இந்தியச் சூழலும்-ஒபாமா கருத்தும்
இந்தியச் சூழலும்-ஒபாமா உரையும்
மதரீதியாக பிளவு படாமல் இருக்கும் வரை இந்தியா தொடர்ந்து முன்னேறும் - ஒபாமா உரை - ஊடகச் செய்தி
இந்தியாவின் மதச்சார்பின்மைக் கொள்கையை உலகமே கடைபிடிக்க விரும்புகிறது.
ஆனால் இந்தியாவில் அது கேள்விக்குறியாகி வருகிறது. பாரதிய ஜனதா கட்சியின்
கடந்தகால செயல்பாடுகள் இந்த கருத்துக்கு நம்மை இட்டுச்செல்கிறது.
தொடர்ந்து தொலைக்காட்சி விவாதங்களில் பங்கெடுத்துவரும் பாரதிய ஜனதா
கட்சியின் பொறுப்பாளர்கள் இந்தியாவில் பெரும்பான்மை மதம் இந்து,
கிறித்தவமோ, இசுலாமோ பெரும்பான்மையாக உள்ள நாடுகளிலெல்லாம்
மதச்சார்பின்மை கடைபிடிக்கப்படுகிறதா என்ற நோக்கிலேயே விவாதித்து
வருகிறார்கள். ( 27.01.2015 புதியதலைமுறை தொலைக்காட்சி விவாதத்தில்
ப.ச.கவின் பொறுப்பாளர் இராகவனின் கருத்து)
உலகப் பொதுமறையான திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்ற
கருத்தை நாம் சொன்னால் ஆட்சியாளர்கள் பகவத் கீதையை முன்மொழிகிறார்கள்.
மத்திய அரசு பாடத்திட்டத்தைப் பின்பற்றும் பள்ளிகளில் சமற்கிருதம் கட்டாயப்படுத்தப்படுகிறது.
மதச் சிறுபான்மை மக்களின் வளர்ச்சிக்காக வழங்கப்பட்டுள்ள சலுகைகளை பறிப்பதற்கு விவாதங்கள் நடத்தப்படுகிறது.
பெரும்பான்மை (இந்து) மத மக்களின் வாக்குகளை மையப்படுத்தி ஆட்சியாளர்கள் செயல்படுகிறார்கள்.
இந்தியர்கள் யாவரும் இராமனின் மக்கள் என்கிறார்கள். வெவ்வேறு சமய
நம்பிக்கைகளைக் கொண்டிருந்தாலும் இந்தியாவில் யாவரும் இந்துக்களே
என்கிறார்கள்.
இந்துக்களின் இடஒதுக்கீட்டை கேள்விக்குறியாக்கி அவர்களின் வாக்கு வங்கியை மட்டுமே ஆளும் அரசு குறி வைக்கிறது.
இந்துக்களுக்கு அரணாக விளங்கும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்
மயமாக்கும் போக்கு கடைபிடிக்கப்படுகிறது. தனியார் துறையில் இட ஒதுக்கீடு
இல்லை என்பது கவனிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் அமலில் உள்ள 69 % இடஒதுக்கீட்டில் 67% இந்துக்களுக்குத்தான் வழங்கப்படுகிறது.
இந்துக்களுக்கு தமிழ் நாட்டில் கொடுக்கப்பட்டுள்ள 67% இட ஒதுக்கீட்டை
50% ஆக குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பி இந்துக்களின் உரிமையை
பறிக்கும் இவர்கள், இன்னொரு பக்கம் ஏழை இந்துக்களுக்கு இட ஒதுக்கீடு
வேண்டும்! என்று மாநாடு நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்.
67 விழுக்காடு இட ஒதுக்கீட்டை பெற்றவர்கள் ஏழை இந்துக்கள் இல்லையா?
யாரை
ஏழை இந்துக்கள் என்று இவர்கள் கூறுகிறார்கள்.
ஒன்றுமே புரியவிடாமல் மக்களை
மத ரீதியாகக் குழப்பி பெரும்பான்மை மக்களின் வாக்குகளை வாங்குவதிலேயே
பாரதிய ஜனதா கட்சி குறியாக இருக்கிறது.
தமிழக இட ஒதுக்கீடு நிலவரம்: பிற்படுத்தப்பட்டோருக்கு (BC) 27% ,மிகவும்
பிற்படுத்தப்பட்டோருக்கு(MBC) 20%, பட்டடியல் சாதியினருக்கு(SC) 18%,
பழங்குடியினருக்கு(ST) 1% என்று பிரித்து வழங்கப்படுகிறது. இதில் ஏழை
இந்துக்களாக உள்ள அனைத்து பிரிவினரும் வந்துவிட்டனர். இவர்கள் சொல்லும்
ஏழை இந்துக்கள் யார்?
இதுபோன்ற பெரும்பான்மையான இந்து மக்களுக்கு பாதகமாகச் செயல்படும்
இவர்கள் மதரீதியில் மக்களைப் பிளவுபடுத்தி வாக்கு அரசியல் செய்வதாக
உள்நாட்டிலேயே விவாதம் நடந்துவரும் நிலையில் அமேரிக்க அதிபரின் இந்தப்
பேச்சு மிகவும் கவனிக்கத்தக்கதாகும்.
ஒருபுறம் இந்தியாவின் இறையாண்மைக்குள் தலையிடும் அந்நிய நாட்டு அதிபரின்
ஆலோசனையாக இதைக் கருதினாலும், நாம் உலக அரங்கில் நம்முடைய பெருமையான
மதச்சார்பின்மையை விட்டு விலகி வருகிறோமா என்ற அச்சத்தையும் எழுப்புகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக