வாட்ஸ் அப் குழு உருவாக்கப்பட்டதன் ஓராண்டு நிறைவு விழா



பேராவூரணி பகுதியைச் சேர்ந்த பேராசிரியர்கள், ஆசிரியர்கள், இதழாளர்கள், எழுத்தாளர்கள், அரசு அதிகாரிகள், வணிகர்கள், கல்வியாளர்கள், இல்லத்தரசிகள், மாணவர்கள் உள்ளடக்கிய கெழுதகையீர் என்ற வாட்ஸ் அப் குழு கடந்த ஓராண்டு காலமாக இயங்கி வருகிறது. குழுவில் அனைவரும் குடும்பமாக இணைந்துள்ளனர்.   


கவிதை, பாட்டு, இலக்கியம், கதை, மாணவர்களின் ஓவியம், சமூகம் சார்ந்த சிந்தனைகள் என ஒவ்வொருவரும் இக்குழுவில் பகிர்ந்து கொண்டுள்ளனர். 


குழு உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து வாசிப்பு கூட்டங்களை நடத்துவது, சிறப்பிடம் பெற்ற பள்ளி மாணவர்களை வீடுகளில் சென்று சந்திப்பது, ஒவ்வொருவரின் இனிய பிறந்தநாளையும் குடும்ப விழாவாக கொண்டாடுவது, சமத்துவ பொங்கல் விழா நடத்துவது, ரமலான் காலங்களில் பள்ளிவாசல் சென்று நோன்பு திறக்கும் நிகழ்வில் கலந்து கொள்வது, கிறிஸ்மஸ் விழாவில் பங்கேற்பது, குழந்தைகளோடு கீழடி அருங்காட்சியகம் சென்று வந்தது, புத்தகத் திருவிழாக்களில் பங்கேற்பது, பள்ளிகளில் மாணவர்களோடு பிறந்தநாள் விழாக்களை கொண்டாடுவது என கடந்த ஓராண்டு காலமாக இக்குழுவை சேர்ந்தவர்கள் ஒரே குடும்பமாக பயணித்துள்ளனர்.  


குழு உருவாக்கப்பட்டதன் ஓராண்டு நிறைவை கொண்டாடும் வகையில் குழுவில் பயணிக்கும் மாணவர்கள் கடந்த கால நிகழ்வுகளை காணொளியாக தயாரித்து வெளியிட்டனர்.   


குழு உறுப்பினர்கள் முகங்களை அடுக்கி குழுவின் பெயர் தாங்கிய பதாகையை உருவாக்கினர்.  


ஓராண்டு நிறைவை ஓரிடத்தில் கூடி தேநீர் விருந்துடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். நிகழ்வில் கலந்து கொள்ள முடியாதவர்கள் காணொளி வாயிலாக கலந்து கொண்டு மகிழ்ந்தனர்.


நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பேராவூரணி அரசு கல்லூரி முதல்வர் முனைவர் இரா திருமலைச்சாமி அவர்கள் தன்னையும் இந்தக் குழுவில் இணைத்துக் கொள்ள விழாவிலேயே கோரிக்கையை விடுத்தார்.  


சாதி, மதம், கட்சி, பகுதிகளைக் கடந்து பயணிக்கிறது கெழுதகையீர் குழு. குடும்பமாக விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் இக்குழுவின் உயர்ந்த இலக்குகளை எளிதில் பற்றிக் கொள்கிறார்கள்.  


வாட்ஸ் அப் குழுவின் ஓராண்டு நிறைவு விழாவை கொண்டாடி, நிகழ்வை பேசு பொருளாக மாற்றியுள்ளனர்.


குடும்ப உறுப்பினர்கள் குழுவாக செயல்படுவதை பார்த்திருக்கிறோம், உறவுக்காரர்கள் ஒன்று கூடி குழு உருவாக்கிக் கொள்வதை பார்த்திருக்கிறோம், ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள், ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள் ஒன்று கூடி குழுவாக இயங்குவதை பார்த்திருக்கிறோம், நிறுவனம் சார்ந்து, பள்ளி, கல்லூரி சார்ந்து குழுக்கள் இயங்கி வருகிறது. மேற்கண்ட எந்த எல்லைகளையும் அமைத்துக் கொள்ளாமல் ஒத்த சிந்தனை கொண்டவர்கள் குடும்பமாக இணைந்து உருவாக்கிக் கொண்ட இந்த குழு சமூகத்திற்கான முன்னுதாரணம். மெய்ச்சுடர் நெஞ்சார வாழ்த்துகிறது.




















கருத்துகள்

  1. வாழ்த்துக்கள்
    தொடரட்டும் உங்கள் வெற்றி.

    பதிலளிநீக்கு
  2. மெய்ச்சுடர் மெய்யாக சுடர் விட்டு பிராகசிக்கட் டும் ...!!!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா