கல்வி, அதிகாரம், பதவி அனைத்தும் மக்களுக்கானதாக இருக்கும் பொழுது தான் சிறப்படைகிறது - முப்பெரும் விழாவில் வட்டாட்சியர் பேச்சு!
வெற்றியாளர்களை வாழ்த்தும் விழா!
கொடையாளர்களை கொண்டாடும் விழா! பயிற்சிக்கூடம் இரண்டாம் ஆண்டில் அடிவைக்கும் விழா! என
திருவள்ளுவர் கல்விக்கழகம் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.
பேராவூரணி நகர வர்த்தக கழக கட்டிடத்தில் நடைபெற்ற இந்த விழாவில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சியில் இணைந்து பயின்று நீதிமன்ற பணி வாய்ப்பை பெற்ற சுபா, குரூப் 2 தொடக்கநிலை தேர்வில் வென்று முதன்மை தேர்வுக்கு தகுதி பெற்ற அருணாதேவி, புவனேஸ்வரி ஆகிய மாணவர்கள் பாராட்ட பெற்றனர்.
இட நெருக்கடியால் மாணவர்கள் பயிற்சி பெற முடியாமல் அவதியுற்று வந்த நிலையில் வர்த்தகர்க் கழக கட்டிடத்தில் பயிற்சி மையம் தொடர்ந்து செயல்பட உரிய முயற்சிகள் மேற்கொண்ட பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் அவர்களுக்கும் திருவள்ளுவர் கல்விக்கழகத்தோடு இணைந்து கொண்டு மாணவர்கள் நலனில் பங்கேற்ற நகர வர்த்தகர்க் கழக கட்டுப்பாட்டு குழு உறுப்பினர்கள் ச.கந்தப்பன், க.அன்பழகன், மருத்துவர் மு.சீனிவாசன் ஆகியோருக்கு நிகழ்வில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
ஓராண்டாக நடைபெற்று வரும் இந்தப் பயிற்சி மையத்திற்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்த கொடையாளர்கள்
பணி நிறைவு பெற்ற செவிலியர் தனலட்சுமி, சுப நற்கிள்ளி, பொறியாளர் சர்வம் சரவணன், தோழர் செ.சிவக்குமார், செ.கருப்பசாமி, ஜே. சேக் தாவூத், தட்சிணாமூர்த்தி, சா.ரபிக்அஹமது, த.அருண், இலக்கியசீலன், சமையல் கலைஞர் சரவணன், மாணிக்கவாசகம், சௌந்தர்ராஜன் ஆகியோருக்கு நிகழ்வில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
மக்கள் மருத்துவர் துரை. நீலகண்டன் மாணவர்களையும் ஆசிரியர்களையும் கொடையாளர்களையும் வாழ்த்தி பேசினார்.
தோழர் ஆறு. நீலகண்டன் அரசுப் பணி வாய்ப்பை பெற்றவர்கள் பயிற்சி பெறும் மாணவர்களை வழிநடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். அரசுப் பணி வாய்ப்பை பெற்று இலவசமாக மாணவர்களுக்கு பயிற்சி வழங்கும் வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகளை வாழ்த்தி பேசினார்.
"சேவை செய்வதை விரும்பிச் செய்ய வேண்டும். விருப்பமுடன் படிக்கும் பொழுது அச்செயல் எளிமையாக இருக்கும். மூன்றாக இருக்கும் வெற்றியாளர் எண்ணிக்கை 30, 300 என்று உயர்ந்து கொண்டே செல்ல வேண்டும். வெற்றியாளர்களை கொண்டாடும் ஒவ்வொரு விழாவிலும் நானும் கலந்து கொள்வேன்" என்று வாழ்த்துரை வழங்கினார் பேராவூரணி எஸ்பிஐ முதன்மை மேலாளர் ராகவன் சூரியேந்திரன்.
"கிடைக்கும் கல்வி, அதிகாரம், பதவி அனைத்தும் மக்களுக்கானதாக இருக்கும் பொழுது தான் சிறப்படைகிறது. வாய்ப்புகள் மறுக்கப்பட்ட எளியவர்களுக்கு வாய்ப்புகளை வழங்க ஒவ்வொருவரும் முயற்சி செய்ய வேண்டும். அப்பொழுதுதான் எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கும் நிலை ஏற்படும். அதிகாரத்தில் உள்ளவர்களும் பதவியைப் பெற்றவர்களும் மக்களுக்கானவர்களாக இருக்கும் பொழுது அவர்களுக்கு மகிழ்ச்சியும், மன அமைதியும், சிறப்பும் கிடைக்கும்" என்றார் பேராவூரணி வட்டாட்சியர் த. சுகுமார்.
தனது அழகு தமிழால் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து, நிகழ்வை தொகுத்து வழங்கினார் முனைவர் பா.சண்முகப்பிரியா.
முன்னதாக மாணவி தன்யஸ்ரீ, பாரதிமித்ரா ஆகியோரின் நடன நிகழ்வு காண்பவர்களை கவர்ந்தது. மாணவர்கள் இறையன்பு, ஐனிக்பிரேமா, முகமது அப்ராஸ் ஆகியோர் தங்களது ஈர்க்கும் குரலால் பாடல்கள் பாடி பரவசப்படுத்தினர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை திருவள்ளுவர் கல்விக்கழக பொறுப்பாளர்கள் மெய்ச்சுடர் நா.வெங்கடேசன், த.பழனிவேல், ரெ. சந்தோஷ், பாரதி ந. அமரேந்திரன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக