வேற்றுமையில் ஒற்றுமை - குடியரசு தின உறுதிமொழி
வேற்றுமையில் ஒற்றுமை
இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடு என்று உலகுக்கு பறைசாற்றிப் பெருமைப்பட்டுக் கொள்ளும் நிலையில் இப்போது இல்லை. இந்தியாவில்
பல்வேறு வேற்றுமைகள் இருந்தாலும் வேற்றுமைகளுக்குள் ஒளிரும் தனித்துவம் இந்தியாவை ஒன்றிணைப்பதாகக் கூறுவார்கள் தேசியவாதிகள். இந்தியாவின் பெருமையை
அமேரிக்காவிலும் உலகெங்கிலும் பரப்பியவர் என்ற பெருமைக்குரிய சுவாமி
விவேகானந்தர் கூட இந்தியாவைப் பற்றி கூறும் போதும், இந்து மதத்தைப் பற்றி
கூறும் போதும் முரண்பட்ட சமூகங்களிடையே உள்ள சகிப்புத் தன்மை மட்டுமே இந்த
நாட்டின், இந்த மதத்தின் சிறப்பு எனக் கூறியிருக்கிறார்.
இந்து என்ற
மதத்திற்குள் வெவ்வேறு நம்பிக்கைகளைக் கொண்ட
பல்வேறு சமயங்கள் இருக்கின்றது. இந்த சமயங்களுக்குள் உள்ள தத்துவங்களும்
கருத்துக்களும், பல்வேறு சமயச் சான்றோர்களின் கருத்துக்களும்தான் இந்த இந்து மதத்தின் சொத்து. அதுபோல இந்தியாவுக்குள் வேவ்வேறு பண்பாட்டுக் கூறுகள்,
வெவ்வேறு மொழிகள் இதுதான் இந்தியாவின் மிகப் பெரிய சொத்து. இந்தியா
என்கின்ற துணைக் கண்டம் உலகுக்கு எடுத்துரைக்கும் செய்தியும் இதுதான்.
இந்த செய்தியை எவ்வளவு ஆழமாகவும், அழுத்மாகவும் உலகுக்குச் சொல்கிறோமோ அவ்வளவுக்கு இந்தியாவின் பெருமையும் புகழும் பெருகும். ஆனால் நடந்துவரும்
நிகழ்வுகள் அப்படி இருப்பதாகத் தெரியவில்லை.
இந்தியக் குடியரசு தின பாரம்பரிய பண்பாட்டு வாகன அணிவகுப்பில் பல்வேறு
மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதும், இங்கு நடைபெறும்
அணிவகுப்பில் கலந்து கொள்ளக் கூடிய வாகனங்களில் இந்தி எழுத்துக்களால்
மட்டுமே விளக்கங்கள் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்ற நிர்பந்தமே இதற்கு காரணம்
என்பதும், அவ்வாறு இந்தியாவின் பிற தேசிய மொழிகளில் எழுதப்பட்டிருக்கக்
கூடாது என அறிவுறுத்தப்பட்டதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள்
எழுந்துள்ளன.
வாகன அணிவகுப்பில் கலந்து கொள்ளாத 13 மாநிலங்களும் பா.ச.க ஆளாத மாநிலங்கள் என்பதும் எழுந்துள்ள சர்ச்சையை அதிகப்படுத்தியுள்ளது.
பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் அமர்ந்தவுடன் இந்தியை வலுக்கட்டாயமாக
மாநிலங்களுக்குள் திணிக்கும் போக்கு நேர்மையானதாகத் தெரியவில்லை. இது இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு ஊறு விளைவிப்பதாகவே தேரிகிறது.
இந்தியாவில் பல்வேறு மொழிகள், பண்பாடுகள் இவைகளே இந்தியாவின் சொத்து.
இதை இழந்துவிட்டு இந்தி மொழியை மட்டும் வளர்ப்பதாலோ, அதைத் திணிப்பதாலோ
இந்தியாவின் பெருமை உயர்ந்துவிடாது. வீழவே செய்யும்.
இந்தியாவின் பலமாக உள்ள பண்பாட்டுத் தளத்தை அசைத்து உடைத்துவிட்டு
இந்தியாவைக் கட்டமைக்க முடியாது. இந்தியாவின் பண்பாடு என்பது இந்தி
மொழியால் மட்டுமே உருவாக்கப்பட்டதல்ல.
பல்வேறு தேசிய இனங்கள் கூடி வாழ ஏற்ற பகுதியாக இந்தியா இருக்கிறது என்பதே
உலகம் நம்மை உற்றுப்பார்க்கக் காரணம். பல்வேறு தேசிய இனங்கள் இங்கு
நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்கிற செய்தி பெருமைக்குரியதல்ல.
பக்கத்து நாடான இலங்கையில், ஈழ இன மக்கள் நசுக்கப்படும் நிலையால் அந்நாடே
உலகில் தலைகுணிந்து நிற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. பல்வேறு
திருட்டுத்தனங்கள் செய்துதான் அந்நாட்டின் அதிபராக இருந்த இராசபட்சே தமிழர்களை
அழித்தொழித்திருக்கிறார் என்கிற செய்திகள் பரவத் தொடங்கியிருக்கிறது.
இந்நிலையில் குடியரசு தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்தியா தனது பலத்தை அறிந்து அதைப் பலப்படுத்தி உலகில் அசைக்க முடியாத நிலையை அடைய முயல வேண்டும். மாறாக இந்தியாவின் பலமாக உள்ள தேசிய இனங்களை அடக்கி ஒடுக்குவதால் பலமான இந்தியாவைக் கட்டமைக்க முடியாது.
"வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் இந்தியாவின் சொத்து"
"வேற்றுமையே இல்லாத இந்தியா என்பது பலகீனமான இந்தியா"
பல்வேறு மொழிகளும், பல்வேறு சமயங்களும், பல்வேறு கருத்தாக்கங்களும் வளருவதால் மட்டுமே தேசத்தைக் கட்டிக் காக்க முடியும்.
கருத்துகள்
கருத்துரையிடுக