பேராவூரணியில் பாரதி சிலை திறப்பு விழாவில் பேராசிரியர் சாலமன் பாப்பையா பேருரை.
பேராவூரணியில் பாரதி கலை இலக்கிய பேரவை சார்பில் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் மகாகவி பாரதியின் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
தமிழறிஞர் பேராசிரியர் சாலமன் பாப்பையா மகாகவி பாரதியாரின் சிலையை திறந்து வைத்து பேருரை ஆற்றினார்.
அவர் தனது உரையில்...
"பாரதி சிறுவயதிலேயே கவிப்பனையும் ஆற்றலை பெற்று விட்டான்.
தான் சிறு வயது முதல் கற்றதை எல்லாம் எழுத்துக்களாக பதிவு செய்து வைத்திருக்கிறான்.
பெண் அடிமைத்தனமும், ஜாதிய ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்திருந்த காலகட்டத்தில் எட்டயபுரம் என்ற கிராமத்தில் பிறந்து எளிய மக்களோடு பழகி வளர்கிறான்.
மன்னர்களையும் ஜமீன்களையும் புகழ்ந்து பாடிக்கொண்டிருந்த காலத்தில் நாட்டையும், சமூகத்தைப் பற்றியும் பாடுகிறான்.
சுயசாதி பழக்கங்களை கேள்விக்குட்படுத்துகிறான்.
பார்ப்பனர்கள் அணியும் பூணூலை மற்றவர்கள் ஏன் அணியவில்லை என்று கேள்வி கேட்கிறான்.
பார்ப்பனர்கள் மட்டுமே அணிந்து கொள்ளும் பூணூல் சடங்கை தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் நடத்தி வைக்கிறான்.
உறவுகளால் வெறுக்கப்பட்ட பாரதி காசிக்கு அனுப்பி வைக்கப்படுகிறான்.
காசிக்குச் சென்ற பாரதி குல வழக்கத்திற்கு மாறாக பெரிய மீசை வைத்துக் கொள்கிறான்.
குழந்தை திருமணங்கள் சமூகத்தில் உருவாக்கி வைத்திருந்த இளம் விதவைகளை எல்லாம் காசியின் கங்கை வெள்ளத்தில் அடித்துச் செல்ல நிறுத்தி வைக்கப்படுவதை கண்டு நிலைகுலைந்து போகிறான்.
சமூகத்தின் அவலங்களை எல்லாம் தனது கவிதைகளால் சாடுகிறான். சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக தொடர்ந்து எழுதிக் குவிக்கிறான்.
இறப்பதற்கு முன்பு பாரதி கடைசியாக எழுதிய "உயிர் பெற்ற தமிழர் பாட்டு" என்ற கவிதை அன்றைய சமூகத்தால் நம்பப்பட்ட நம்பிக்கைகளை எல்லாம் கேள்விக்குள்ளாக்கும் கவிதையாகும். இன்றைக்கும் இளம் தலைமுறைகளினர் படிக்கும் தேவை உள்ளது.
மனிதரில் ஆயிரம் ஜாதி-என்ற வஞ்சக வார்த்தையை ஒப்புவதில்லை...
உண்மையின் பேர்தெய்வம் என்போம்-அன்றி
ஓதிடும் தெய்வங்கள் பொய்யெனக் கண்டோம் ....
உண்மைகள் வேதங்கள் என்போம்-பிறிது
உள்ள மறைகள் கதையெனக் கண்டோம்
கடலினைத் தாவும் குரவும்-வெங் கனலிற் பிறந்ததோர் செவ்விதழ்ப் பெண்ணும்,
வடமலை தாழ்ந்தத னாலே-தெற்கில் வந்து சமன்செயும் குட்டை முனியும்,
நதியி னுள்ளேமுழு கிப்போய் அந்த நாகர் உலகிலோர் பாம்பின் மகளை விதியுற வேமணம் செய்த-திறல் வீமனும்
கற்பனை என்பது கண்டோம்....
என்று இந்தியச் சமூகம் காலம் காலமாக நம்பிக்கொண்டிருந்த நம்பிக்கைகளுக்கு எதிராக கவி முனையும் தைரியம் அன்றே பாரதியிடம் காண்கிறோம்.
பாரதி விரும்பிய மாற்றம் சமூகத்தில் இன்னமும் நிகழவில்லை. பாரதி கண்ட புத்துலகை படைக்க பாரதியின் படைப்புகளை புதிய தலைமுறைகளுக்கும் எடுத்துச் சொல்வோம்.
அதன் ஒரு பகுதியாக பேராவூரணி பாரதி கலை இலக்கிய பேரவை பாரதியின் சிலையை பார்ப்பவர்கள் கண்களில் படும்படி பேருந்து நிலைய வளாகத்திற்குள் அமைத்திருக்கிறார்கள். இதில் கலந்து கொள்வதில் உண்மையிலேயே பெருமை அடைகிறேன்" என்றார்.
தீக்கதிர் நாளிதழ் ஆசிரியர் மதுக்கூர் ராமலிங்கம், சிபிஐ பொறுப்பாளர் சி.மகேந்திரன் ஆகியோர் மகாகவி பாரதிக்கு புகழாரம் சூட்டினார்.
பேரவையின் தலைவர் கே வி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா. அசோக்குமார் கல்வெட்டினை திறந்து வைத்தார்.
மேனாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.சிங்காரம், மா கோவிந்தராசு, பேரூராட்சி பெருந்தலைவர் சாந்தி சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
எழுத்தாளர்கள் கவிஞர்கள் அரசியல் ஆளுமைகள் பல்வேறு இயக்க பொறுப்பாளர்கள் என 500க்கும் மேற்பட்டவர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
கலந்து கொண்ட அனைவருக்கும் "பாரதியார் கவிதைகள்" நூல் பரிசாக வழங்கப்பட்டது.
நிகழ்வில் தமிழ்வழிக் கல்வி இயக்கம் வெளியிட்டுள்ள தமிழ் நாட்காட்டி அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
முன்னதாக புலவர் சு.போசு வரவேற்றுப் பேசினார். நிறைவாக பேரவை பொருளாளர் பாரதி வை.நடராஜன் நன்றி கூறினார்.
படங்கள்: பாரதி ந. அமரேந்திரன்
கருத்துகள்
கருத்துரையிடுக