எண்ணும் எழுத்தும்
கல்வி பரவலாக்கப்பட்டதால் தமிழ்நாட்டின் தலையெழுத்து மாறியுள்ளது.
ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு தொடக்கப்பள்ளி என்ற நிலை தமிழ்நாட்டை தலை நிமிர வைத்திருக்கிறது.
ஐந்து கிலோ மீட்டர் தொலைவை எட்டிப் பிடிக்கும் நிலையில் உள்ள அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகள் ஊரகப்பகுதி மாணவர்களை உயர்கல்விக்கு தகுதிப்படுத்தி வருகிறது.
கல்வி என்னும் அருமருந்து அறியாமை என்ற நோயை அறவே அகற்றியுள்ளது.
மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகளுக்கான அரசு உயர் கல்வி நிறுவனங்களில், அரசுப்பள்ளி மாணவர்கள் படிப்பைத் தொடரமுடியாதபடி ஒன்றிய அரசு நீட், கியூட் போன்ற தகுதித் தேர்வைத் திணித்த பிறகும் தமிழ்நாட்டு அரசின் நிலைப்பாடு ஏழை அரசு பள்ளி மாணவர்களுக்கானதாகவே தொடர்ந்தது வருகிறது.
அதற்குக் காரணம் கல்வி என்பதுதான் மாணவர்களை தகுதிப் படுத்த வேண்டும். கல்வியை பெறுவதற்கு ஏன் தகுதி தேர்வு? என்ற முழக்கம் தமிழ்நாட்டில் மட்டும்தான் கேட்கிறது.
நீட் என்ற தகுதி தேர்வை தொடர்ந்து எதிர்த்து வருவதோடு மட்டுமல்லாமல் உயர்கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஏழரை விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கி அரசு பள்ளி மாணவர்கள் உயர்கல்வி பயில வழியமைத்து தந்தது தமிழ்நாடு அரசு. அரசு தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் இந்த இடஒதுக்கீடு மிகவும் குறைவானது என்றாலும் குறைந்த எண்ணிக்கையிலாவது அரசுப்பள்ளி மாணவர்கள் உயர்கல்வியை எட்டிப்பிடிக்க இந்த இடஒதுக்கீடு காரணமாக அமைந்துள்ளதால் நாம் அதை வரவேற்கிறோம்.
கொரோனா கொடுந்துயர் கல்வியிலிருந்து மாணவர்களை அன்னியப் படுத்தி இருந்தாலும் தமிழ்நாடு அரசின் திட்டங்கள் அனைத்தும் அனைவருக்குமான கல்வியை உறுதி செய்து கொண்டே இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் எண்ணும் எழுத்தும் திட்டம், தொடக்கப் பள்ளி ஆசிரியர்களிடமும் மாணவர்களிடமும் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தத் திட்டம் எண்களையும் எழுத்துக்களையும் எளிமைப்படுத்தி மாணவர்களிடம் கொண்டு சேர்த்து இருக்கிறது. மூன்றாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் மொழியையும் கணிதத்தையும் முழுதும் அறிந்து கொள்ள இத்திட்டம் பேரு உதவியாக இருப்பதாக திட்டத்தைச் செயல்படுத்தும் ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.
கற்றல் முறையில் மாற்றத்தை இத்திட்டம் உருவாக்கி இருக்கிறது. விளையாட்டின் வழியில் கற்றலை மாற்றி இருக்கிறது. எண்களையும் எழுத்துக்களையும் கொண்டு வித விதமாய் தயாரிக்கப்பட்ட கலைப் பொருட்கள் மாணவர்களிடம் மகிழ்ச்சியையும் கற்றலையும் அதிகரித்திருக்கிறது.
பேராவூரணி கிழக்கு, வடகிழக்கு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகளில் பெற்றோர்களுக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்த கற்றல் கலைப் படைப்புகளை பெற்றோர்கள் இன்று 21-03-2023 பார்வையிட்டனர். மாணவர்களிடம் அப்பொருட்கள் உருவாக்கி இருக்கும் மாற்றத்தை பெற்றோர்கள் நேரடியாக கண்டு மகிழ்ந்தனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக