அரசுப் பள்ளியில் அபாகஸ் தேர்வு
குளோபல் அகாடமி ஆப் எக்ஸலன்ஸ் அமைப்பு தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து, தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களை தேர்வு செய்து அவர்களுக்கு அபாகஸ் பயிற்சி வழங்கியது. அரசு பள்ளி மாணவர்களுக்கு இந்த பயிற்சியை வழங்கும் நோக்கத்தோடு முதற்கட்டமாக ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வடகிழக்கு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி ஆசிரியர் காஜாமுகைதீன் இப்பயிற்சியினை பெற்றுக் கொண்டு, தனது பள்ளியில் படிக்கும் ஆர்வமுள்ள 40-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இலவசமாக இப்பயிற்சியை வழங்கினார்.
கடந்த சில மாதங்களாக நடைபெற்ற அபாகஸ் பயிற்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு 17-03-2024 ஞாயிறன்று சர்வதேச அளவில் தேர்வு நடத்தப்பட்டது.
பேராவூரணி வடகிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற தேர்வில் இப்பள்ளியை சேர்ந்த 43 மாணவர்களும், மதுக்கூர் ஒன்றியம், புலவஞ்சி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியைச் சார்ந்த 10 மாணவர்களும் கலந்து கொண்டனர்.
தேர்வாகும் மாணவர்களுக்கு நினைவு பரிசு மற்றும் சான்றிதழ்கள் அகடமி சார்பில் வழங்கப்பட உள்ளதாக குளோபல் அகாடமி ஆப் எக்ஸலன்ஸ் அமைப்பின் நிறுவனர் பிரஷிதா கூறியுள்ளார்.
தேர்வுகள் ஆடுதுறை, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் பால்ராஜ் முன்னிலையில் நடைபெற்றது.
தேர்வுக்கான ஏற்பாடுகளை பேராவூரணி வடகிழக்குப் பள்ளி ஆசிரியர் காஜாமுகைதீன், மதுக்கூர் புலவஞ்சி பள்ளி ஆசிரியர் முத்துவேல் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
தேர்வு எழுதிய மாணவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் சித்ராதேவி, பள்ளி மேலாண்மை குழு தலைவி ஜெசிரா, பேரூராட்சி உறுப்பினர் ஹபீபா ஃபாரூக், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சீ.கௌதமன், மெய்ச்சுடர் நா.வெங்கடேசன், ஆசிரியர் ஜோதி ஆகியோர் வாழ்த்தினர். நிகழ்வில் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
போட்டிகள் நிறைந்த உலகில் அரசுப்பள்ளி மாணவர்களின் திறனை மேம்படுத்திட அரசுப் பள்ளிகளில் அபாகஸ் பயிற்சி வழங்கி வரும் பள்ளி ஆசிரியர்களை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக