பத்(க்)தி என்றாலும் ஒழுக்கம் தான்


எனது ஊர் ஆத்தாளூர்.  இங்கு அமைந்துள்ள அருள்மிகு வீரமாகாளி அம்மன் கோவில் மிகவும் புகழ்பெற்றது.   


 இங்கு அமைந்துள்ள மரியம்பீவி அம்மாள் தர்கா தமிழ்நாட்டில் இஸ்லாமிய பக்தர்களால் கொண்டாடப்படும் ஆலயம்.  


எங்கள் பேராவூரணி நகர் பகுதியில் அமைந்துள்ள திருநீலகண்ட பிள்ளையார் ஆலயம் மிகவும் புகழ் பெற்றது.  


வீரமாகாளி அம்மன் கோவிலில் மார்கழி மாத திருப்பள்ளி எழுச்சி நேரங்களில் பள்ளிவாசல் தெருவில் இருந்து நிறைய இஸ்லாமியர்கள் கோவிலுக்கு வந்து பட்டைச் சோறு வாங்கிச் செல்வதை பார்த்திருக்கிறேன்.  


உடல் நலம் இல்லாத இந்துக்கள் மரியம் பீவி அம்மாள் பள்ளிவாசலுக்கு சென்று பொட்டுக்கடலை சர்க்கரை படைத்து பாத்தியா ஓதி உண்பதை பார்த்திருக்கிறேன்.


பேராவூரணி திருநீலகண்ட பிள்ளையார் திருக்கோவில் திருவிழா  நிகழ்ச்சிகள்  இங்குள்ள இஸ்லாமியர்கள் பங்களிப்போடு நடந்து வருகிறது.  


திருநீலகண்ட பிள்ளையார் திருக்கோவில் தெருக்களில் இஸ்லாமிய பெண்கள் எவ்வித அச்சமும் இன்றி விழாக்களில் கலந்து கொள்வார்கள்.  


"எனக்கு ஏன் நோன்பு கஞ்சி தரல?" என்று கேட்டு வாங்கிச் சாப்பிடும் பண்பாடு இங்குள்ள இந்துக்களிடம் இன்றும் நடைமுறையில் உள்ளது.  தூக்குவாளி நிறைய நோன்புக் கஞ்சியை வாங்கி அக்கம் பக்கத்தில் உள்ளவர்களோடு பகிர்ந்து சாப்பிடும் பண்பாடு இங்கு மறையவில்லை.  


சித்திரை மாத கொளுத்தும் வெயிலில் பேராவூரணி கடைவீதிகளில் காவடி தூக்கி வரும் மக்களுக்கு கால் சூட்டை தணிப்பதற்காக பள்ளிவாசல் ஆழ்துளை கிணற்றிலிருந்து தகிக்கும் தார்ச்சாலைகளில் தண்ணீர் பீச்சி அடிக்கப்படும்.  


கோவில் விழாக்களை கொண்டாட்டத்தோடு தான் நடத்தி வருகிறோம்.  


சமயமும் சமயச் சடங்குகளும் மானுட ஒற்றுமையை வலியுறுத்துவதாக இருக்க வேண்டும்.  அந்த ஒற்றுமையை பேராவூரணியின் ஒவ்வொரு பொது நிகழ்விலும் பார்த்து மகிழலாம்.


ஆனால், வட இந்தியாவில் நடந்ததாக இன்று சமூக வலைதளங்களில் வலம் வரும் காணொளிகள் மனித இனத்தின் மீதான கண்ணியத்தை குழி தோண்டி புதைத்து இருக்கிறது. 


பிஞ்சுகளின் நெஞ்சில் நஞ்சை விதைக்கும் மதவெறி கூட்டம் கொண்டாட்டத்தில் ஈடுபடுவதை அந்த காணொளி வெளிப்படுத்தியது.  


அந்தக் காணொளியில் இஸ்லாமிய பெண் ஒருவர் சாலையில் நடந்து செல்லும் பொழுது அவர் மீது ஏதோ ஒரு பொருளை வீசி எறியும் ஒரு சிறுவனின் நெஞ்சில் மதவெறி பற்றி எரிவதை பார்க்க முடிகிறது.  அந்தப் பெண் மீது மீண்டும் மீண்டும் எதையோ வீசி எறிகிறான்  சிறுவன்.  எதையும் பொருட்படுத்தாமல் தன் மீது தாக்குதல் நடத்தும் நபரை யார் என்று கூட பார்க்காமல் கடந்து செல்கிறாள் அந்த இஸ்லாமிய பெண்.  


தமிழ்நாட்டின் காவிரி நதி பாயும் கடைமடை பகுதியில் நடைபெறும் சமய விழாக்களின்   பண்பாடு உங்களின் ஹோலி பண்டிகையில் காண முடியவில்லையே? 


ஹோலி பண்டிகையில் கொடூரமாய் நிகழ்ந்தறிய காட்சிகளைத் தான் இங்கும் நிகழ்த்தப் பார்க்கிறார்கள். மதவெறியேற்றப்பட்ட மக்கள் கூட்டமாக தமிழ்நாட்டை மாற்ற துடிக்கிறார்கள்.  


வடநாட்டில் மத வெறியேற்றப்பட்ட நச்சுச் சிந்தனை மெல்ல மெல்ல இங்கும் விதைக்கப்பட்டு கொண்டிருக்கிறது.  


ஆனால் தமிழ்நாடு சமய பற்றுக்கும் மதவெறிக்கும் உள்ள வேற்றுமையை நன்கு பகுத்தறியும் பக்குவம் நிறைந்தது.  


வள்ளலார், ஐயா வைகுண்டர் போன்ற  சமய நெறியாளர்களிடம் சமயநெறியை கற்றுக்கொண்ட பகுதி தமிழ்நாடு. 


தமிழ்நாட்டின் இந்தப் பகுத்தறிவைத் தான் வடநாடு முழுவதும் வளர்த்தெடுக்க வேண்டும்.   அப்போதுதான் மதவெறி பண்பாட்டில் இருந்து மானுட சமூகத்தை காக்க முடியும்.


நம்பிக்கையுடன்,,

ஆசிரியர்,

மெய்ச்சுடர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா