மொழிப்போர் மறவர்களை ஒவ்வொரு நாளும் நினைவில் கொள்வோம்.
விடுதலை அடைந்து 70 ஆண்டுகளைக் கடந்த பிறகும் ஒன்றிய அரசிடம் தமிழ் மொழிக்காக தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்கிறோம்.
இந்தி மொழிக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் தமிழ் மொழிக்கு வழங்கப்படாமல் தமிழ் மொழி பேசுவோர் ஒன்றிய அரசால் இரண்டாம் தர குடிமக்களாவே நடத்தப்படுகிறார்கள்.
இந்தியாவின் முதல் செம்மொழியாக தமிழ் அறிவிக்கப்பட்டும் இந்தியாவின் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் தமிழுக்கென இருக்கைகள் அமைக்கப்படவில்லை. சமஸ்கிருத மொழிக்கு ஒதுக்கப்படும் ஒன்றிய அரசு நிதி தமிழ் மொழிக்கு கிடைப்பதில்லை. தமிழ் மொழியின் செவ்வியல் தன்மை தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டே வருகிறது. மருத்துவம் அறிவியல் என பல் திறன் அறிவு களஞ்சியமாக திகழும் தமிழை உலகம் முழுவதும் உள்ள மொழியியல் அறிஞர்கள் ஏற்றுக்கொண்டாலும் இந்திய ஒன்றிய அரசு தமிழ் மொழிக்குரிய அங்கீகாரத்தை கொடுக்க மறுக்கிறது.
ஒன்றிய அரசின் திட்டங்கள் அனைத்தும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடப்படுகிறது. ஆயுள் காப்பீட்டு கழகம் போன்ற ஒன்றிய அரசு நிறுவனங்களில் திட்ட விளக்கங்கள் எதுவும் தமிழ் மொழியில் கொடுக்கப்படுவதில்லை.
மொழிப்போர் வரலாறு கொண்ட தமிழ்நாட்டில் உயர்நீதிமன்றத்தில் தமிழில் வழக்காட முடியவில்லை என்பது எவ்வளவு பெரிய இழுக்கு என்பதை நாம் உணர வேண்டும்.
ஒன்றிய அரசு ஒரு பக்கம் தமிழுக்கு எதிராக செயல்பட்டாலும் தமிழ்நாடு அரசும் தங்களது திட்டத்தின் பெயர்களை முழுமையாக தமிழில் கொடுப்பதில்லை. "நம்ம ஸ்கூல்", "திராவிட மாடல்" போன்ற தமிழ்நாடு அரசின் திட்ட பெயர்கள் எல்லாம் தமிழை புறக்கணித்தே வருகிறது.
ஒன்றிய மாநில அரசுகளை தாண்டி பொதுமக்களும் தமிழை பயன்படுத்த மறுக்கிறார்கள். பெரும்பாலான தமிழர்கள் தங்களது பெயர்களுக்கு முன்னால் தலைப்பெழுத்தை தமிழில் எழுதுவது இல்லை. தங்களது வணிக நிறுவனங்களின் பெயர்களை தமிழில் வைப்பதில்லை. பெயர் பலகையில் தமிழ் இருப்பதில்லை.
தமிழ் பல்வேறு ஒடுக்கு முறைகளைத் தாண்டி தனித்தன்மையோடும் இளமையோடும் இன்றும் நம்மோடு இருக்கிறது. தமிழை பயன்பாட்டு மொழியாக நாம் மாற்றாத வரை ஒட்டுமொத்த வளர்ச்சியை நாம் காண முடியாது.
கல்வி மொழி, வேலை மொழி, அலுவல் மொழி, வழிபாட்டு மொழி, தொடர்பு மொழி என அனைத்து தளத்திலும் தமிழை உயர்த்திப் பிடிப்போம். அதுதான் மொழிப்போர் ஈகிகளுக்கு நாம் செய்யும் உண்மையான புகழஞ்சலி.
கருத்துகள்
கருத்துரையிடுக