி இருக்கிறது.
உண்மையில் இவரின் செயல் போற்றத்தக்கது. தங்களது உண்மை முகங்களை மறைத்துக் கொண்டு முற்போக்கு முகத்தை அடையாளமாக காட்டும் சக்திகளுக்கு எதிரானது இவரின் செயல். அடையாள அரசியலை அம்பலப்படுத்தும் செயல். முற்போக்கு முகம் கொண்டவர்களின் வாழ்வை அடையாளமாக வைத்து வணிகமாக்கும் நிமிடங்களை நேர் எதிர் நின்று தாக்கி இருக்கிறார்.
பேராவூரணியில் ஓர் ஆசிரியர் நாள் விழாவில் தோழர் சுகிர்தராணி அவர்களை அழைத்து சிறப்புரையாற்ற வைத்ததை இந்த நிமிடத்தில் நினைவு கூர்ந்து பெருமையாகக் கருதுகிறோம். மெய்ச்சுடரின் வாழ்த்துக்கள் அம்மா.
கருத்துகள்
கருத்துரையிடுக