'ஆசிரியர்கள் உருவாக்கிக் கொடுத்த வாய்ப்பினால் நல்ல மருத்துவராய் சேவை செய்து வருகிறேன்' மருத்துவர் சிவபாலசேகரன் உரை.
எவரெஸ்ட் மவுண்ட் ட்ரஸ்ட் அமைப்பின் 11 வது ஆண்டு தொடக்க விழா மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா பேராவூரணி எஸ் என் வி விழா அரங்கத்தில் நடைபெற்றது.
எனது வாழ்வில் ஒளி ஏற்றியவர் தற்பொழுது குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராகப் பணியாற்றும் ஐயா மனோகரன் அவர்கள். ஐயாவுக்கு நன்றி தெரிவிப்பதற்கு இந்த மேடையை பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறேன்.
நான் பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது அவர் உருவாக்கிக் கொடுத்த வாய்ப்புகளால் தான் என்னால் ஒரு நல்ல மருத்துவராக என்னை உயர்த்திக்கொள்ள முடிந்தது. ஆசிரியர்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் மாணவர்களை மேலான நிலைக்கு இட்டுச் செல்லும். நல்ல ஆசிரியர்கள் அவர்களையும் அறியாமல் தங்களது செயல்களால் மாணவர்களை வழிநடத்திக் கொண்டே வருவார்கள். அப்படி ஆசிரியர்களால் வழிநடத்தப்பட்ட மாணவர்களில் ஒருவன்தான் நான்.
தற்பொழுது இந்த அறக்கட்டளை செய்து வரும் அறப்பணிகளால் அரசு பள்ளிகளில் நல்ல மாற்றம் ஏற்படும். அரசுப் பணி வாய்ப்பை அரசு பள்ளி மாணவர்கள் பெற்றிட இவர்கள் நடத்தும் தேர்வுகள் பெரும் வழிகாட்டியாக அமையும். அரசுப் பள்ளிகளை மேம்படுத்த அறக்கட்டளை எடுக்கும் முயற்சிகளுக்கு நானும் உறுதுணையாக இருப்பேன்" என்றார்.
11 பள்ளிகளைச் சேர்ந்த 97 மாணவர்கள் இந்த அறக்கட்டளை நடத்தும் தேர்வுகளில் வெற்றி பெற்று பரிசுகளை வாங்கிச் சென்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ், நினைவுப்பட்டயம், மனோரமா இயர்புக் ஆகியவை பரிசுகளாக வழங்கப்பட்டது.
6 முதல் 10 வகுப்பு வரை உள்ள பாடத்திட்டத்தில் அனைத்து பாடங்களிலிருந்தும் போட்டி தேர்வுகளுக்கு இணையாக கேள்விகள் கேட்கப்பட்டு அதில் சிறப்பாக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படுகிறது. பேராவூரணி வட்டாரத்தில் உள்ள 11 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் இந்தத் தேர்வுகளில் பங்கேற்று பயனடைந்துள்ளனர்.
அறக்கட்டளை நிறுவனர் கபிலன் ராமசாமி, இயக்குனர் நவீன ஆனந்தன், நிர்வாக இயக்குனர் மருத்துவர் தீபிகா முத்துச்சாமி, பொருளாளர் சக்கரவர்த்தி செந்தில்குமார் மற்றும் அறக்கட்டளை பொறுப்பாளர்கள் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர். செல்வி கீர்த்திகா நீலகண்டன் நிகழ்ச்சியை சிறப்புற தொகுத்தளித்தார்.
நிகழ்வின் இடையிடையே பேராவூரணி ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் திரை இசைப் பாடல்களுக்கு நடனமாடி திறமையை வெளிப்படுத்தினர். நடனத்திற்கான பாடல்களை பொறுப்புணர்வுடன் பேராசிரியர்கள் தேர்வு செய்து கொடுத்திருக்கலாம் என்பது விழாவில் கலந்துகொண்ட அனைவரின் எண்ணமாக இருந்தது.
மாணவர்கள் பெற்றோர்கள் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், உதவி ஆசிரியர்கள், மக்கள் பிரதிநிதிகள், பல்வேறு கட்சிகள் மற்றும் இயக்கங்களைச் சேர்ந்த பொறுப்பாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
சமூகத்தில் பெரும் மாற்றம் நிகழ்த்தக்கூடிய பெரும் பணியை சத்தமின்றி நிகழ்த்தி காட்டிய எவரெஸ்ட் மவுண்ட் ட்ரஸ்ட் அமைப்புக்கு மெய்ச்சுடரின் வாழ்த்துக்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக