"தமிழ்நாடு" ஆளுநர் ஆர் என் ரவி


கட்சிகள், கொள்கை மாறுபாடுகள், கருத்து வேறுபாடுகள் எல்லாம் கடந்து ஆளுநரின் செயல்பாடுகள் பொதுமக்களிடம் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆளும் திமுகவுக்கு எதிர் நிலையில் இருக்கக்கூடிய கட்சிகள் கூட ஆளுநரின் செயல்பாட்டை விமர்சனம் செய்து வருகிறார்கள்.
தமிழகம்,
சனாதனம்,
புதிய கல்விக் கொள்கை இவற்றையெல்லாம் ஆளுநர் ஆர் என் ரவி தமிழ்நாட்டில் நிலை நிறுத்த விரும்பினால் அது தமிழ்நாட்டில் எடுபடாது.
தமிழ்நாட்டு மக்கள்,
தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் போன்றவர்களின் சமூக நீதி கருத்துக்களையும், சாவை துச்சம் என நினைத்து உயிர் ஈகம் செய்த சங்கரலிங்கனார் போற்றிய, பேரறிஞர் அண்ணா சூட்டிய தமிழ்நாடு என்ற பெயரையும் கொண்டாடுபவர்கள்.
மக்களாட்சியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் செயல்பாடுகளை முடக்கிப் போடும் ஆளுநரின் செயல் மக்களாட்சிக்கு விரோதமானது.
தமிழ்நாட்டின் சமூக நீதி கருத்துக்களை மனுநீதியால் முடக்கிப் போட முடியாது. சமூக நீதி, மதச்சார்பின்மை என்பதெல்லாம் தமிழர்களின் சிந்தனையோடு கலந்தது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுந்த சிந்தனை.
"தமிழ்நாடு" என்ற பழம்பெருமை வாய்ந்த பெயர் இந்த மாநிலத்திற்கு உயிர் ஈகம் செய்து சூட்டப்பட்டுள்ளது. ஈகத்தால் விளைந்தது இன்றைய "தமிழ்நாடு".
தமிழ்நாடு அரசு தயாரித்து அளித்த உரையை முறையாக வாசிக்காத ஆளுநரின் தன்னிச்சையான உரை அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பொங்கல் விழாவிற்கான அழைப்பிதழில் தமிழ்நாட்டு அரசின் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் கோபுர இலட்சினையை யும் தமிழ்நாடு என்ற பெயரையும் புறக்கணித்திருப்பது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழ்நாட்டு கோவில் கட்டிடக்கலையின் பெருமிதமான "ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரம்" தமிழ்நாட்டின் இலட்சினையாக உள்ளது. இந்து மதத்தில் பெருமிதம் கொள்ளும் ஆளுநர், இந்துக் கோவில் கோபுர இலட்சணையை அழைப்பிதழில் இருந்து நீக்கி இருப்பதன் மூலம் இந்து மதத்தை விட ஒன்றிய பாஜக அரசின் ஹிந்துத்துவா கொள்கையை தமிழ்நாட்டில் திணிக்க முற்படுவதையே வெளிப்படையாகக் காட்டுகிறது.
தமிழ்நாட்டின் பண்பாடு என்பது சனாதனத்திற்கு எதிரானது. தமிழ்நாட்டின் பண்பாட்டை மாற்ற முற்படும்போது தமிழர்களிடம் மூளும் போர்குணத்தை வரலாறு தொடர்ந்து பதிவு செய்து வைத்திருக்கிறது.
ஏறுதழுவுதல் என்னும் பண்பாட்டுப் பழக்கத்தை ஒன்றிய அரசு தடை செய்த போது தமிழ்நாட்டு இளைஞர்கள், பெரியவர்கள், சிறுவர்கள், பெண்கள் எனத் திரண்டு தெருவுக்கு வந்தார்கள். வரலாற்றுச் சிறப்புமிக்க பெரும் போராட்டத்தை நடத்தி ஜல்லிக்கட்டு உரிமையை வென்று காட்டினார்கள்.
ஆளுநர் என்பவர் ஒன்றிய மாநில அரசுகளுக்கு பாலமாக இருக்க வேண்டியவர்.
அப்படி இல்லாமல் ஆளுநர்கள் மாநிலங்களின் சித்தாந்தங்களில் தலையிடுவது, மாநிலத்தின் பெயரை மாற்ற முற்படுவது, பண்பாட்டை சிதைக்க நினைப்பது, மாநில அரசின் அழைப்பிதழில் மாநில இலச்சினை போட மறுப்பது போன்றவை தமிழர்களிடம் பெரும் கோபத்தை உருவாக்கும்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் கொள்கை முடிவுகளில் தலையிடுவதை ஆளுநர் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். ஒன்றிய அரசு இதை ஆளுநருக்கு அறிவுறுத்த வேண்டும்.
இல்லையென்றால்
"ஆளுநர் பதவி அவசியம் அற்றது" என்ற முழக்கம் இந்தியா முழுவதும் ஒலிப்பதை தடுக்க முடியாது.
"அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று"

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா