சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்குக! பெரியார் அம்பேத்கர் நினைவு நாள் பட்டிமன்றத்தில் பேச்சு!



தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கம் சார்பில் பேராவூரணி பேருந்து நிலையம் அருகில் உள்ள எம்எஸ் விழா அரங்கத்தில் பட்டிமன்றம் நடைபெற்றது.

இட ஒதுக்கீட்டால் சாதி வளர்கிறதா தளர்கிறதா என்கிற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.
பார்வையாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் வாக்களித்தனர். இட ஒதுக்கீட்டால் சாதி தளர்கிறது என்ற தலைப்பிற்கு 85 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. திராவிடர் கழக மாவட்ட அமைப்பாளர் தோழர் வை. சிதம்பரம் பார்வையாளர்களின் வாக்குகளை எண்ணி முடிவினை அறிவித்தார்.
இட ஒதுக்கீட்டால் சாதி வளர்கிறது என்ற அணியில் ஆயர் த.ஜேம்ஸ், பேராசிரியர் ச.கணேஷ்குமார், பேராசிரியர் அன்பரசி ஆகியோர் பேசினர்.
இட ஒதுக்கீட்டால் சாதி தளர்கிறது என்னும் அணியில் திராவிடர் கழகத் தோழர் மகாராசா, மெய்ச்சுடர் ஆசிரியர் நா.வெங்கடேசன், பேராசிரியர் பா.சண்முகப்பிரியா ஆகியோர் பேசினர்.
முனைவர் ஜீவானந்தம் தனது தீர்ப்புரையில்
"இட ஒதுக்கீட்டால் பயன் பெற்றவர்கள் சாதி ஒழிப்புக்கு ஏதும் செய்யாமல் சுயநலவாதிகளாக இருப்பது மட்டுமல்லாமல் சாதியை வளர்ப்பதற்கும் துணை போகிறார்கள். எனவே அது இட ஒதுக்கீட்டு எதிர்ப்புக் கருத்துக்கள் பேசுபவர்களுக்குச் சாதகமாக அமைந்து விடுகிறது.
உயர்சாதி ஏழைகள் என்ற பெயரில் வழங்கப்படும் இட ஒதுக்கீடு சமூக நீதியைக் குழி தோண்டிப் புதைப்பதாகும்.
இட ஒதுக்கீட்டால் பயன் பெற்ற ஒவ்வொருவர் இல்லங்களிலும் தந்தை பெரியார் அண்ணல் அம்பேத்கர் ஆகியோர் படங்களைக் கண்டிப்பாக வைக்க வேண்டும்.
இட ஒதுக்கீடு பற்றிய வரலாற்றை ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பாடமாக வைக்க வேண்டும்.
சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களின் வாரிசுகளுக்கு கல்வி வேலை வாய்ப்பு படிவங்களில் சாதியற்றோர் மதம் அற்றோர் என்கிற தனி இடம் ஒதுக்கப்பட வேண்டும்.
சாதியற்றோர் இட ஒதுக்கீடு 10% வழங்க வேண்டும்.
சாதிக் கலவரங்களில் ஈடுபட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீட்டு சலுகையை ரத்து செய்ய சட்டம் கொண்டுவர வேண்டும்.
இந்த கோரிக்கைகளை நிறைவேற்றிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க ஸ்டாலின் அவர்களுக்கு கோரிக்கை வைக்கிறேன்.
பட்டிமன்றத்தில் பங்கேற்றவர்கள் பார்வையாளர்கள் வழங்கிய வாக்கின் அடிப்படையிலும் சமூக நீதியின் அடிப்படையிலும் இட ஒதுக்கீட்டால் சாதி தளர்கிறது என்று தீர்ப்பளிக்கிறேன்" என்றார்.
முன்னதாக இயக்கத்தின் பொதுச்செயலாளர் தங்க குமரவேல் பட்டிமன்றத்தின் நோக்கங்களை குறித்து உரை நிகழ்த்தி நிகழ்வை தொடங்கி வைத்தார்.
தொடக்கத்தில் தமிழக மக்கள் புரட்சிக் கழக கொள்கை பரப்புச் செயலாளர் தோழர் ஆறு. நீலகண்டன் அவர்களின் தாயார், சில நாட்களுக்கு முன் வயது மூப்பால் இயற்கை எய்திய திருமதி சாரதாம்பாள் அவர்களின் திருஉருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
நிறைவாக நடுவர் உள்ளிட்ட பட்டிமன்றப் பேச்சாளர்களுக்கு பாரத ஸ்டேட் வங்கியின் பேராவூரணி கிளை மேலாளர் ராகவன் சூர்யேந்திரன் அவர்கள் பொன்னாடை அணிவித்துப் பாராட்டினார்.


சிபிஎம், சிபிஐ, திராவிடர் கழகம், தமிழ்வழிக் கல்வி இயக்கம், தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கம் போன்ற அமைப்புகளைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா