'உக்கி போடுதல்' உடற்பயிற்சியின் ஓர் அங்கம்! உலக சாதனை நிகழ்வில் தோப்புக்கரணம் மணிகண்டன் வலியுறுத்தல்!
பேராவூரணியில் உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது. 18 நிமிடங்களில் 558 உக்கி போட்டு உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றார் தோப்புக்கரணம் பயிற்சியாளர் ஜெ. மணிகண்டன். தனது சாதனையை நிறைவேற்றிய பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
"சமய அடையாளமாகவும், தண்டனை குறியீடாகவும் கருதி வரும் தோப்புக்கரணம் என்ற 'உக்கி போடுதல்' உடற்பயிற்சியின் ஒரு அங்கம். தமிழர்களின் பழமையான ஓகக் கலையின் வடிவம். தமிழர்கள் சமயம் கடந்து இதை பின்பற்றி உடல் நலத்தோடு வாழ முற்பட வேண்டும்" என்று குறிப்பிட்டார்.
திருநீலகண்ட பிள்ளையார் கோவில் விழா அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வை பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் தொடங்கி வைத்தார்.
அரங்கில் பார்வையாளர்கள் முன்னிலையில் தனது சாதனையை நிகழ்த்தி காட்டி உலக சாதனை புத்தகத்தில் தனது பெயரை பதிவு செய்தார் மணிகண்டன்.
தொடர்ந்து ஓராண்டுக்கும் மேலாக பள்ளிகளில் மாணவர்களுக்கு மத்தியில் இந்த பயிற்சி முறையை பரப்புரை செய்து வந்தார் மணிகண்டன். தான் எதேச்சையாக தொடங்கி பின்பு முறைப்படுத்தப்பட்ட முறையில் உக்கி போடத் தொடங்கியதற்கு பிறகு தனது உடல் நலனில் ஏற்பட்ட நல்ல முன்னேற்றத்தின் அடிப்படையில் இதை மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் பரப்புரை செய்வதாக கூறி வந்தார்.
இந்த பயிற்சி முறையின் மீது பொதுமக்கள் மற்றும் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உலக சாதனையில் ஈடுபட்டதாகவும் மணிகண்டன் குறிப்பிட்டார்.
உலக சாதனையாளர் ஜெ.மணிகண்டனுக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்தும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரின் பரப்புரை குறித்து மெய்ச்சுடர் சிறப்பு கட்டுரை வெளியிட்டு பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
https://meichuder2010.blogspot.com/2023/09/blog-post.html
வாழ்த்துக்களுடன்,
ஆசிரியர்,
மெய்ச்சுடர்.
கருத்துகள்
கருத்துரையிடுக