தவம்
இந்திய ஒன்றியத்தின் தலைமை அமைச்சர் தமிழ்நாட்டின் குமரி முனையில் விவேகானந்தர் மண்டபத்தில் தவம் மேற்கொள்வதாகவும் மூன்று நாள் இடைவிடாத தவம் என்றும் கூறப்படுகிறது.
பொதுவாகவே தவம் மேற்கொள்பவர்கள் அமைதியாக தான் இருக்கும் இடம் யாருக்கும் தெரியாத வகையில் மலைகளிலோ காடுகளிலோ குகைகளிலோ தவம் இருப்பார்கள் என்று அறிந்திருக்கிறோம்.
சமூக வெளிச்சம் கொண்டவர்கள் தங்களை மறைத்துக் கொண்டு யாரும் அறியாத வகையில் திருவண்ணாமலை, இமயமலை போன்ற பகுதிகளில் தவம் மேற்கொள்வதை தெரிந்திருக்கிறோம்.
புத்த, சமண துறவிகள் பசி மறந்து உறக்கம் மறந்து தவம் மேற்கொண்டு இயற்கையின் அரிய ஆற்றல்களை அறிந்து கொண்டதாக படித்திருக்கிறோம்.
ஆர்ப்பரிக்கும் அலைகளுக்கு நடுவே பாறையின் மீது அமர்ந்து தவம் மேற்கொண்டார் சுவாமி விவேகானந்தர்.
அலைகளுக்குள் எழும் பேரும் அமைதியை அனுபவம் செய்தார் விவேகானந்தர். அவர் பாறையின் மீதமர்ந்து தவம் மேற்கொண்ட போது எந்த மண்டபங்களும் அங்கு இல்லை. அவர் தவம் மேற்கொள்வதை எந்த ஊடகங்களுக்கும் அவர் அறிவிக்கவும் இல்லை என்பதை வரலாற்றின் பக்கங்களில் இருந்து அறிந்து கொள்கிறோம்
விளக்கு ஏற்றும் எண்ணெய், பத்தி, சூடம் போன்ற வழிபாட்டு பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்களின் விளம்பரப் படங்களிலும், திரைப்படங்களிலும் தோன்றும் திரைக் கலைஞர்கள் போல, இந்தியாவின் தலைமை அமைச்சர் பிரம்மாண்டமான கோவில் சுற்றுகளில் பெரிய அங்க வஸ்திரத்தை தோள்களில் போட்டுக்கொண்டு, ஊடக வெளிச்சத்தின் நடுவே நடந்து செல்வதும் சிலைகளின் முன் மலர்களை தூவுவதும், விளக்குகளை ஏற்றுவதும், கண்களை மூடி அமர்ந்திருப்பதும் காட்சிகளாக மீண்டும் மீண்டும் ஊடகங்கள் ஒளிபரப்புகிறது.
தவம் மேற்கொள்ளும் எந்த ஒரு மனிதரும் இது போன்று விளம்பரப்படுத்திக் கொண்டது கிடையாது.
துறவிகளும், ஆட்சியாளும் மன்னர்களும் தவம் மேற்கொள்ளும் பொழுது தான் இருக்கும் இடத்தை யாருக்கும் அறிவிப்பது கிடையாது.
ஒரு செயலை செய்வதற்கு முன் மனவலிமை பெறுவதற்காக தவம் மேற்கொள்வதாக அறிஞர்கள் கூறியிருக்கிறார்கள்.
எண்ணமும் இயற்கையும் இணையும் புள்ளிதான் தவம் என்கிறது ஓகக் கலை. இடையூறற்ற இடத்தில் ஏற்படும் இந்த இணைப்புக்காக அமைதியாக காத்திருந்தனர் தவம் மேற்கொள்பவர்கள்.
இதற்கு முற்றிலும் முரணாக நாடகத்தனத்தோடு ஒளிப்பட கருவிகள் கண் சிமிட்டும் சத்தங்களுக்கு நடுவில் ஒய்யாரமாய் அமர்ந்து தவம் இருப்பதாகக் கூறுவது நகைப்பை ஏற்படுத்துகிறது.
தலைமை அமைச்சரின் இந்தச் செயலை வீர துறவி விவேகானந்தரின் தவத்தோடு ஒப்பிடுவது பெரும் பிழை.
தவ வேடத்தை கூட ஒழுக்கம் என்று இகழ்ந்துரைக்கிறது திருக்குறள்.
தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.
(திருக்குறள் 274)
கருத்துகள்
கருத்துரையிடுக