நம் அர​சை குடியர​​சாக்க என்ன செய்யவேண்டும்?

நம் அர​சை குடியர​​சாக்க என்ன செய்யவேண்டும்?

"இருக்கு ஆனா இல்லை" இது தமிழர்கள் எல்​லோருக்கும் தெரிந்த ஒரு படத்தின் வசனம்;
"இந்தியா குடியரசு நாளைக் கொண்டாடுகிறது" என்றதும் நமக்கு இந்த வசனம்தான் நினைவுக்கு வருகிறது.
எல்லோரும் சமம் என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும்
இட ஒதுக்கீடு வேண்டாம் திறமை அடிப்படையில் எல்லோருக்கும் சம வாய்ப்பு தரப்பட வேண்டும் என்றுதான் நாங்களும் சொல்கிறோம் என்கிறார்கள் உயர் வகுப்பைச் சார்ந்த பார்ப்பனர்கள். அப்படிச் சொல்பவர்கள் கோவிலுக்குள் அனைவரையும் அர்ச்சகர் ஆக்க முயற்சிக்க வேண்டும், எழுத்துத் தேர்வை அடிப்படையாகக் கொண்ட கல்வி முறையை மாற்றி செயல் வழித் தேர்வை அறிமுகப்படுத்த குரல் கொடுக்க வேண்டும். விவசாயத் துறையில் பணியாற்றும் பலருக்கு விவசாயத்தைப் பற்றியே தெரியாது. காரணம் அவர்கள் எழுத்துத் தேர்வை அடிப்படையாகக் கொண்டு வேலையில் அமர்ந்தவர்கள். இதுபோன்ற அபத்தங்கள் நிகழாதவாறு தடுக்கப்படும் வரை சமூக நீதி காக்க இட ஒதுக்கீட்டைப் பலப்படுத்தி பாதுகாக்க வேண்டும். தனியார் துறையிலும் இட ஒதுக்கீட்டை அமல் படுத்த வேண்டும்.
கல்வியில் சமத்துவம் வேண்டும்
இலவச கல்வி, தனியார் துறையில் விலை கொடுத்து கல்வி, மத்திய அரசுப் பாடத்திட்டம், மாநில அரசுப் பாடத்திட்டம், சர்வதேச தகுதிப்பாடுள்ள கல்வி, தாய் மொழிக் கல்வி, அன்னிய மொழி(ஆங்கிலம், இந்தி) கல்வி, வேலை வாய்ப்புக்கான கல்வி, சுய முன்னேற்றத்திற்கான கல்வி, உயர்ந்த விலை கல்வி இன்னும்.... இன்னும்.... எத்தனை எத்தனையோ கல்வி முறைகள் இந்தியாவில்! எல்லோருக்கும் வசதியான, சம அளவில் தகுதியை மேம்படுத்தக்கூடிய தாய் மொழி வழிக் கல்வியை, மாநில அரசு மேற்பார்வையில், எல்லோருக்கும் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேலை வாய்ப்பு
எல்லோருக்கும் சம வாய்ப்பு என்பது கல்வியை அடிப்படையாகக் கொண்டிருப்பதாலும், கல்வியில் பல பாகுபாடுகள் இருப்பதாலும் வேலை வாய்ப்பிலும் பல நீதியற்ற நிலை தொடர்கிறது. வேலை வாய்ப்பைப் பெறுவதற்காகவே பணத்தைக் கொட்டி தொடக்கப் பள்ளி முதல் கல்வி பயிலும் மாணவர்களுக்கும், கிராமங்களில் ஏழை எளிய குடும்பத்தில் பிறந்து தரமான ஆனால் வேலைவாய்ப்புக்காக என்று தனித்துவம் இல்லாத கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களும் வேலைவாய்ப்பைப் பொருத்தவரை சமமாகப் பார்க்கப்படும் நிலை உள்ளது. தாய் மொழி வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே அரசுத் துறை வேலை வாய்ப்பு என்ற நிலையை உறுதிப் படுத்த வேண்டும்.

அரசியலில் சமூக நீதி
சமூக நீதி ​பேசப்படும் அரசியலுக்குள் சமூக நீதி காக்கப்பட தேர்தல் சீர்திருதத நடவடிக்கைகள் வேண்டும். ஒருவரே தொடர்ந்து ஆட்சியிலும், கட்சியிலும் பதவியில் இருக்கும் நிலையை மாற்றி கால வரையறை செய்ய வேண்டும். வாக்குரிமையை எளிமைப்படுத்த வேண்டும். யாவருக்குமான அரசியல் சூழலை உருவாக்க வேண்டும்.

சேவையை உறுதி செய்ய வேண்டும்.
மக்களுக்கான சேவைகள் குறித்த காலத்தில் குறித்த வகையில் கிடைத்திட வகை செய்திட வேண்டும்.

சமமான மருத்துவ வசதி
இந்தியாவில் பிறந்த எல்லோருக்கும் சமமான மருத்துவ வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். அரசு மருத்துவமனை - தனியார் மருத்துவச் சேவை என்ற நிலையை மாற்றி மருத்துவச் சேவையை அரசுடமை ஆக்க வேண்டும்.

சம்பளச் சமத்துவம்
பணிகளுக்குள் இருக்கும் சம்பள வேற்றுமைகள் அகற்றப்பட வேண்டும். சமமான ஊதிய முறையைக் கொண்டுவர வேண்டும். ஏற்றத்தாழ்வை உருவாக்கும் நிலையில் ஊதிய முறை அமையாமல் தனியார்த் துறை, அரசுத் துறை என எத்துறையிலும் ஒரே ஊதிய முறை இருக்க வேண்டும். அதிகப் பணிச்சுமையுடன் குறைந்த ஊதியமும், குறைந்த பணிகளுடன் அதிக ஊதியமும் பெறும் நிலை மாற வேண்டும்.
எல்லா தொழில்களும் மதிக்கப்பட வேண்டும்
விவசாயம் தொடங்கி அத்தனைத் தொழில்களும் சமூகத்தில் மதிக்கத்தக்கதாக இருக்க வேண்டும்.

குறைந்த பட்சம் தாய் மொழிக்  கல்வியும் - மருத்துவமும் அரசுடமையாக்கப்பட்டால் சமூகத்தில் சமமான நிலையை எளிதில் உண்டாக்கி விட முடியும்.

மேலும்
      1.       அதிகாரங்கள் பரவலாக்கப்பட வேண்டும்.
2.       மாநில அரசு அதிகாரங்கள் அதிகரிக்கப்பட வேண்டும்.
3.       மாநிலங்களுக்குள் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் அந்தந்த மாநில மக்களையே பயன்படுத்தி சேவைகளை எளிமைப் படுத்திட வேண்டும்.
4.       வேற்று மாநில நிர்வாகிகளை நியமித்து நிர்வாகச் சூழலை சிக்கலாக்கும் நிலையை அகற்ற வேண்டும்.
5.       மாநிலங்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிப்பது போலவே உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரமளித்தல் வேண்டும்.
6.       உள்ளாட்சிகளின் அனுமதியின்றி கிராமப்புறங்களில் நிறைவேற்றப்படும் மக்கள் விரோத திட்டங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
7.       உள்ளூர் மக்களை காவு கொடுத்து கட்சிகளும், அரசியல்வாதிகளும், பெரும் நிறுவனங்களும், பன்நாட்டு நிறுவனங்களும் கொளுத்து வளரும் நிலையை தடுக்க வேண்டும்.
8.       அரசியலுக்குள் மதம் நுழையக் கூடாது. மதத்துக்குள் இருக்கும் சமூக அவலங்களைப் போக்க அரசு மும்முரமாக ஈடுபட வேண்டும்.
9.       எந்த மதமாக இருந்தாலும் மதத்தின் பெயரால் திரட்டப்படும் நிதி முழுவதும் அரசால் நிர்வகிக்கப்பட வேண்டும். மதச் சடங்குகள் என்ற பெயரில் நிகழ்த்தப்படும் சமூக அநீதிகள் கொளுத்தப்பட வேண்டும்.
10.   சாதியின் பெயராலும், பல ஆண்டுகளாக ஒரே சாதியினராலும் நடத்தப்படும் பொது அமைப்புகள், அற நிலையங்கள், திருமடங்கள், ஆதீனங்கள், சபைகள் இவற்றின் சொத்துக்கள் அரசுடமையாக்கபட வேண்டும்
இவற்றைப் பெற 
      மக்களாகிய நாம் ​தொடர்ந்து​ போராட வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா