நாட்டாணிகோட்டை மாணவி மாநில அளவிலான ஓவிய போட்டியில் சாதனை
தமிழ்நாடு அரசு சார்பில் நடுநிலை உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு கலைப் போட்டிகளை கலை விழா என்ற பெயரில் நடத்தியது.
மாணவர்களின் பல்வேறு திறன்களை வெளிக்கொணரும் வகையில் ஒரு சில பள்ளிகள் கலைத்திறன்களில் ஆர்வம் உள்ள மாணவர்களை சிறப்பாக தயார்படுத்தியது. ஒரு சில பள்ளிகள் இந்தக் கலைத்திறன் போட்டிகளுக்கு மாணவர்களை தயார் செய்வதை மிகவும் சுமையாக கருதியது.
பேராவூரணி நாட்டாணிகோட்டை வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி சிவானி. இவர் மாநில அளவில் நடத்தப்பட்ட ஓவிய போட்டியில் மூன்றாம் இடம் பிடித்து சாதித்திருக்கிறார்.
குட்டிக் குழந்தையாக இருக்கும் பொழுதே கிடைக்கும் தாள்களில் எல்லாம் பென்சிலை கொண்டு விதவிதமாக கிறுக்கல்களை செய்து தனது தாயிடம் "நன்றாக இருக்கிறதா?" என்று கேட்பாராம் சிவானி. இப்போது வீடெல்லாம் வரைந்து வைத்திருக்கிறார்.
மழலை வயது தொடங்கி ஓவியத்தில் நாட்டம் கொண்ட சிவானியை பள்ளி ஆசிரியர்களும் பெற்றோரும் கொண்டாடி மகிழ்கின்றனர்.
அவரின் ஓவியத் திறனை வளர்த்திட ஊக்கம் கொடுத்து வந்துள்ளனர். கொரோனா கால ஊரடங்கின் போது இணைய வழியாகவே ஓவியத்தை கற்றுக் கொள்ள முடியும் என்பதை தெரிந்து கொண்ட சிவானி தனது பெற்றோரின் உதவியோடு ஓவியம் கற்றுக்கொள்ள கடந்த ஆறு மாதமாக இணைய பயிற்சியும் எடுத்து வருகிறார்.
தனது கிறுக்கல்களை எல்லாம் ஓவியங்களாக கொண்டாடிய பெற்றோருக்கு நன்றி கூறி, பெரும் ஓவியராய் வருவேன் என்றும் உறுதிப்பட கூறுகிறார் ஓவியர் சிவானி.
மெய்ச்சுடரும் வாழ்த்துகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக