தூய்மை இந்தியா- ஓரு கனவு.
தூய்மை இந்தியா- ஓரு கனவு.
வரவேற்கத் தகுந்த திட்டத்தை, இந்தியத்
துணைக் கண்டத்தின் தலைமை அமைச்சர் அறிவித்திருக்கிறார். பாராட்டுக்கள். இந்தியா என்றாலே
குப்பை மேடான பகுதியாகவே உலகம் முழுவதும் ஊடகங்களால் சித்தரிக்கப்படுகிறது. குறிப்பாக
அரசுத்துறை நிறுவனங்கள் குப்பைத் தொட்டியைவிட மிகக் கேவலமாக காணப்படுகிறது. இந்நிலையில்
தலைமை அமைச்சர் மோடியால் அறிவிக்கப்பட்டுள்ள இத்திட்டமம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
இது பட்டிதொட்டி யெல்லாம் பரவி தூய்மை இந்தியா துளிர்விடுமானால் சுகமாக சுவாசிக்க
முடியும்.
குறிப்பாக மருத்துவமனைகளின் தூய்மையை
கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியமாகும். சுகாதாரத்தைப் பேணக்கூடிய அரசு மருத்துவ மனைகளின்
அவலம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பாமர, ஏழை மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் இந்த
மருத்துவமனைகளுக்கு இப்பொழுது அவசர சிகிச்சை தேவைப்படுகிறது. குறிப்பாக உள்நோயாளிகள்
பயன்படுத்தும் படுக்கை, கழிப்பறை போன்றவைகளே நோய் தொற்றுக்களின் தோற்றுவாய் என்பது கண்கூடு.
மருத்துவமனைகள்
மட்டுமல்ல ஏழை மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், ஒன்றிய,
நகர, மாநகர அலுவலகங்கள் என அனைத்து கட்டிடங்களும் தரமற்ற வண்ணப்பூச்சோடு மிகக் கேவலமாக
இருக்கிறது. அலுவலகத்துக்குள் அதிகாரிகளின் இருப்பிடங்கள் மட்டும் தூய்மையாக குளிரூட்டப்பட்டதாக
இருந்தாலும் மக்கள் தங்கி நிற்கும் பகுதிகள் வெளிப்புறங்கள் அசுத்தமாகத்தான் இருக்கிறது.
வணிகம் செய்யும் அரசு அலுவலகங்கள் சுகாதாரமாகப் பராமரிக்கப்படும் அளவிற்கு சேவை அலுவலகங்கள்
முறையாகப் பராமரிக்கப்படாமல் இருப்பது தொடர்கிறது. உதாரணமாக எல்.ஐ.சி., வங்கி அலுவலகங்கள்
ஓரளவிற்கு தூய்மையாகப் பராமரிக்கப்படுகிறது. நேர் மாறாக சேவை வழங்கும் அலுவலகங்களான
வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், மருத்துவமனைகள் போன்றவை சுகாதாரமற்று காணப்படுகிறது.
மக்களுக்கு சேவை வழங்கும் அரசு அதிகாரிகள்
மக்களுக்கு இலவச சேவை செய்வதாக நினைத்துக்கொள்கிறார்கள். தனது சொந்த மருத்துவ மனைகளைத்
தூய்மையாகப் பராமரிக்கும் மருத்துவர்கள் அரசு மருத்துவமனையை சுத்தமாகப் பராமரிப்பதில்லை.
இங்கு வரும் நோயாளிகளுக்கு அவர்கள் இலவச சிகிச்சை அளிப்பதாய் கருதிக்கொள்ளும் மருத்துவர்களின்
மனநிலைதான் இதற்குக் காரணம். மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிக்கொண்டுதான் பணிசெய்கிறோம்
என்ற எண்ணத்தை அரசு ஊழியர்களின் மத்தியில் விதைப்பது அவசியமாகும்.
இதுபோல வெளிப்படையாகத் தெரியக்கூடிய
தூய்மை குறித்து கவலைப்படும் நரேந்திர மோடி அவர்கள் கீழ்கண்ட தூய்மை குறித்தும் தனது
கருத்தை வெளிப்படுத்த வேண்டும். இந்தியாவின் நலனில் அக்கறை கொண்ட ஒவ்வொருவரும்
இது குறித்து கவலைப்பட வேண்டும்,
1.
அன்னிய
நேரடி முதலீட்டை அதிகரித்து ஒட்டு மொத்த உலகத்தின் சந்தையாக, பன்னாட்டுப் பொருட்களின்
குப்பைத் தொட்டியாக இந்தியா மாற்றப்படுவதைத் தடுக்க வேண்டாமா?
2.
“இந்தியப் பொருட்களை பயன்படுத்துங்கள்” என்ற முழக்கத்தை
முன்வைத்த RSS அமைப்பால் வளர்க்கப்பட்ட நரேந்திர மோடி காங்கிரசு கட்சியின் தாராளமயக்
கொள்கையைப்பிடித்துக்கொண்டிருப்பது ஏன்?
3. “ஏழ்மையும் கூட அகற்றப்பட வேண்டிய அழுக்கு” இதற்கு காரணமான
பன்னாட்டு உள்நாட்டு பெரும் முதலாளிகளிகளால் உருவாக்கப்படும் நுகர்வு பண்பாட்டிலிருந்து
இந்தியாவை மீட்டெடுத்து பொதுத்துறை நிறுவனங்களை ஊக்கப்படுத்த வேண்டாமா?.
4.
“மொழிக் கலப்பும் ஓர் அழுக்கு” அதை அகற்ற வேண்டியது தலைமை அமைச்சரின் கடமையாகும். தாய்
மொழிக் கல்விக்கு தடையாக இருக்கும் இந்தி, ஆங்கில ஆதிக்கத்தை ஒழிப்பதுஅவசியமல்லவா?
5. “பிறப்பு
ஒக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற நெறிக்கு எதிரான “வருணாசிரமம்” இந்தியாவின் இழிவு.
இன்றளவும் கோவில்களில் குடியிருக்கும் இந்த அழுக்கை அகற்றிட அனைத்து சாதியிலும் பயிற்சி
பெற்றவர்களை அனைத்து இந்தியாவிலும் உள்ள கோவில்களில் அர்ச்சகர்களாகிட அனுமதிக்க
வேண்டும். பிறப்பின் அடிப்படையில் நீதியை வலியுறுத்தும் வருணாசிரமக் கோட்பாட்டைக்
கொண்டு எழுதப்பட்ட மனு நீதி, மகாபாரதம் போன்ற இலக்கியங்களை பள்ளிப் பாடங்களி லிருந்து
அகற்றுவதும், திருக்குறளை இந்தியத் துணைக் கண்டத்தின் அற நூலாய் கற்பிக்கப் படுவதும்
அவசியம்.
6. “கல்வி
விற்கப்படுவது இந்தியாவின் இழுக்கு” கல்விச் சாலைகளை தனியாரிடமிருந்து மீட்டு பொதுத்துறை
யாக்குவது அத்தியாவசியமான தூய்மைப் பணியாகும்.
7.
காந்தி பிறந்த குஜராத் மட்டுமல்ல காந்தியம் போற்றும்
இந்தியா முழுவதும் மதுவிலக்கை அமல் படுத்தி
“மாதர் தம்மை இழிவு படுத்தும் மடமையான அழுக்கை” போக்க வேண்டும்.
8.
“மரபணு
மாற்று விதைகள் விவசாயத்தின் களைகள்” இதைத் எடுத்தால்தான் விவசாயப் பயிர் வளரும். பன்னாட்டு
அழுத்தத்திற்கு அடிபணிந்து செயற்கை உரப் பயன்பாட்டை அதிகரிப்பதும் இந்திய விவசாயத்தை
குழிக்குள் தள்ளும். இயற்கை விவசாயத்தை பேணிட திட்டங்கள் கொண்டு வருவதே நில தூய்மைக்கு
வழிவகுக்கும்.
9.
“கங்கையை
மட்டுமல்ல, நாட்டின் கடை மடைகளில் உள்ள ஏரி, குளங்களும் கூட புனிதம் காக்கப்பட வேண்டியவைகளே”
நாட்டில் உள்ள ஏரி குளங்களுக்கு நீர் வரத்தை உறுதிப்படுத்துவதுதான் நீராதாரத்தின் புனிதத்தைக்
காக்கும்.
10.
“அணுக்
கழிவுகளை உற்பத்தி செய்யும் அணுமின் நிலையங்கள் உயிர்குலத்தின் சாவுக்குழிகள்” இதை
இந்தியாவில் தடை செய்வதுதான் உண்மையான தூய்மைக்கு வழிவகுக்கும்.
11.
சாதி-மதவாத
அழுக்கைப் போக்காமல் அரசியலில் தூய்மையை நிலைநாட்டுவது எப்படி? சாதி-மத அமைப்புகளையும்,
அந்த அமைப்புகளை ஆதரிக்கும் கட்சிகளையும் தேர்தலில்போட்டியிட தடை விதிக்கச்
சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும்
12.
தூய்மை
இந்தியாவுக்கு ஆதாரமான துப்புரவுப் பணி இன்றும் அழுக்கடைந்தே உள்ளது. மனித கழிவுகளை
மனிதர்களே அள்ளும் அவலம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. எல்லா துறைகளிலும் நவீனம்
புகுந்து வேலைகளை எளிமையாக்கி வரும் இந்த காலத்தில் நகர சுத்தி தொழிலாளர்களுக்கு வழங்கப்படும்
கருவிகள்மட்டும் இன்றும் பழைமை மாறாமல் அப்படியே உள்ளது. தொழிலாளர்களே சாக்கடைக்குள்
இறங்கி சுத்தம் செய்யும் நிலை தொடர்கிறது. வேலையின் போது நச்சுக்காற்றால், கழிவு
நீர் உடலுக்குள் செல்வதால் உயிரை இழக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறையவில்லை.
அதோடு மட்டுமல்லாமல் இந்தப் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களின் ஆயுட்காலாம் மிகவும்
குறைவு என்கிறார்கள் மருத்துவ நிபுனர்கள். நாடெங்கும் கழிப்பறைகளை அமைக்க வேண்டும்
என்று வலியுருத்தும் மோடி, கழிப்பறைகள் உருவாக்கும் கழிவு நீரை மேலாண்மை செய்வது எப்படி
என்று சிந்திக்க வேண்டாமா?
தொழிலில்,
பண்பாட்டில், சுற்றுச் சூழலில், கல்வியில், சமூகத்தில் என அனைத்து தளங்களிலும் தூய்மை
இந்தியாவை மலரச் செய்ய முயற்சிக்க வேண்டும். இதைச் செய்ய நமது தலைமை அமைச்சரால் முடியும்.
அவரின் வானலாவிய அதிகாரத்தைப் பயன்படுத்தி இதைச் சாத்தியப்படுத்த அவர் தயங்கக் கூடாது.
அவரின் கரத்தை வலுப்படுத்த தயாராக இருக்கும் தமிழக பாஜக நமது குறள் நெறி வழி தூய்மையை
வலியுறுத்த வேண்டும். இத் திட்டத்தின் தூதராக அறிவிக்கப்பட்டுள்ள கமலகாசனும் இதை வலியுறுத்தவேண்டும்.
இந்திய ஒன்றியத்தில் தூய்மை இந்தியா என்ற
பெயரை விட தூய்மைத் தமிழகம் என்ற பெயரே
பொருத்தமாக இருக்கும். எல்லாவற்றையும் விட மக்கள் இத்திட்டத்தைச் சாத்தியமாக்கக்
கடுமையாக உழைக்க வேண்டும்.அப்போதுதான் “கனவு
மெய்ப்படும்”
ஆசிரியர்
கருத்துகள்
கருத்துரையிடுக