பேராவூரணியின் வரலாற்றுப் பெருமைகளை பதிவு செய்யும் ஒளிப்படக் கலைஞர் பாரதி ந. அமரேந்திரன்
இரண்டாம் உலகப் போரின் உக்கிரத்தை ஒர் ஒளிப்படம் உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது. போரின் பேரழிவு அத்தோடு நிறுத்தப்பட்டது.
வரலாற்று நாயகர்களின் வெவ்வேறு முக பாவங்களை ஒளிப்பட உளவியல் காட்டிக் கொடுத்திருக்கிறது.
இன்றளவும் விருந்தினர்களிடம் வீட்டில் நடந்த விழாக்களின் ஒளிப்படத் தொகுப்பை பெருமையாகக் காட்டி மகிழ்கிறோம்.
காட்சிப்படுத்தி இருக்கும் ஒளிப்படங்கள் உள்ளுக்குள் பசுமையாக படர்வதை உணர்ந்திருக்கிறோம்.
பகையாகி போன பங்காளிகள் என்றோ நடந்த விழாக்களில் ஒன்றாக இருந்ததை ஒளிப்படங்களில் கண்டு உருகிப் போவதை பார்த்திருக்கிறோம்.
ஒளிப்படங்களின் காட்சிகள் வேறுபட்ட உறவுகளிடம் ஒற்றுமையை உருவாக்கி இருக்கிறது.
50 ஆண்டுகளுக்கும் மேலாக பேராவூரணியின் அடையாளங்களில் ஒன்றாக மாறிப்போன நிறுவனம்தான் பாரதி ஸ்டுடியோ. தந்தை பாரதி வை. நடராஜன் நடத்தி வந்த பணியை 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறிதும் தொய்வின்றி தொடர்ந்து வருகிறார் அவரின் தனையன் பாரதி ந.அமரேந்திரன்.
பேராவூரணி மக்களின் பெருமைமிகு நிகழ்வுகள் அத்தனையும் இவரின் பேழையில்.
கோவில் விழாக்கள் தொடங்கி பேராவூரணி மண்ணைத் தொட்டுப் பார்க்கும் தமிழ்நாட்டின் தலைசிறந்த ஆளுமைகள் அனைவரின் வரவையும் வரலாறாய் பதிந்து வைத்திருக்கிறார் அமர்.
ஒளிப்படம் எடுப்பது உயர்வான கலை.
ஒளிப்படக் கலைஞர் பண்பாட்டின் வேர்களை அறிந்திருக்க வேண்டும்.
பரபரப்புக்கு இடையே பதறாமல் பணி செய்ய வேண்டும்.
ஒன்றையும் விட்டுவிடாமல் தனது கழுத்தினில் தொங்கவிடப்பட்டுள்ள மூன்றாம் கண்ணினைச் சிமிட்டி உள் பொதிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
உறவுகளின் ஆழத்தை உணர்ந்து கொண்டு சேர்ப்பதை சேர்த்து ஒதுக்குவதை ஒதுக்கி ஒளிப்படத்தால் உறவாட வேண்டும்.
வரவேற்பறையில் வைத்திருக்கும் ஒளிப்படத் தொகுப்பை புரட்டிப் பார்க்கும்போது கனவுகளை விதைக்க வேண்டும் ...
அழகியலும் உண்மையும் ஒருசேர உறவாடிட பணி செய்ய வேண்டும்..
மீண்டும் படைக்க முடியாத நொடிப் பொழுதுகளை கண நேரத்தில் கவிழ்ந்து கிடந்தேனும் கச்சிதமாய் பதிவு செய்துவிடும் யுக்தி தெரிந்திருக்க வேண்டும்..
அழைப்பிதழ்களை கூட காணொளிகளாக காட்சிப்படுத்திக் காட்டும் காலத்திலும் ஒரு உன்னத கலைஞனுக்கு உள்ள அத்தனை தகுதிகளையும் ஒரு சேர கொண்ட அமர் உருவாக்கிய ஒளிப்படங்கள் மக்களிடம் உருவாக்கும் மன மகிழ்ச்சி மகத்தானது.
இவர் உருவாக்கிய ஒளிப்படங்களே அச்சு ஊடகங்களில் பெரும்பாலும் பேராவூரணியின் பக்கத்தை அலங்கரித்து இருக்கிறது.
ஒவ்வொருவர் வீடுகளிலும் ஒளிப்படங்களின் ஊடே உறவாடும் அமர்! உங்கள் பணி தலைமுறை தலைமுறையாய் தொடர மெய்ச்சுடரின் வாழ்த்துக்கள்....
கருத்துகள்
கருத்துரையிடுக