'முடங்கிப் போடும் மூட்டு வலி' காரணங்களும் தீர்வுகளும் - நூல் அறிமுகம்.



வயது மூப்பு என்பது வரமாக இருந்த காலம் மலையேறி வருகிறது. நாகரீக உலகில் வாழ்தல் என்பதே சுமையாக மாறியுள்ளது. 30 வயது கடந்து விட்டால் மூட்டுக்கு முட்டு வலி வாழ்வை ரணமாக்கி விடுகிறது.  


சூழலும் நமது உணவுப் பழக்கமும் வயோதிகத்தை இளமையிலேயே வரவழைத்து விடுகிறது. முன்னோர்கள் போற்றி வழங்கிய உடல் நலம் சார்ந்த முறைகளை முற்றிலும் மறந்துவிட்டு அவசர வாழ்வியலில் சிக்கி அவதிப்பட்டு வாழ்கிறோம். 


தமிழ்நாட்டில் ஒவ்வொரு தனி மனிதனுக்குமான சிக்கலாக மூட்டு வலி மாறி இருக்கிறது. தலை முதல் பாதம் வரை உடலை இணைத்தும் இயங்கியும் வரும் மூட்டுகள் முடிவில்லா வலியை நமக்கு தரும் பொழுது வழி தேடி அலைகிறோம். 


பதினோரு தலைப்புகளில் நமது பண்பாடு தொடங்கி மூட்டு வலியால் முடங்கிப் போகாமல் நீண்ட நாள் வாழ்ந்திட வாழ்த்து கூறுகிறது இந்த புத்தகம். 


எலும்பு முட நீக்கியல் சிறப்பு மருத்துவர் துரை நீலகண்டன் அவர்களின் படைப்புதான் இந்த நூல். இரண்டாவது பதிப்பை இன்னும் மெருகேற்றி தந்திருக்கிறார்.  


பக்கத்துக்கு பக்கம் படங்களோடு பாடம் நடத்துகிறார்.  


உட்காருவது, நடப்பது, சுமை தூக்குவது, வாகனங்களை ஓட்டுவது என வாழ்வில் ஒவ்வொரு நிகழ்வையும் குறிப்பிட்டு அப்பொழுது நாம் செய்யும் தவறுகளையும் சரியான முறைகளையும் சுட்டிக்காட்டுகிறார்.  


வருமுன் காப்பது வாழ்நாளை எல்லாம் சுகமாக்கும் என்பதை வகுத்துத் தருகிறார். வந்தபின் காத்திட நவீன மருத்துவ முறை வரை நம்பகத்தன்மையோடு விளக்குகிறார்.  


இன்று பலரும், ஆலோசனை வழங்குவதாகக் கூறி நோயாளிகளின் வேதனையைச் சோதனை கூடமாக மாற்றி விடுகிறார்கள். அறமற்ற இதழ்கள் தரமற்ற செய்திகளைப் பரப்பி நோயின் தன்மையை அதிகப்படுத்தி விடுகின்றன.  


நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை கிடைப்பதற்கு முன் முறையான ஆலோசனை கிடைப்பது மிகவும் அவசியம். அந்தப் பணியை இந்தப் புத்தகம் மிகச் சிறப்பாக செய்திருக்கிறது.  


இந்தப் புத்தகத்தின் முதல் பதிப்பு குறித்து நாம் கூறியதை மீண்டும் வாசகர்களுக்கு நினைவுபடுத்துகிறோம். அயர்ச்சி இல்லாமல் இந்தப் புத்தகத்தை எளிதில் வாசித்து விடலாம். ஒரே அமர்வில் முழுமூச்சாக படித்து முடித்து விடாமல் பகுதி பகுதியாக படிப்பது நல்லது.  


உடல் நலம் சார்ந்த பண்பாட்டை பயிற்சியின் மூலமாக மீட்டெடுக்க முனைந்து இருக்கிறது இந்த புத்தகம்.


முதல் பதிப்பு குறித்து மெய்ச்சுடர் வெளியிட்ட நூல் மதிப்புரை அட்டைப் பக்கத்தின் பின்பகுதியில் இடம்பெற்றுள்ளது. ஆசிரியருக்கும் பதிப்பகத்தாருக்கும் அன்பும் நன்றியும்.


செங்கனி பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்தப் புத்தகத்தை, உடல் நலம் சார்ந்த புனித நூலாகக் கருதி ஒவ்வொரு வீட்டிலும் வாங்கி படித்து பாதுகாக்க வேண்டும். 


மருத்துவர் துரை நீலகண்டன் அவர்களின் பிறந்த நாளான இன்று அவர் எழுதிய நூலினை வாசகர்களுக்கு மகிழ்வுடன் அறிமுகம் செய்கிறோம். 

மருத்துவர் துரை நீலகண்டன் அவர்களுக்கு மெய்ச்சுடரின் நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள். 

வாழ்த்துகளுடன், 

ஆசிரியர், மெய்ச்சுடர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா