"பெற்றோர்கள் தரும் ஊக்கத்தினால் மட்டுமே பள்ளி ஆசிரியர்கள் சிறப்பாக செயல்பட முடியும்" - கழுமங்குடா பள்ளித் தலைமை ஆசிரியர் கருத்து.



 ""பெற்றோர்கள் தரும் ஊக்கத்தினால் மட்டுமே பள்ளி ஆசிரியர்கள் சிறப்பாக செயல்பட முடியும்" -  கழுமங்குடா பள்ளித் தலைமை ஆசிரியர் கருத்து.


மாணவர்கள் சேர்க்கையில் கழுமங்குடா தொடக்கப்பள்ளி சாதனை

---------------------------------------------

தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், கழுமங்குடா ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை பேரணி நடைபெற்றது.  


பள்ளித் தலைமை ஆசிரியர் கி.ஷஜிதா தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரணியில் பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள், பெற்றோர்கள், இல்லம் தேடிக் கல்வித் திட்ட தன்னார்வலர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


மார்ச் ஒன்று  தொடங்கிய மாணவர்கள் சேர்க்கையில் இதுவரை 15 மாணவர்கள் சேர்க்கை செய்யப்பட்டுள்ளனர்.  தொடக்கப் பள்ளியில் இது சாதனை எண்ணிக்கையாகும்.  


தமிழ் வழியில் மட்டுமே இப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது வருகிறது.  


"பள்ளிக் கட்டமைப்பு, கல்விச் சூழல், ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மிக்க செயல்பாடுகள், பள்ளியின் உட்கட்டமைப்பில் ஊர் பெரியவர்கள் மற்றும் பெற்றோர்களின் பங்களிப்பு காரணமாக பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்து வருகிறது" என்கிறார் பள்ளியின் தலைமையாசிரியர்.


தான் செல்லும் பள்ளிகளில் எல்லாம் பள்ளியின் உட்கட்டமைப்பை சிறப்பாக மாற்றி மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் பணியை சிறப்பாக செய்பவர் இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஷஜிதா, 


இப்பள்ளியில் தலைமைப் பொறுப்பை ஏற்ற உடன் வெளுத்துப்போன பள்ளிச் சுவர்களை வண்ணமயமாக மாற்றி சுவர் ஓவியங்களை வரைந்து வைத்துள்ளார்.  


மாணவர்கள் பள்ளிக்குள் நுழைந்த உடன் தாங்கள் அணிந்திருந்த காலணிகளை வரிசையாக அடுக்கி வைக்கின்றனர்.  வகுப்பறைக்கு வரும் விருந்தினர்களுக்கு மாணவர்கள் எழுந்து நின்று வணக்கம் சொல்கின்றனர்.  தமிழ் ஆங்கிலம் இரண்டு மொழிகளையும் இயல்பாக வாசிக்கும் திறனை ஒவ்வொரு மாணவர்களும் பெற்றுள்ளனர்.  


ஆங்கில வழியில் பயிலும் மாணவர்கள் இங்கு இல்லை என்றாலும் ஆங்கில மொழிப் பாடத்தை சிறப்பாக படிக்கிறார்கள்.  திருக்குறள், கணித திறன் போன்றவற்றிலும் மாணவர்களின் திறன் சிறப்பாக உள்ளது.


தமிழ்நாடு அரசால் தொடக்கப் பள்ளிகளில் நடைபெற்ற  கலை போட்டிகளில் இப்பள்ளியைச் சேர்ந்த 8 மாணவர்கள் ஒன்றிய அளவில் வெற்றி பெற்றுள்ளனர். இதில் 6 மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர்.  ஒரே பள்ளியைச் சேர்ந்த 6 மாணவர்கள் ஒன்றிய அளவில், போட்டிகளில் வெற்றி பெற்றிருப்பது பெற்றோர்களிடம் பெரும் மகிழ்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.


 இதுகுறித்து தலைமை ஆசிரியர் கூறியதாவது, 


"மாணவர்களிடம் வகுப்பறை ஒழுங்கை உருவாக்கி விட்டால் கல்வி திறனையும் தனித்திறனையும் அவர்கள் இயல்பாகவே எட்டி விடுகிறார்கள்.  


 தமிழ் வழிக் கல்வியின் அவசியத்தையும், தமிழ் வழியில் படித்தால் மாணவர்கள் பெறும் உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பு குறித்தும் பெற்றோர்களிடம் பேச வேண்டும்.  இப்பகுதி பெற்றோர்கள் தமிழ் வழிக் கல்வியின் அவசியத்தை நன்கு உணர்ந்துள்ளனர்.


ஒன்றிரண்டு ஆண்டுகள் ஆங்கில வழியில் படித்து விட்டு பிறகு தமிழ் வழியில் படித்தால் எதிர்காலத்தில் மாணவர்களுக்கு தமிழ் வழியில் படித்ததற்கான இட ஒதுக்கீடு கிடைக்காமல் போய்விடும்.  


இதனால் மாணவர்களின் வேலை வாய்ப்பு பறிபோகும் ஆபத்தை உணர்ந்தே பகுதி பெற்றோர்கள் தமிழ் வழிக் கல்வியை தங்கள் பிள்ளைகளுக்கு தேர்வு செய்கின்றனர்.


தமிழ் வழியில் படித்தால் மாணவர்கள் இயல்பூக்கம் பெறுகிறார்கள்.  கற்றல் சுமை  குறைகிறது" என்கிறார்.   


இப்பள்ளியில் மாணவர் எண்ணிக்கை 94 ஆக உள்ளது.   இந்த ஆண்டு செயற்கை செய்துள்ள புதிய மாணவர்களுக்கு














































கற்பலகை மற்றும்  வெண் குச்சி வழங்கி வரவேற்பு செய்துள்ள  தலைமை ஆசிரியர், அவர் பெற்ற அங்கீகாரம் குறித்து கூறும் பொழுது, "பெற்றோர்கள் வழங்கும் அங்கீகாரம் மட்டுமே நிரந்தரமானது என்பது எனது கருத்து.  பள்ளி மாணவர்களின் திறனை அருகிருந்து பார்ப்பவர்கள் அவர்கள் தான்.  பெற்றோர்கள் தரும் ஊக்கத்தினால் மட்டுமே ஒவ்வொரு ஆசிரியரும் சிறப்பாக செயல்பட முடியும்" என்கிறார்.


மேலும் பொதுச் சமூகத்தில் ஆசிரியர்களுக்கான நம்பிக்கை சரிந்து வருவதாக கூறும் இவர், "தங்களது பிள்ளைகளை ஆசிரியர்கள் அரசுப் பள்ளியில் சேர்த்தால் மட்டுமே ஆசிரிய சமூகம் பொதுவெளியில் நம்பிக்கையை பெற முடியும்", என்கிறார். 


இவர் தனது மகளை தான் பணியாற்றும் அரசுப் பள்ளியிலேயே சேர்த்து படிக்க வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


பள்ளியின் தலைமை ஆசிரியர் கி.ஷஜிதா மற்றும் பள்ளியின் ஒவ்வொரு ஆசிரியர்களையும் மெய்ச்சுடர் உளமாற வாழ்த்துகிறது.   


இவர்களைப் போன்ற ஆசிரியர்களால் மட்டுமே அரசு பள்ளிகளில் மீதான நம்பிக்கை துளிர் விடுகிறது.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா