"தமிழ் ஒரு சூழலியல் மொழி" - வாசிப்போம்!
ஞாயிற்றின் தாக்கத்தால் தகிக்கிறது தமிழ்நாடு. சுடுகாட்டு வைராக்கியம் போல் தற்பொழுது சூழலியல் சார்ந்த சிந்தனைகள் சமூக ஊடகங்கள் தொடங்கி திக்கெட்டும் சுடர் விடுகிறது.
இந்நேரத்தில் மொழி சார்ந்தும் சூழலியல் சார்ந்தும் ஒரே நூல்! காலத்தின் அருமை கருதி ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டும்.
சூழலியல் எழுத்தாளர் நக்கீரன் அவர்களின் படைப்புதான் "தமிழ் ஒரு சூழலியல் மொழி" நூல்.
மொழி என்பது தகவல் தொடர்புக்கான கருவி என்ற அளவில் சுருங்கிவிட்ட சமூகத்தில் உயிருள்ள ஒரு மொழி குறித்து உயிர்பெற்ற எழுத்துக்களால் உருவாக்கப்பட்டது இந்த நூல்.
"சமஸ்கிருதம் தேவ மொழி என்றால், அப்படியே ஆகட்டும். வானின்று வந்த மொழி என்றாலும் வானுறையும் தெய்வத்துடன் வாழ்வாங்கு வாழட்டும். எனக்கு கவலை இல்லை. ஆனால், தமிழ் என்பது நிலத்தில் புழங்கும் மொழி. அது கால்களில் புழுதித் தோய தெருவில் நடைபயில்கிறது. தூசி படிந்தால் துடைத்துக் கொள்கிறது. அழுக்கு ஒட்டினால், குளித்துக் கொள்கிறது. ஏனென்றால், தமிழ் என்பது மண்ணின் மொழி" எவ்வளவு பெரிய உண்மை.
பொய்களால் எப்படி வலிமையான கட்டிடத்தை கட்டி விட முடியும்? தமிழ் உண்மையின் மீது கட்டப்பட்டதால் உண்மையை உடைத்தெறிய துடிக்கிறார்கள்.
சூழலியல் சூழ்ந்து அரணாக நின்று தமிழைக் காப்பது அறிந்து தமிழ் நிலத்தின் சூழலை கெடுக்க சூழ்ந்து நிற்கிறார்கள்.
சொந்த நிலமற்ற மொழிகள் நிலத்தின் மொழிகளை ஒழித்துக் கட்ட ஈராயிரம் ஆண்டுகளாக முயற்சித்து வருகின்றன. திணைக்கோட்பாடு கொண்ட இந்நிலம் தமிழை காத்து நிற்கிறது.
இலக்கியம், பண்பாடு இவைகள் எல்லாம் சூழல் சார்ந்து நிற்கும் பொழுது, சூழல் இவைகளை பாதுகாத்து வழி நடத்தும் என்பதை மிகத் தெளிவாக விளக்குகிறது இந்நூல்.
சங்க இலக்கியம் தொடங்கி சமகால இலக்கியங்கள் வரை தொன்றுதொட்டு பேசும் திணைக்கோட்பாடு பழக்கத்திலிருந்தும் புழக்கத்தில் இருந்தும் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. திணை கோட்பாடு அழிந்தால், மொழியும் அழியும் என்ற ஆழமான கருத்தினை மொழி சார்ந்தும் சூழல் சார்ந்தும் எடுத்துச் சொல்கிறார் ஆசிரியர்.
தமிழை பெருமைப் படுத்துகிறேன் பேர்வழி என்று தமிழ் நிலத்தின் கூறுகளை அழித்துவிட்டு நின்றால் தமிழை காக்க முடியாது. தமிழ் மண்ணோடு கலந்த மொழி என்பதை வார்த்தைக்கு வார்த்தை விளக்குகிறார் நூலாசிரியர்.
திணை சார்ந்த வாழ்வு, தினை சார்ந்த பழக்கம், திணை சார்ந்த அறிவியல், திணை சார்ந்த மொழி நடை தமிழையும் தமிழரையும் காக்கும் என்பதை நூல் நன்கு விளக்குகிறது. அதை விடுத்து ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே மதம், ஒரே பண்பாடு போன்ற ஒரே பைத்தியம் பிடித்த குரல்களால் விளையும் நிலைகளையும் விளக்குகிறது.
ஐந்து பகுதிகளாக 26 தலைப்புகளில் 155 பக்கங்களில் பல்வேறு சான்றுகளோடு ஆய்வுக் கண் கொண்டு எழுதப்பட்டுள்ளது இந்த நூல். காடோடி பதிப்பகத்தின் வெளியீடாக வெளிவந்துள்ள இந்த நூலை ஒவ்வொருவரும் அவசியம் வாசித்து விடுங்கள். சமகால சிக்கல்கள் பலவற்றுக்கு தீர்வாக அமையும்.
மொழி, சூழல் சார்ந்த படிப்புகளை மேற்கொள்ளும் ஒவ்வொரு மாணவர்களின் கைகளிலும் பாடப்புத்தகமாக சேர்க்க வேண்டிய நூல் இந்த நூலாகும். தமிழ்நாடு அரசு இந்த கோரிக்கைக்கு செவி சாய்க்க வேண்டும்.
பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் மேனாள் மாணவர் அன்புமிக்க தோழர் ஐயா நக்கீரன் அவர்களின் படைப்புகள் அனைத்தும் பேராவூரணி பெரியார் அம்பேத்கர் நூலகத்தில் வாசிக்க கிடைக்கிறது.
ஆசிரியர்,
மெய்ச்சுடர்.
கருத்துகள்
கருத்துரையிடுக