பள்ளிக்கு நிலம் வாங்க பெருகும் ஆதரவு!



பேராவூரணி - பொன்னாங்கண்ணிக்காடு கிராமத்தில் உள்ளது ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி.
சுமார் 400 மாணவர்கள் படிக்கும் இந்தப் பள்ளிக்குப் போதுமான இடவசதி இல்லை. இதனால் பள்ளிக்கு அருகில் உள்ள தனிநபருக்குச் சொந்தமான ஆறு சென்ட் நிலத்தை பள்ளிக்காக வாங்கிட முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது என்ற செய்தியை பலமுறை நாம் இங்கு பதிவிட்டு இருக்கிறோம். கொடை உள்ளம் கொண்ட பலரும் நிதி வழங்கி வருகிறார்கள்.
இதுவரை புரவலர்களிடமிருந்து பெறப்பட்ட ரூபாய் நாலரை லட்சம் நிதி இரண்டு தவணைகளாக நில உரிமையாளரிடம் வழங்கப்பட்டுள்ள நிலையில், கொடை வழங்கும் நோக்கத்தோடு கடந்த ஞாயிறன்று புரவலர்கள் பலரும் பள்ளியில் கூடி ஒன்றரை லட்சம் நிதியை பள்ளிக்கு வழங்கினர்.
கொடை கொடுத்த நல்லுள்ளங்கள் மருத்துவர்கள் துரை. நீலகண்டன், விவேகானந்தன், பிரேமலதா, ரஞ்சித், பொறியாளர்கள் ஏசிசி ராஜா, துரையரசன், ந.சரவணன், மாவட்ட குழு உறுப்பினர் இலக்கியா நெப்போலியன், திராவிடர் கழக பொறுப்பாளர் வை.சிதம்பரம், தொழிலதிபர் லண்டன் ஸ்டீல்ஸ் கனி, செந்தில்குமார், சாகுல் ஹமீது ஆகியோருக்கு பள்ளிப் புரவலர் அரிமா எஸ் கந்தப்பன் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
பள்ளிக்குப் பெறப்பட்ட நிதி உடனடியாக நில உரிமையாளரிடம் மூன்றாம் தவணையாக வழங்கப்பட்டது.
இதுவரை திரட்டப்பட்ட நிதி இடத்திற்கான மதிப்பில் பாதியை நிறைவு செய்துள்ள நிலையில் இன்னும் பாதியை நிறைவு செய்திட நன்கொடை பெறும் முயற்சி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பள்ளி புரவலர் மருத்துவர் துரை.நீலகண்டன் தெரிவித்ததாவது," நல்ல பள்ளி சூழலை மாணவர்களுக்கு உருவாக்கிக் கொடுப்பது நல்ல சமுதாயத்தை கட்டமைப்பதாகும். ஆசிரியர்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் ஒன்று சேர்ந்து இந்த கட்டமைப்பை உருவாக்க வேண்டும். அரசு பள்ளிகள் சமூகத்தின் பெருஞ்சொத்து. ஏழை எளிய மாணவர்கள் ஏற்றம் பெற்றிட அரசு பள்ளிகளை காத்திடுதல் மிகவும் அவசியம். பள்ளிக்கு நிலம் வாங்கிட நன்கொடை வழங்க பலரும் முன் வர வேண்டும்" என்றார்.
பள்ளிக்கு நிலம் வாங்க நிதி வழங்கிட ஆர்வம் உள்ளவர்கள் பள்ளித் தலைமை ஆசிரியர் லதா ஈஸ்வரி அவர்களை 94 42 23 37 01 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பள்ளி வளர்ச்சிக் குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா