பேராவூரணி வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டது! தொடர் ஓட்டம்



பேராவூரணியில் "ழ" பவுண்டேஷன் ஒருங்கிணைப்பில் "உடல்நலம் மனநலம் காப்போம்" என்ற விழிப்புணர்வை நோக்கமாகக் கொண்டு நேற்று 22 .1.2023 ஞாயிறு காலை 7 மணிக்கு தொடர் ஓட்ட நிகழ்வு நடைபெற்றது.
காலை 7 மணிக்கு தொடர் ஓட்டம் தொடங்கும் என்று அறிவித்திருந்தாலும் வீடுகளில் 4 மணிக்கே எழுந்து பெற்றோர்களை துரிதப்படுத்தினர் இளஞ்சிரார்கள்.
சுமார் 1500 மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் ஒருசேர கூடியதில் பேராவூரணி பெரு நகரமே ஸ்தம்பித்து போனது.
எதிர்பார்த்ததை விட அதிக மாணவர்கள் கூடிவிட விழா குழுவினர் மிகவும் திறமையாக நிகழ்வை நடத்தி முடித்தனர்.
போட்டியாக அல்லாமல் இலக்கு நோக்கிய பயணத்தை எட்டி விட வேண்டும் என்ற சிந்தனையை மாணவர்களிடம் இந்தத் தொடர் ஓட்ட பயணங்கள் ஏற்படுத்தி இருக்கிறது.
பேராவூரணியில் தொடர் ஓட்டம் என்பது இது முதல் முறை. பேராவூரணி வட்டாட்சியர் வளாக திடலில் ஒன்று கூடிய மாணவர்கள் அங்கிருந்து வயதுக்கு ஏற்ற இலக்குகளை நோக்கி ஓட்டத்துடன் பயணித்தனர்.
மூன்று வயது சிறுவன் முதல் 70 வயது பெரியவர் வரை இந்தத் தொடர் ஓட்ட பயணத்தில் கலந்து கொண்டனர்.
குழந்தைகளோடு பெற்றோர்களும் பயணித்தது பார்ப்பவர்களை மகிழ்ச்சி படுத்தியது.
சாலையோரங்களில் இருசக்கர வாகனங்களை நிறுத்திக் கொண்டு "பாப்பா போதும் வா வண்டியில் ஏறிக்கொள்" "டேய் தம்பி போதும்டா" என்று பெற்றோர்கள் அழைத்தபோதும் அதைப் பொருட்படுத்தாமல் இலக்கை நோக்கி பயணித்த சிறார்களை பார்த்தவர்கள் பரவசமடைந்தனர். இவர்கள்தான் எதிர்கால சமூகத்தின் நம்பிக்கை தூண்கள் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக இந்த நிகழ்வுகள் இருந்தன.
பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா. அசோக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முன்னோடி விவசாயிகள் கோவிந்தராசு, முருகையன், நடராஜன், திரைப்பட இயக்குனர் அகத்தியன், மருத்துவர்கள் மு.மாஸ்கோ, ஜமால் முகமது, ஜெயபால் உள்ளிட்டவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
நிகழ்வில் கோட்டாட்சியர் பிரபாகரன், பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா. அண்ணாதுரை, பேராவூரணி பேரூராட்சி பெருந்தலைவர் சாந்தி சேகர், பேரூராட்சி உறுப்பினர்கள், மணமேல்குடி ஒன்றிய குழு தலைவர் பரணி கார்த்திகேயன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மருத்துவர்கள் துரை. நீலகண்டன், வி.சௌந்தர்ராஜன், இரா.சந்திரசேகர், உடற்கல்வி ஆசிரியர்கள் சோலை, விண்முகில், மதியழகன், ஜெய்சங்கர், ரங்கேஸ்வரி, அன்னமேரி, குமார், லதா, அமுதவல்லி, ரஜினி, லட்சுமணன், ரவி, முரளிதரன், ரமேஷ், ஆனந்தன், சுப்பிரமணியன், ரீகன், விக்னேஷ், சபிதா, ஆனந்தராஜ், கௌரி, பாஸ்கரன், சுரேகா, செல்வி, கற்பகவல்லி, சுதா, சுப்புலட்சுமி, குகன், செந்தில்குமார், அன்பரசன், இளங்கோவன், ராமச்சந்திரன், முத்துக்குமார், மணிகண்டன், நீலகண்டன், ராஜ்குமார் மற்றும் மருத.உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆசிரியர் சீ.கௌதமன் நிகழ்வுகளை தொகுத்தளித்தார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கார்க்கி அசோக்குமார் நன்றி கூறினார்.
வரும் ஆண்டுகளில் ஓட்டப் பாதையில் வாகனங்கள் வராமல் தடை செய்து, குறிப்பிட்ட இடைவெளியில் தண்ணீர், மருத்துவ வசதிகள் செய்து கொடுத்து, ஓட்ட வீரர்களுக்கு சத்தான திட உணவு வழங்கி, ஓட்டப் பயணத்திற்கு பதிவு செய்யும்பொழுதே சீருடை, வரிசை எண் போன்றவற்றை கொடுத்து இன்னும் கூடுதல் திட்டமிடல்களோடு நிகழ்வை நடத்த வேண்டும் என்ற ஆலோசனையோடு விழா குழுவிற்கு மெய்ச்சுடர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.










கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா